கத்தரிக்காய்
கத்தரிக்காய் மருத்துவ குணங்கள் கொண்டது. இதய நாளங்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கும்; வயிற்றுப்புண்களை ஆற்றும்; சிறுநீரகத்தைச் சரி செய்யும். 1.நான்கு அல்லது ஐந்து கத்தரிக்காயை அரைத்துப் பசையாக்கவும்.
2.சிறிது வெண்ணெயைச் சட்டியிலிட்டு இளக்கி, சில பற்கள் பூண்டு, சிறிது மிளகு, சிறிது பெருங்காயம், கொஞ்சம் உப்பு சேர்த்து நன்கு வதக்கி பின்னர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடித்து வர கத்தரிக்காயின் முழு மருத்துவப் பலன்களும் கிடைக்கும்.
இஞ்சிக் குடிநீர்
நான்கு பேருக்கு 150 ml.வீதம்:
தேவையான பொருட்கள் :
1.இஞ்சி - 1 பத்தை
2.கொத்துமல்லி விதை - 6tbsp.
3.உலர் திராட்சை - 3tbsp.
4.வெல்லம் - தேவையான அளவு.
5.தண்ணீர் - 750மிலி.
செய்முறை:
1.இஞ்சியைத் தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக்கி, மிக்ஸியிலிட்டு
ஓட்டவும்.
பின் 1\2 டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும் .
2.கொத்துமல்லி விதையை மிக்ஸியிலிட்டு சிறிது ஓட்டவும்; பின் உலர் திராட்சை சேர்த்து நன்கு ஓட்டவும்.
3.அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 750மிலி.தண்ணீர் வைத்து வெல்லம் சேர்க்கவும் .
வெல்லம் கரைந்ததும் அரைத்து வைத்துள்ள மல்லி, திராட்சை கலவையை சேர்க்கவும். 2 நிமிஷம் கொதித்ததும் மேலாக தெளிவாக இருக்கும் இஞ்சிச்சாறைச் சேர்க்கவும்; 3 முறை பொங்கி வந்ததும் இறக்கி சற்று ஆறியதும் குடிக்கவும்.
தேவைப்பட்டால் பால் சேர்த்துக் கொள்ளலாம்.
இஞ்சி மற்றும் வெல்லம் செரிமானம் நன்றாக நடப்பதற்கு உதவும்.
கொத்தமல்லி விதை பித்தம் போக்கும்.
உலர் திராட்சை மலம் எளிதாகக் கழிய உதவும்.
(எங்கள் வீடுகளில் பிறந்த குழந்தைக்குப் பதினாறு நாட்கள் கழிந்ததும் ஐந்து உலர் திராட்சைப் பழங்களை சுத்தமான ஒரு கிண்ணத்தில் போட்டுச் சிறிது வெந்நீரில் ஊற வைப்போம்.
குழந்தையைக் குளிப்பாட்டி விட்டு வந்ததும் உரை மருந்தைக் கொடுப்போம்.
அதன் பிறகு ஊற வைத்துள்ள உலர் திராட்சைப் பழங்களை நன்றாகக் கசக்கிச் சுத்தமான ஒரு வெள்ளைத் துணியில் வடிகட்டிக் குழந்தைக்குச் சங்கில் வைத்துப் போட்டி விடுவோம்.
இதனால் குழந்தை எளிதாக மலம் கழித்து விடும். அதோடு நெஞ்சுச் சளியும் கட்டாது என்பது நாங்கள் கண்கூடாகக் கண்ட உண்மை.
அதேபோல் பிள்ளைகள் வளர்ந்த பின்னும் நாள்தோறும் விளக்கேற்றி வணங்கும் போது சுவாமிக்கு இந்த உலர் திராட்சைப் பழங்களைப் படைத்துச் சிறு குழந்தைகளைச் சாப்பிட வைத்து விடுவோம்.)
மாதம் இருமுறை காலையில் டீ, காஃபிக்குப் பதில் குடித்துவர வயிறு தொல்லையின்றி இருக்கும்.
++++++++++++
ஐந்து மற்றும் எட்டு மருந்துப்பொடி
தேவையான பொருட்கள்:
1.சுக்கு-1பங்கு
2.மிளகு
3.திப்பிலி
4.அக்கரா
5.சித்தரத்தை
6.சாரணவேர்
7.நறுக்குமூலம்
8.அதிமதுரம்
சுக்கு தவிர மற்ற அனைத்தும் 1\2 பங்கு. அனைத்துப் பொருட்களையும் வெய்யிலில் நன்கு காயவைக்கவும். சுக்கு, சித்தரத்தை, சாரணவேர், அதிமதுரம் போன்றவற்றை சற்று தட்டியபின் மிக்ஸியிலிட்டு நன்கு அரைத்து, சலித்து கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொள்ளவும்.
இதோடு, தூதுவளை, வெற்றிலை, ஆடாதோடை , நொச்சி , துளசி ஆகியவற்றை ஒவ்வொரு கைப்பிடி எடுத்து நன்கு சுத்தம் செய்யவும்.
நிழலில் உலர்த்திப் பொடித்து மேலே குறிப்பிட்டிருக்கும் மருந்துப் பொடியுடன் சேர்த்து நன்கு கலந்து கண்ணாடி பாட்டில் அல்லது எவர்சில்வர் டப்பாவில் வைத்துக் கொள்ளவும். Plastic containerகளைத் தவிர்க்கவும் .
காலை, மாலை - இருவேளை ஒரு ஸ்பூன் தேனில் கலந்து சாப்பிடவும்.
( இதில் ஆடாதொடை போன்ற மூலிகைகள் கிடைக்கும்.. இல்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம். சுக்கு முதலானவற்றைத் தயார் செய்து சாப்பிடலாம். முடியும் போது ஆடாதொடை போன்ற மூலிகைகளைத் தயார் செய்து சேர்த்துக் கொள்ளலாம். தயவுசெய்து கடைகளில் கிடைக்கும் ஆடாதொடைப் பொடிகள் வேண்டாம்)
சாப்பிடும் முறை :
தேவைப்படும்போது சிறுவர்க்கென்றால் ஒரு டீஸ்பூன், பெரியவர்க்கென்றால் ஒரு டேபிள் டீஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை சாப்பிட்டுவர குளிர்காலத்தில் ஏற்படும் சாதாரண சளி, இருமல்,தும்மல் மற்றும் காய்ச்சல் விரைவில் குணமாகும்.
ஒரு கால் மணி நேரம் வேறெந்தப் பானமோ, உணவோ எடுத்துக் கொள்ளக் கூடாது.
மற்றபடி பத்தியம் ஏதும் கிடையாது.
குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்றாற்போல் அளவைக் குறைத்து, தேனில் கலந்து கொடுக்கலாம்.
எல்லோரும் எப்போதும் மனதில் ஆழமாகப் பதித்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்: எல்லோருக்கும் எல்லாமும் ஒத்துக் கொள்ளாது. அதனால் சிறிதளவு செய்து பார்த்துப் பயன்படுத்தி உங்கள் உடலுக்கு ஒத்துக் கொண்டால் மேற்கொண்டு பயன்படுத்துங்கள் !
இல்லையேல் நிறுத்தி விட்டு.. சில காலம் கழித்து மீண்டும் முயற்சி செய்து பாருங்கள் !
பொதுவாக நமது வீடுகளில் நமது முன்னோர்கள் பின் பற்றிய மருத்துவ முறைகள் 90 - 95% பக்க மற்றும் பின் விளைவுகள் அற்றவையாகத் தான் இருக்கின்றன என்பது எங்கள் வாழ்க்கை அனுபவம் ! ++++++++++++
சுக்கு மல்லி காஃபி
தேவையான பொருட்கள் :
சுக்கு - 1 பங்கு
கொத்தமல்லி விதை - 1 பங்கு
மிளகு - 1\2 பங்கு
மேலே சொன்னவற்றை நன்கு காய வைத்து, மிக்ஸியிலிட்டு நன்கு அரைத்து கண்ணாடி புட்டியில் வைத்துக்கொள்ளவும்.
தேவைப்படும்போது சில துண்டுகள் பனைவெல்லத்தை (அவரவர் இனிப்புக்கு ஏற்ப) நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, அவை கரைந்ததும், பொடித்து வைத்துள்ள பொடியை - 1 நபருக்கு 1 டீஸ்பூன் வீதம் போடவும்: பொங்கிவரும். 3 முறை பொங்கி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சற்று ஆறியதும் பருகவும். வேண்டுமானால் பால் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் பால் சேர்க்காமல் பருகினால் முழுப் பலனையும் பெறலாம்.
இந்தக் குடி நீரை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம் - காஃபி, டீ போல தினமும் கூட குடிக்கலாம்.
நெஞ்சுச்சளி, வரட்டு இருமல் ஆகியவை போயே போய்விடும்.
நோயற்ற வாழ்வு வாழ நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் நண்பர்களே !
++++++++++++++
குழந்தைகளுக்கு அதிகமாகக் காய்ச்சல் இருக்கும்போது முதலுதவியாக நல்ல குளிர்ந்த நீரில் சுத்தமான துணியை நனைத்து ஓரளவு நீரைப் பிழிந்துவிட்டு நெற்றியில் போடலாம். காய்ச்சல் குறையும்.
அதிகமாக சளியினால் குழந்தைகள் மூச்சுவிட அவதிப்படும்போது விபூதியை சிறிது நீர்விட்டுக் குழைத்து நெற்றியில், மூக்கில் பற்றுப்போட உள்ளே உள்ள நீர் உறிஞ்சப்பட்டு, குழந்தைகள் உறங்கத் துவங்கும்.
No comments:
Post a Comment