அவரை முதலில் வணங்குவதன் மூலம் அவரின் அனுமதி பெற்றே நாம் சிவனைத் தரிசிக்கச் செல்கிறோம் என்பது ஐதீகம்.
பதினெட்டு சித்தர்களில் முக்கியமான ஒருவராகக் கருதப்படும் வணக்கத்துக்குரிய நந்தி தேவரைப் பற்றி வித்தியாசமான விஷயம் ஒன்றைப் படித்தேன். அதையே இந்தப் பதிவில் உங்களுடன் பகிர்கிறேன் நண்பர்களே !நந்தி தேவர் வெறும் உருவம் அல்ல.
காத்திருப்பு என்பதற்கு அவர் ஒரு குறியீடு !
ஏனெனில் பாரதக் கலாச்சாரத்தில் காத்திருத்தல் என்பது உயர்ந்த அறத்துடன் கூடிய ஒரு நல்லொழுக்கம்.
அதோடு சும்மா அமர்ந்திருந்து காத்திருத்தல் என்பது ஒரு தியான நிலைக்கு ஒப்பானது.
சிவபெருமான் நாளையே வந்து விடுவார் என்று நந்தியம் பகவான் எதிர்பார்க்கவில்லை.அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை. அதாவது Nandhi Bhagavan is not expecting or anticipating anything.
அவர் காத்திருக்கிறார்… காத்துக்கொண்டே இருப்பார்.
அது ஒரு வகையில் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் .
நாம் கோவிலுக்குள் போகும் முன் அந்த நந்தியம் பகவானின் அந்தக் குணத்தை நமக்குள் ஆழமாகப் பதித்துக் கொள்ள வேண்டும்.
நேராகச் சொர்க்கத்திற்குப் போக வேண்டும் என்ற எண்ணம் : அல்லது அது வேண்டும்.. இது வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுதல் இல்லாமல் கோவிலுக்குள் நந்தி தேவர் போல அமரப் பழக வேண்டும்.
அதாவது வணக்கத்துக்குரிய அருணகிரிநாதர் கந்தர் அநுபூதியில் பாடுகிறார் பாருங்கள்..
“ சும்மா இரு சொல்லற வென்றலுமே
அம்மா பொருளொன்றும் அறிந்திலனே.. “
முருகனிடம் சந்தேகம் கேட்கிறார் அருணகிரியார்..“ சும்மா இருன்னு சொல்லிட்டுப் போய்ட்டே.. எப்படி எந்த வகையில் சும்மா இருப்பது.. எனக்குப் புரியவில்லையே.. முருகா !”
நம்மில் நிறையப் பேர் தியானம் என்பது ஒரு வகையான செயல்பாடு அதாவது activity என்று நினைக்கிறோம் .
அதாவது “ நான் தியானம் செய்யப் போகணும்.. நேரமாச்சு “ என்று சொல்வதைக் கேட்டிருப்போம்..
அல்ல அன்பர்களே !
அது ஒரு தகுதி.. மிகப்பெரிய தகுதி !
இந்த அடிப்படை வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பிரார்த்தனை அல்லது வழிபாடு மூலம் நாம் ஆண்டவனிடம் பேச முயற்சிக்கிறோம்..
ஆனால் தியானத்தின் மூலம் ஆண்டவன் பேசுவதை நாம் கேட்க விழைகிறோம்.
அதாவது Prayer means We are trying to talk to God.. Meditation means We are willing to listen to God.
அதாவது எது எப்போதும் இருக்கிறதோ.. எது இயற்கையின் ஆக முக்கியமான படைப்போ.. அது பேசுவதைக் கேட்க விழைகிறோம்.
நமக்குப் பேச ஒன்றுமே இல்லை.. கேட்க.. கவனிக்க வேண்டும்.. அவ்வளவுதான் !
இதுதான் நந்தியின் தன்மை.. குணாதிசயம் எல்லாம்..
அமர்ந்திருக்கிறார்.. எச்சரிக்கையாகவும் இருக்கிறார்.
அந்த எச்சரிக்கை (alertness) தான் மிக முக்கியமானது.. விழிப்புடன் இருக்கிறார்.. உறங்கவில்லை.அவர் செயலற்றவராக அமர்ந்திருக்கவில்லை .
மிகுந்த செயலாற்றலுடன்.. மிகுந்த எச்சரிக்கையுடன்.. மிகுந்த உயிர்ப்புடன் அமர்ந்து இருக்கிறார்.
அதுதான் தியானம்.
சும்மா இருப்பதே சுகம் என்று இதைத்தான் நம் பெரியவர்கள் சொல்லி வைத்துள்ளார்களோ ?
நலமே விழைவு : நலமே விளைவு !