Tuesday, 6 May 2014

முருகன் புஜங்கப் பாமாலை

      ஶ்ரீ சுப்பிரமணிய  புஜங்கப்                          பாமாலை 
               
     ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது.        

       தமிழில் திரு.கலாபாரதி

  ஸ்ரீ சுப்ரமண்ய  புஜங்கத்தைப் பற்றிச்  சிறு விளக்கம்.

       ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதரின் அறிவாற்றலையும், யோகம், தவ மகிமைகளையும் கண்டு பொறாமை கொண்ட அபிநவ குப்தர் என்ற புலவர், ஆசாரிய சுவாமிகள் மீது ஏவல் செய்ததன் விளைவாக சுவாமிகள் காச நோயால் பீடிக்கப்பட்டார்

வியாதியின் தொல்லை தாங்க முடியாமல் தவிக்கும்போது ஒருநாள் சிவபெருமான் கனவில்தோன்றி, திருச்செந்தூர் சென்று தன் இளைய திருமகனாம் செந்திற் குமாரனைத் தரிசித்து வணங்கி வழிபட்டால், வந்த வினைகளும், பிணிகளும் நீங்கும் என்று உரைத்துத் திருநீறு அருளி மறைந்தார்

திருநீறைப் பூசிக்கொண்டு விழித்தெழுந்தார் சுவாமிகள். பிறகு தமது யோக மகிமையால் காலையில் திருச்செந்தூர் அடைந்தார்.
            அங்கு முருகனைத் தரிசிக்கும்போது ஆதிசேடன் பூஜை செய்து வருவதைக் கண்ணுற்ற ஆசாரியர், உடனே "பாம்பு" என்று பொருள்படும்படி தலைப்பு அமைத்து "சுப்ரமண்ய புஜங்கம்" என்ற 33 செய்யுள்கள் கொண்ட வடமொழிக் காவியத்தைப் படைத்து, முருகனுக்குப் பாமாலையாகச் சூட்டினார்.
            திருச்செந்தூர் முருகனின் முன்னிலையில் ஆதிசங்கரர் வடமொழியில் இயற்றிய பாமாலைதான் சுப்ரமண்ய புஜங்கம்

"புஜங்கம்" என்பது வடமொழியில் ஒருவித யாப்பைக் குறிப்பது.  

"புஜங்கம்" என்றால் "தோளால் நகர்ந்து செல்லக்கூடிய பாம்பு" என்றும் பொருளாகும்

அதன் கவிச் சொற்களும் சந்தமும் பாம்பு வளைந்து செல்வதுபோல் அமைந்திருக்கும்.
            தமிழிலும் புஜங்கத்தைப் படித்துப் புரிந்துகொண்டு பாராயணம் செய்து, நற்பயன்கள் அடைந்து மேன்மையுற வேண்டித் தமிழாக்கம் செய்யப்பட்டு தமிழ் கவிதைகளாகத் தரப்பட்டிருக்கின்றன.
             திருச்செந்தூர் முருகன் அருள் பெறுவோமாக!

              விநாயகர் காப்பு 

காலமெல்லாம் பாலனவன் கணேசன் திருவுடையோன்
சூலமொடு நான்முகனும் சுரனொடு ஐம்முகத்தோன்
சீலமிகு திருமாலும் தேடிவரும் கரிமுகத்தோன்
மூலவினை மலை நீக்கி முழுச்செல்வம் அருள்புரிவான்.                        
                       நூல்         

கவியறியேன் வசனமோ கண்டறியேன் என்
செவியறியாத ஒலியெதையும் செப்பியும் அறியேன் - பொருள்
புவிபுகழும் ஆறுமுகா! உன் புனிதமுகம் நோக்குங்கால்
தெவிட்டாத தேன் தமிழ்ச்சொல் தெளிந்து வரும் நெஞ்சிருந்து.     1

உலகமெல்லாம் காக்கும் கந்தா! உளம் மகிழும் ஒளி உருவே!
நலமுடை சான்றோர் நெஞ்சில் நாளெல்லாம் வாழும் தேவே!
பலர் போற்றும் சிவன் மைந்தா! பக்திமிகு அந்தணர்தம்
குலதேவா ! வேதத்தின்தத்துவமே !கோலமயில் வாகனனே!பணிகின்றேன்2

செந்திற் கடலுடையோன் சேவடி துணையென்றே
வந்தவர்தம் பிறவியெனும் வரையிலாக் கடலினையே
கந்தன் திருவருளால் கடந்திடுவர் பராசக்தி
மைந்தன் பதம் பணிவோம் மால்மருகன் சொன்னபடி.       3

"ஓங்கி உயர்ந்தடிக்கும் ஒய்யாரக் கடலலையும்
ஆங்கென் அடிபணிந்து அமர்ந்திடுமாம் விந்தைபோல
ஏங்கும் கவலையோடு 
என் முன்னே வந்திட்டால்
நீங்கும் தீங்"கென்பான் நெஞ்சிலுறை செந்தூரான்.            4

"எந்தன் மலை வந்தவர்கள் 
எந்தை மலை போனவர்கள்
கந்தமலை வந்தவர்கள் கைலைக்கு வந்தோ"ரென்பான்
சிந்துமொளி மதிமுகத்தோன் செந்திலுறை ஆறுமுகம்
செந்தாமரை மலரொக்கும் சேவடிகள்தாம் வாழ்க!           5

எத்தனையோ பாவமெல்லாம் எளிதினிலே போக்கவல்ல
சித்தர் வாழ் கந்தமலை சீரலைவாய் ஓரத்திலே
புத்தொளியாய்க் குகையினிலே புனித குகன் வீற்றுள்ளான்
புத்துயிராய் விளங்குமவன் பொன்னடிகள் போற்றிடுவோம்.       6

மாணிக்கக் கட்டிலென்ன மாசறு பொற் கோயிலென்ன
நாணக் கண்டிடலாம் நாற்கோடி ரவி ஒளியும்
வானத்துத் தேவதேவன் வரம் வேண்டத்தான் தருவான்
காணக் கண்குளிரும் கார்த்திகேயன் தாள் பணிவோம்.              7

செந்நிறப் பாதமலர் சிந்தும் தேனமுதமலர்
இன்னொலி பாதசரம் 
இன்ப மயமாக்கும் மனம்
உன் நினைவில் நினைவாக உலவிவரும் வண்டெனவே
என்னிதயம் இருந்தங்கே எப்போதும் களித்திடுமே.                8

தங்கமய ஒளிவீசும் தகதகக்கும் பட்டாடை
அங்க அசைவினிலே அரைஞாணும் ஒட்டியாணம்
கிண்கிணிக்கும் சலங்கையொலி கிறங்கவைக்கும் இடுப்பழகும்
எங்கும் ஒளிவடிவாம் எழில் முருகன் நாம் பணிவோம்.    9       

மங்கை குறவள்ளிதனை மால்மருகன் அணைத்ததுமே
கொங்கை அழகிட்ட குங்குமமும் மார்புறைந்தே
அங்கும் செவ்வொளி வீச அன்பர் தமை ஆட்கொள்வான்
தங்கநிற மார்புடையோன் தாரகனைக் கொன்றவனாம்.   10        
சூரபதுமனைக் கொன்றே சுரன் பகை தான் வென்றே
தூர யமனை ஓட்டி துண்டித்த யானைதந்தம்
பாருலகம் படைத்தவனை பணிய வைத்த வேலவனை
சேரும் உயிர்காக்கச் செந்தூரான் கரம்துணையே.                 11

பனிக்காலச் சந்திரனும் பருவமெல்லாம் நிறைந்தாலோ
தனித்தாறு முழுமதியின் தண்ணொளிபோல் ஆறுமுகம்
தனக்குள்ளே மாசுற்றும் தரணியிலே தோணும் மதி
கனிக்காக வலம் வந்த கந்தனுக்கு நிகராமோ?                    12

அன்னப் பறவைகளோ ஆறுமுகா புன்சிரிப்பு ?
இன்னமுத இதழ்‌ அழகால் இன்சொற்கள் தாம் வருமே..
வண்ணமலர்த் தாமரையில் வண்டுலவும் விழியழகை
என்ன சொல்ல சிவபாலா ? எழில் தாமரை முகனே !              13

கண்விழிகள் பன்னிரண்டும் காதுவரை நீண்டிருக்கும்
நின் கருணைப் பெருவெள்ள நீர்த்துளிதான் கிட்டாதோ?
அன்பரெனத் தொழுவோர்க்கு அருள் புரிந்தால் குறைந்திடுமோ ?
உன் பார்வை படுமாயின் உய்வேனே உமைபாலா !         14       

முன்னின்ற பாலகனை முகர்ந்திட்டு மகிழ்ந்த சிவன்
"என்னின்றுதித்த மைந்தா! என்றென்றும் வாழ்க"வென
சொன்னதுமே ஆறுமுறை சுகவாழ்வை நிலையாக்கும்
மன்னலுகின் சுமைதாங்கும் மணிக்கிரீடச் சிரம்பணிவோம்.         15

மாலை மணியணிகள் மார்பில் அசைந்தாட,
கோலமிகு காதணியும், குண்டலமும், தோள்வளையும்
மேலிடை பட்டாடை மேன்மையொளி வீசிடுமே!
வேலன், புரமெரித்தோன் வேதமைந்தா.. நீ வருக!                 16

"இங்கு வா" என்றெதுமே இளைய திருக்குமரன்
சங்கரி தம் மடியிருந்து சங்கரன் கரம் தழுவும்
தங்கநிற இளமேனி தவழும் குழந்தையவன்
திங்கள் முகமாறும் தினமும் பணந்திடுவோம்.                    17

குமரா ! ஈசன்திருமகனே ! குகனே ! திருமயில் வாகனனே !
அமரர்பதியே ! ஆறுமுகா ! அடியார் துயர்கள் நீக்குபவா !
சமரில் தாரகன் கொன்றவனே ! சரவணபவனே‌ ! வள்ளிமணாளா !
உமையாள் உருவாம் வேல்முருகா 
உமைப்பணிந்திடுவோம் காத்திடுவாய்  !  ‌ 18

புலனடங்கி நினைவிழந்து 
பொறி கலங்கிக் கபமடைக்க
பலம் நலிந்து செயல் மறந்து 
பயம் மிகுந்து உடல் நடுங்க
நலம் நசிந்து உயிர் மறைந்து நமனை நாடும் போதினில்
உலகறிந்த துணைகள் வேறு உதவிடுமோ உன்னையல்லால் ?   19

''வெட்டு,பிள,பொசுக்"கென்று வெஞ்சினமாய் யமதூதர்
திட்டவரும் காலமதில் திருமயில் வேலுடனே
கெட்டலைய விட்டிடாமல் கிட்டவந்து "அஞ்சேல்"எனத்
தொட்டுக் காத்தருள தோன்றிடுவாய் வேலவனே !   20             
உனைப்பணிந்து கேட்கின்றேன் "ஓம் முருகா" என்றுனையே
கணப்பொழுதும் சொல்லாமல் கைகளையும் குவிக்காமல்
நினைவிழந்து தவிப்பேனே நெஞ்சிலுயிர் நீங்குகையில்..
துணைபுரிவாய் அப்போது துதிக்கின்றேன் இப்போதே !  21            
தாரகன், சிங்கமுகன், தம்பிகளின் தமையனவன்
சூரபத்மன் என்பவனும் 
சூழும்‌ அண்டம் ஆயிரத்தை
வீரமொடு ஆளுகையில் வீழ்த்தியதும் வேலதனால்
பாரமன நோய் நீக்கிப் பார்த்தருள்வாய் வேலவனே 22               
உமையாள் திருமகனே ! உன்னடியேன் துக்கமெனும்
சுமையால் தளர்ந்தவன் நான் சுந்தர வடிவேல் கொண்டு
இமையா அமரர் தேவா! ஏழைக்கிரங்கும் வேலா!
உமையன்றி வேறறியேன் உளநோய் நீக்கிடுவாய் !      23                            

காசம் கயம் குட்டமொடு காக்கைவலி காய்ச்சலெனும்
நாசம் செயும் பெருநோயும் நலியவைக்கும் பைசாசம்
வாசம் செய்ய என்னுடலில் வந்திட்டால் வேலா உன்
பூசுமிலைத் திருநீற்றால் போக்கிடுவாய் தீவினையாம்!            24

கந்தனைக் காணவே கண்கள் ! கரங்களும் அவன்பணிக்கே !
செந்தில் முருகன் புகழ் செவிபடைத்த பயனாகும் !
சந்தமும் அவன் சரிதம் சந்தமொடு வாய்பாடும் !
சிந்தனையும், உடல்வாழ்வும் சீரலைவாய்க் கந்தனுக்கே !          25

பக்திநெறி மனிதர்க்கும் பரதத்துவ முனிவர்க்கும்
முக்தியளித்திடுவர் மும்மூர்த்தி தெய்வங்களாம்
எத்தையும் அறிந்திடாத எளியநிலைப் பஞ்சமரின்
சித்தமருள் முருகனன்றி சிறியேன் எதையும் அறியேனே!         26

மனைவியோடு மக்களும், மனையில் வாழும் பசுக்களும்,
மனிதனோடு பெண்களும் மற்றுமுள்ள சுற்றமும்
நினைந்துமையே வணங்கவும் நித்தமும் துதிக்கவும்
வினைகள் நீங்க வேள்வியை விதிப்படியே நடத்தருள்வீர்.     27                    


நெடியமலைக் கிரௌஞ்சமதை நினத்ததுமே வேல் கொண்டே
பொடிசெய்த வேலவனே 
புண் படுத்தும் நோய்களையும்
கொடியவிடப் பிராணியொடு கொத்தவரும் பறவையினம்
கடுகியோடச் செய்திடுவீர் 
கைகள் தாங்கும் வேலதனால் !                         28

தன் மகன் செய்தபிழை தந்தைதாய் மன்னியாரோ ?
உன் மகன் நானன்றோ ? உலகத்தின் தந்தையே நீ !
தென்பரங்கிரி தேவா 
தேவசேனா பதியே !
என்‌ பிழை மலையெனினும் எளியேனைப் பொறுத்தருள்வாய்!                29


கந்தா உன் மயில்போற்றி 
கடம்பா வேல் போற்றி‌ 
சிவன் மைந்தா சேவல் போற்றி ! மறியாடும் தான் போற்றி !
சிந்தாகுலந்தீர் செந்தூரா ! சிந்தும் சேவடியும் போற்றி !
வந்தே வரமருள்வாய் வணக்கம் வணக்கமய்யா !           30                                


வெற்றிதரும் இன்ப வடிவேலவனே ! சிவன்மகனே !
வெற்றியின் திருவுருவே ! விளங்கும் புகழுடையோய் !
வெற்றி கொண்ட திருக்கடலே ! வெள்ளப் பெருக்கினைப்போல்
வெற்றி புகழ் இன்பமெல்லாம் வேண்டுவோர்க்கு அருளிடுவீர் !               31

                    நூல் பயன் 

கந்தனின் புஜங்கமதைக் கவிபாடிப் பக்தியொடு
வந்தித்து வழிபட்டால் வாழ்ந்திடலாம் நெடுங்காலம்..
சிந்தைக்குகந்த இல்லாள், செல்வம், நன்மக்களுடன்
தந்திடும் பேரின்பநிலை தரணிபுகழ் குகனருளே !                                            

   திருச்செந்திலாதிபன் துணை !

           திருச்சிற்றம்பலம் !