Tuesday, 6 May 2014

VINAAYAGANE!



                                விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்!     

              உலகத்தின் முதல்வன்! உருவத்தில் பெரியோன்!
              பலப்பல உருவில் அருளிடும் அரியோன்;
              வலிகளைப் போக்கிடும் வலிமை உடையோன்!
              கலிகாலக் கடுமை கடிந்திடும் கரியோன்!                   1

              வீடணனை மடக்கிக் காவிரிக் கரைதனில்
              விஷ்ணுவை நிலையாய்க் கோவில் கொள்ளச் செய்தான்
              கோபம் கொண்ட வீடணன் துரத்தி வரவே
              ஓடோடிச்சென்று உச்சிமலை அமர்ந்தான்!                   2
                
              உச்சிமலை மீதில் உவந்தே அமர்ந்தான்,
              இச்சைகளை இயக்கும் இமையோன் மைந்தன்! 
              பச்சரிசி பிட்டு நயக்கும் விநாயகன்,
              எச்சமெல்லாம் களைவான் எங்களின் தலைவன்.                      3                          

              காலத்தை வென்றோன்! ஞாலத்தில் சிறந்தோன்!
              காலனும் பணியும் கற்பக விநாயகன்!
              சீரும், பேரும், சிறப்பும் நல்கும் 
              சீலம் மிகுந்தோன்! செல்வ விநாயகன்!                        4        

              மாங்கனி பெறவே அம்மை அப்பனை
              மாறாமல் வலம் வந்தான்; முருகனை வென்றான்!
              மருகிக் கோபம் கொண்ட தம்பியை                                
                            மார்புடன் அணைத்து மாங்கனி கொடுத்தான்!                              5 

              மூஷிகன் கர்வம் அதனை அடக்கி
              மூஞ்சுறு வாகனம் ஆக அதைக் கொண்டான்!
              பாரதம் எழுத தந்தம் முறித்தான்!
              பாரதைக் காக்க எங்கும் உறைந்தான்!                                            6

              நாவல் கனியை நயக்கும் நாயகன்;
              நாவாரப் பாடினால் நர்த்தனம் ஆடுவான்!
              நாகம் அதனையும் இடையணி ஆக்கினான்!
              நாதத்தின் முதல்வன்! வேதத்தின் தலைவன்!                              7    

              வெள்ளெறுக்கு வேரில் உவந்தே உறைவான்!
              வெள்ளெறுக்கம் பூவை விரும்பியே அணிவான்!
              வெள்ளேறு ஏறும் சிவனவன் மைந்தன்
              வெள்ளம்போல் வேண்டியதை அளித்தே மகிழ்வான்!             8

              அருகம்புல் மாலை அணியும் அழகன்!
              அரச மரத்தடி அமரும் வேந்தன்!
              பெருகும் தீவினை  களையும் பெரியோன்;
              மருகும் மனத்தை மாற்றும் மறையோன்!                                       9 

              மாயையை அகற்றும் மாணிக்க விநாயகன்!
              தேவையை நல்கும் தீர்த்த விநாயகன்!
              சேயைப்போல் சிரிக்கும் செல்வ விநாயகன்!
              தாயைப்போல் காக்கும் தலைவன் விநாயகன்!              10


                                     
                                                             திருச்சிற்றம்பலம்!





No comments:

Post a Comment