Saturday, 25 July 2015

சத்துமாவுக் கஞ்சி

சத்துமாவுக் கஞ்சி

தேவையான பொருட்கள்

கேழ்வரகு - 1 பங்கு
கம்பு
சோளம்
கோதுமை
கொண்டக்கடலை   
பாசிப்பயறு          
தோல் உளுந்து
மக்காச்சோளம்
பச்சரிசி
ஒவ்வொன்றும்   1/2 பங்கு 

செய்முறை:

  1. பச்சரிசி தவிர மற்ற அனைத்து தானியங்களையும் தனித்தனியாக நன்றாக தூசு நீக்கி, தண்ணீரில் களைந்து, கல் அரித்து, தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்கவும்.

  1. 12 மணி நேரம் சென்றபின் தண்ணீரைச் சுத்தமாக வடித்துவிட்டு தனித்தனியாகத் சுத்தமான துணியில் கட்டித் தொங்கவிடவும்; அல்லது பாத்திரங்களில் போட்டு சுத்தமான துணியால் காற்றோட்டமாக மூடி வைக்கவும். அவ்வப்போது குலுக்கி விடவும்.
  2. 24 மணி நேரம் சென்றபின் எல்லா தானியங்களும் முளைகட்டத்தொடங்கியிருக்கும். பாசிப்பயறு மட்டும் சீக்கிரம் முளைகட்டிவிடும். ஓரிரு நாட்களில் எல்லா தானியங்களும் முளைகட்டியிருக்கும்.
  3. வெய்யில் காலமாக இருப்பின் 3 அல்லது 4 நாட்களில் ஈரமும் உலர்ந்துவிடும். வெய்யில் அதிகமாக இல்லாத காலங்களில் கவனமாக, பூஞ்சக் காளான் பிடிக்காமல் உலரவிடவேண்டும்.  
  4. அதன்பின் வாணலியை அடுப்பில் ஏற்றி சூடானதும் ஒவ்வொரு தானியமாக ஏழெட்டுப் பொறிகள் பொறியும்வரை கைவிடாது கருகிவிடாமல் கவனமாக வறுக்கவும். பச்சரிசியையும் சிவக்க வறுக்கவும்.தோல்உளுந்து பயன்படுத்தாவிட்டால் தோல்உளுந்தம்பருப்பை நன்கு களைந்து - தோல் நீக்காமல் - நீரை நன்கு வடித்துவிட்டு சிவக்க வறுத்துப் பயன்படுத்தலாம்.     
  5. வறுத்தபின் எல்லா தானியங்களையும் ஒன்றாகப் போட்டுவிடவும். நன்கு ஆறவைத்து மிஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  6. இந்த மாவு மிகவும் சத்தானது மட்டுமல்ல; நன்கு வாசமாகவும் இருக்கும். கை படாமல், தண்ணீர்  படாமல் வைத்துக் கொண்டால் மாதக் கணக்காக இருக்கும்.
  7. இந்த மாவைக் கஞ்சி போடமட்டுமல்லாமல் புட்டு, அடை, தோசை செய்யவும் பயன்படுத்தலாம்.
9. கஞ்சி தயாரிக்கும் போது வெள்ளைச்சீனி சேர்க்காமல் வெல்லம் அல்லது பனைவெல்லம்  சேர்த்தால் மிக ருசியாக இருக்கும். உடல் நலத்துக்கு நல்லதும் கூட.

10. 1 வயது குழந்தை முதல் இந்த கஞ்சி மாவைக் கொடுக்கலாம்; அவர்களுக்குக் கொடுக்கும்போது சில முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளை மிக்ஸியிலிட்டுப் பொடித்துக் கஞ்சி காய்ச்சும்போது சேர்த்துக் காய்ச்சிக்  கொடுக்கலாம்.
11.    நினைவில் கொள்ளுங்கள்!
1.பாதாம் பருப்பு மூளையில் உள்ள திசுக்களுக்குத் தேவையான எண்ணெய்ப்பசையை அளிக்கவல்லது. பாதாமில் கொழுப்புச் சத்து அதிகம் கிடையாது.
     2.மொத்த மாவோடு போட்டு அரைக்கக் கூடாது; அரைத்தால் ஈர நைப்பு வந்துவிடும்.

   நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

No comments:

Post a Comment