அருள்மிகு மாணிக்க விநாயகர் துதி
மாமலை மாணிக்க விநாயகனே - உன்
மலரடி தொழுது தினம் பணிவேனே (மா)
கலை பல வளரும் காவிரிக் கரை வாழ
நில பல கடந்து நிலையாய் அமர்ந்தவனே (மா)
அழகன் மாலவனை வீடணன் கொண்டு செல்ல
அந்தணச் சிறுவனாய் அவனை நீ எதிர் கொள்ள
மாலைப் பூசை முடித்து மன்னவன் திரும்பு முன்னே
மாலையாம் பொன்னியிடை மாமனைக் கோவில் வைத்தாய் (மா)
கோபம் கொண்ட வீடணன் வேகமாய்த் துரத்த
கோபம் தா ளாமல் உன் சிரந்தனில் குட்ட
மாயவன் மருகன் நீயென்றே உணர்த்த
அதனால் அவனும், இந்த உலகும் உய்ய (மா)
************
அலைவாய்க் குமரனின் அன்னையவள்
ஆலவாய்
தனிலே அரசாள,
அலையும் மனதை அய்யனவன்
ஆனைக்காவில் அடக்கிடவே,
கலையா அருளைத் தருவதிலே
கடலாய் இருக்கும் கணபதியும்
நிலையாய் அமர்ந்தான் மலைமீதில்
நிம்மதிக்கு இனிமேல் குறைவில்லை...!
***********
சிவபெருமான் துதி
தாயும் ஆனாய்..! தந்தையுமானாய்..!
வாயும் மணக்குதே.. ஐயனைப் பாடவே..( தா)
தவித்த பெண்ணுக்கு மருத்துவம் பார்த்தாய்
தவிக்கும் எங்கள் குறையையும் தீர்ப்பாய்.. ( தா )
மகனுடன் அமர்ந்தாய் மாமலை மீதில்
மகவெனைப் பாராய் மகிழ்ந்தே நீயும்
புகழ் உனை நாடிப் புகழுடன் வாழும் - எம்
இகழும் மறையும் இறை நீ வாழி....!
-------------------------
திருமால் துதி
அரங்கத்தில் வாழும் அழகு தேவா - என் மன
அரங்கத்தில் வாழ விரும்பியே வா... வா..- ( அ )
உள்ளத்தில் உன்னை ஏற்றி வைக்க
கள்ளத்தை ஒழித்தோம் கண்ணபிரானே.. - ( அ )
பாவனைத் துயில் கொண்ட பரந்தாமா - எமக்கு
ஆவன செய்வாய் எம் பரமாத்மா ...!
சாவன , வாழ்வன அனைத்தும் உன் ஆத்மா
" வா " வென நீ அழைத்தால் உய்யும் எம் ஆத்மா- (அ)
-------------------------------
முருகையா ........ மனம் உருகையா
உருகையா மனம் முருகையா தினம்
உருகிடுதே மனம் உன்னாலே
குருவையா.... ஞான குரு ஐயா நீயும் !
ஜென்மம் எடுத்து நான் கண்டது என்ன... !
தினமும் தவிப்பதென்றி வேறென்ன..?
வன்மம் தீரவில்லை , வழக்கும் முடியவில்லை
வந்தே தீர்த்தருள் .... வயலூரா !
" என் பிள்ளை " என்றுரைக்க எனக்கோர் மகவில்லை
தந்ததையும் பறித்தாய் தணிகாசலா...
உன்றனையே நினைந்து உலவிடும் ஏழையிடம்
ஒரு மகவாய் வருவாய் உரு அசலாய்..!
சொல்லம்பு தாங்கவில்லை சுருண்டே விழுகின்றேன்
சுடர்
வடிவேலா கண் திறவாய் ..!
வேலொன்று கை கொண்டு வினைகளை நீ களைவாய்
ஏனென்று என்றைக்கு என்னை நீ கேட்பாய்..?
08 - 07 - 1979
**************
சுவாமியே சரணம் ஐயப்பா!
கானகத்தே சென்றாலும், கடும்புலியே வந்தாலும்,
காவலாக வருவானாம், கருணைகொண்டு காப்பானாம்!
கண்கள் மூன்று கொண்ட நீலகண்டனுக்கு மகனாம்!
காலங்கள் மாறினாலும் மாறாது நிற்பவனாம்!
மாலவன், மகேசன் மையலில் பிறந்தவன்;
வேலவன் சோதரன், ஐயங்கள் போக்குவான்.
காலங்கள் கடந்தவன், கணேசனுக்கு இளையவன்
ஞாலத்தைக் காத்திடும் ஞானத்தில் உயர்ந்தவன்!
மகிஷிக்கு மர்த்தனன்! மக்களுக்கு நர்த்தனன்!
மகிமைகள் புரிந்தவன், மகிழ்ச்சிகள் தருபவன்!
மனங்களில் நிறைந்தவன், மதியீனம் மாற்றுவான்!
மனதினில் நினைத்தே மனதாரப் போற்றுவோம்!
தாயின் தாங்கா தலைவலி போக்கிட
தாவியே தயங்காமல் புலிமேல் அமர்ந்தான்!
தாயோ அரசி, தந்தையோ அரசன்!
தானோ இருந்தான், தன்னந்தனியாக!
"வா"வென அழைத்தால், வாவரின் தோழன்
வந்தே அருள்வான்! வளமையைத் தருவான்!
வானகத் தேவரும், மண்ணக மாந்தரும்
வாஞ்சையில் வணங்கும் வாத்சல்யம் மிகுந்தோன்!
மோகினி பாலன் மோகங்கள் தவிர்ப்பான்;
கோபங்கள் குறைப்பான், தாகங்கள் தடுப்பான்.
வேகத்தைக் குறைப்பான், விவேகத்தை நிறைப்பான்!
யோகங்கள் அளிப்பான், பாவங்கள் அழிப்பான்!
சுவாமியே சரணம் ஐயப்பா!
**********
அன்னையின் ஆற்றாமை
15 - 07 - 1974
தேடாமல் நீ ஏன் வந்தாய் - எமை
நாடாமல் நீ ஏன் சென்றாய்..?
கேளாமல் பிறந்து விட்டாய் - துயர்
தாளாமல் தவிக்க விட்டாய்.. !
முந்தைய பிறப்பின் முதிர்ந்த தவத்தால்
இன்றைய பிறப்பில் கிடைத்தது என் தெய்வம் - அந்த
தெய்வந்தான் உன் தந்தை ...
உனக்கேன் புரியவில்லை..?
உடனே சென்று விட்டாய் - என்
உயிர்த் தெய்வத்தின் ஓவியமே...!
ஆறோட்டம் போல் ஆசைகள் வளர்த்தாய்
ஆறோட்டத்தில் சென்றேன் கலந்தாய்
அன்னை நெஞ்சின் ஆசைகளை
அழித்தே மறைந்து விட்டாய்...
அதில் அமைதியைக் கண்டு விட்டாய் - எந்தன்
அமைதியையே பறித்து விட்டாய்...
ஆனந்த வாழ்வின் அழகிய சின்னம்
ஆண்டவன் வைத்தான் அதன் மேல் கன்னம்
அவன் விருப்பம் அதுவென்றால்
அவனைத் தடுப்பவர் யார் ...?
அவனே அன்று தந்தான்...அதை
அவனே இன்று எடுத்துக் கொண்டான்...!
ஆயிரம் விண்மீன் வானில் வரலாம்
ஆயினும் அவைகள் வெள்ளி நிலவோ..?
ஆயிரந்தான் மழலைச் செல்வம் என்
ஆயுளில் தோன்றிடலாம்
ஆயினும் அவையெல்லாம் என்
ஆருயிரே நீ ஆகுமோ.... ?
10
- 07 - 1974
<<<<<<>>>>>
இளவேனில் கால இளந்தளிர் போல் பிறந்தாய்
இலையுதிர் காலச் சருகது போல் உதிர்ந்தாய்
இடி மழை மின்னல் இதயத்தில் வளர்த்தாய்
இளகிய நெஞ்சில் ஏக்கத்தை விதைத்தாய்..!
23
- 07 - 1974
<<<<<<>>>>>
பூப்போலே நீ பிறந்தாய்
மகிழ்ந்திருந்தேன் கண்ணே..!
பூப்போலே உதிர்ந்து விட்டாய்
வருந்தி நின்றேன் கண்ணே..!
காய்க்காத மரமென்ற
கடுஞ்சொல் நான் கேட்டிடவோ..?
வாய்க்காத வாய்ப்பை எண்ணி
வாழ் நாளில் சோர்ந்திடவோ...?
வேண்டுமென்று கேட்கவில்லை
விரைந்து வந்தாய் நீயும்..
வந்தது போல் மறைந்து விட்டாய்
வருந்தி நின்றேன் நானும்..
வேண்டுமென்று கேட்டு இன்று
விரதம் காக்கும் எந்தன்
வேண்டுதலை என்று அந்த
வேந்தனும் கேட்பானோ..?
வேந்தனும் கேட்பானோ..?
மலடி என்றே பேரெடுத்து
மயங்கி நிற்கும் அன்னை..
மனதினிலே சுமையுடனே
மருண்டு விட்டாள் உண்மை ..
மலர்களிலே உயர்ந்து நிற்கும்
மல்லிகையாய் உன்னை
மனங்கசிந்து தேடுகிறாள்...
மகிழ்ந்து வாராய் கண்ணே..
மகிழ்ந்து வாராய் கண்ணே..!
பிறருக்கென்று அளிப்பதன்றி
பிறிதொன்றும் அறியார் -தந்தை
உறவுக்கென்று உதவுதன்றி
உள்ளொன்றும் ஒளியார்..
சிறிதேனும் அவர் துயரம்
சிந்தையிலே கொண்டு
உறவாக ஓடி வாராய்...
உருகும் நிலை கண்டு...
உருகும் நிலை கண்டு...!
-
" பூவாகிக் காயாகி.." மெட்டு.
***************
காலத்திலே பெற்றெடுத்தாள்
அன்னையடா அன்னை....
காலனுக்கே பறி கொடுத்தாள்
உன்னையடா உன்னை...
எதிர்பார்த்தாள் ... ஏமாந்தாள்...
பொன்னையடா பொன்னை..
ஏக்கத்திலே வாழு(டு)கின்றாள்
காணாமல் உன்னை...!
தேனினும் இனிய உன் குரல் கேட்க
தந்தை தனித்திருக்க...
மானினும் கரிய உன் விழி நோக்க
தாயும் தவித்திருக்க...
எங்களைப் பிரிந்து எங்கோ சென்றாய்
என்ன குறை மகனே...?
எங்கள் கண்கள் பொழியும்
கண்ணீர் மழையைக்
காணவே மனமில்லையோ...?
காணவே மனமில்லையோ...?
மழலைச் செல்வம் மாறாச் செல்வம்
என்பார் உலகத்தார்...
சுழலிடைத் துரும்பாய் எம்மை விடுத்தே
மகனே ஏன் சென்றாய்...?
அழலிடைத் தளிராய் , புயலிடை மலராய்
அன்னை எந்தன் நிலை...
விழலிடை இறைத்த நீரோ கண்மணி
உனக்கே எங்கள் விலை...?
உனக்கே எங்கள் விலை...?
- "காதலிலே பற்று வைத்தாள்.." மெட்டு.
************