கருவுற்ற பெண்களுக்கு சில அனுபவக் குறிப்புகள்.
பாகம் - 1 :
1.சுகப்பிரசவம் ஆக சொல்ல வேண்டிய மந்திரம்.
ஹே, சங்கர, ஸ்மரஹர பிரமாதிநாத
மன்னாத ஸாம்ப சசி சூட ஹர திரிசூலின்
சம்போ ஸுகப்ரஸவக்ருத் பவ மே தயாளோ
ஸ்ரீ மாத்ருபூத சிவ பாலய மாம் நமஸ்தே!
இந்த ஸ்லோகம் திருச்சி அருள்மிகு தாயுமான சுவாமியைச் சுகப் பிரசவம் ஆவதற்கு வேண்டிக் கொள்ளும் ஸ்லோகம்.
ஒரு பெண்ணுக்குப் பிரசவ நேரம். வலியில் துடித்துக் கொண்டே
" அம்மா அம்மா " என்று சத்தமாக அரற்றுகிறாள்..
இதோ அம்மா வந்து விட்டாள். குழந்தையும் பிறந்து விட்டது.
வெளியூர் சென்றிருந்த அந்தப் பெண்ணின் தாயோ காவிரியின் வெள்ளப் பெருக்கினால் அக்கறையில் தவித்துக் கொண்டு இருக்கிறார்.
சற்றே வெள்ளம் வடிந்ததும் தவிப்புடன் ஓடோடி வருகிறாள்.. குழந்தை பிறந்து விட்டதைப் பார்த்து மகிழ்ச்சியும் திகைப்புமாக நிற்கிறாள்.
" என்னம்மா.. இப்டிப் பாக்குறே.. நீதானேம்மா பிரசவம் பாத்தே ?" என்று மகள் கேட்க..
" நானா ? நான் இப்பதானம்மா வரேன்.."னு தாய் சொல்ல..
" அப்ப உன்னப் போலவே இங்க வந்து எனக்குப் பிரசவம் பாத்தது யாரு?"ன்னு திகைத்துப்போய் அந்த இளம் தாய் சுற்றும்முற்றும் பார்க்க..
அந்தத் தாயுமானவன் கோவில் காண்டாமணி அந்த நேரத்தில் ஓங்கி ஒலிக்க.. அம்மாவும் பெண்ணும் உணர்கிறார்கள்.. வந்தவன் அந்த "அம்மையப்பனான அந்த மாத்ரு பூதேஸ்வரன் என்று..
இது வரலாறு.. புனை கதை அல்ல..
இன்றும் சித்திரை மாதத்தில் நடைபெறும் திருவிழாவில் "செட்டிப் பெண் மருத்துவம் " என்ற பெயரில் அந்த தாயுமானவனுக்கு.. அவன் அருள் கிடைக்கப் பெற்று நல்ல முறையில் பிரசவம் ஆனவர்கள் நன்றி சொல்லும் விதமாக.. வாழைத் தார்கள் மற்றும் பிரசவ மருந்துகளைக் காணிக்கையாகப் படைத்து அங்கு வரும் பக்தர்களுக்குப் பிரசாதமாக வினியோகம் செய்கிறார்கள்.
++++++++++++++
கருவுற்ற பெண்களுக்குச் சில அனுபவக் குறிப்புகள்.
பாகம் - 2
குழந்தை உண்டாகி இருக்கும் இளம் பெண்கள் - குறிப்பாகத் தலைப் பிரசவத்தை எதிர் நோக்கி இருக்கும் பெண்களுக்குச் சில அனுபவக் குறிப்புகள்.
நீண்ட பதிவு தான். ஆனால் கட்டாயம் படித்துப் பயன்பெற வேண்டும் என்று மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
" குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்" என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
ஆனால் அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்கும் முன் அந்தத் தாய் படும் நாடு ?
திருவாசகத்தில்.. போற்றித் திருவகவல் பதிகத்தில் வணக்கத்துக்குரிய மணிவாசகப் பெருமான் அந்தக் குழந்தைத் தாயின் வயிற்றில் எப்படி மாதாமாதம் வளர்கிறது என்று சொல்கிறார் பாருங்கள் :
" மானுடப் பிறப்பினுள், மாதா உதரத்து,
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்;
ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்;
இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்;
மும் மதி தன்னுள் அம் மதம் பிழைத்தும்;
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்;
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்;
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும்;
ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்;
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்;
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்;
தக்க தச மதி தாயொடு தான் படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்.."
அப்பப்பா.. வயிற்றுக்குள்ளேயே இத்தனை போராட்டம் அந்தப் பச்சை சிசுவிற்கு.
அப்போது அதைச் சுமக்கும் தாய் எத்தனை போராட்டங்களை எதிர் கொள்ள வேண்டும் ?
அதை எந்தவித பயமுமின்றித் தெரிந்து ஒரு தெம்போடு எதிர் கொள்ளத்தான் இந்த 72 வயது எளிய அம்மா இந்தப் பதிவைப் போடுகிறேன்.
தயவுசெய்து முழுவதும் படியுங்கள் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த எளியவள் 15 வயது முதல் 30 வயது வரை எங்கள் வீட்டில் 5 பிரசவங்களையும்.. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் 3 பிரசவங்களையும் பெரியவர்களின் அறிவுரைகளைக் கேட்டு அவரவர் சூழ்நிலைக்கேற்பப் பார்த்திருக்கிறேன்.
2007- 2019 வரை எங்கள் மருமகள் மற்றும் வளர்ப்பு மகளுக்கு ஆளுக்கு ரெண்டு வீதம் 4 பிரசவங்கள் பார்த்த அனுபவமும் உண்டு.
நிறையப் பேருக்குப் பத்தியச் சாப்பாடு செய்து (சைவம் மட்டும்.. அவரவர் குடும்ப வழக்கப்படி) கொடுத்திருக்கிறேன்.
முதலில் மனதில் நல்ல நினைவுகளை நிறைக்க வேண்டும். அதற்கு நிறைய ஸ்லோகங்களைப் பாராயணம் செய்ய வேண்டும்
சுகப்பிரசவம் ஆக சொல்ல வேண்டிய மந்திரம்.
ஹே, சங்கர, ஸ்மரஹர பிரமாதிநாத
மன்னாத ஸாம்ப சசி சூட ஹர திரிசூலின்
சம்போ ஸுகப்ரஸவக்ருத் பவ மே தயாளோ
ஸ்ரீ மாத்ருபூத சிவ பாலய மாம் நமஸ்தே!
இந்த ஸ்லோகம் திருச்சி அருள்மிகு தாயுமான சுவாமியைச் சுகப் பிரசவம் ஆவதற்கு வேண்டிக் கொள்ளும் ஸ்லோகம்.
இனி நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1.வீட்டு வேலைகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
மன்னியுங்கள்.. இந்தக் காலத்தில் குழந்தை உண்டான உடனேயே bed rest எடுக்கச் சொல்கிறார்கள்.. அது மிகவும் தப்பு.
குனிந்து நிமிர்ந்து வேலை செய்யும் போது தான் தோள் முதல் கால் வரை அனைத்து உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் சீராகப் பரவும்.. தசைகள் மற்றும் தசைநார்கள் நன்கு இளக்கம் கொடுக்கும்.
எங்கள் வீடுகளில் காலை மாலை இரு வேளையும் வீட்டைப் பெருக்கித் துடைக்கச் சொல்வார்கள். (ஆனால் ஒன்று.. இந்தக் காலத்தில் செய்வது போல் மாப் வைத்து நின்று கொண்டே துடைப்பது அல்ல.)
துணியை நனைத்து நன்றாகக் குனிந்து இரு கைகளாலும் இப்படியும் அப்படியுமாகத் துடைப்பது.
கொஞ்சம் அந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்.. தோள்களில் தொடங்கி கைகள்.. வயிறு.. இடுப்பு.. கால்கள் என்று எல்லா உறுப்புகளுக்கும் வேலை இருக்கும்.
எட்டு மாதங்கள் ஆனாலும் இதைச் செய்யச் சொல்வார்கள்.
இதையே தான் கூகுளில் four leg exercise என்று போட்டிருக்கிறார்கள்.
தேடிப் பாருங்கள்..
ஒரு பலூனில் மேல் நிறைமாதக் கர்ப்பிணியைக் குப்புறப் படுக்க வைத்து கால்களை இப்படியும் அப்படியுமாக மெல்ல அசைக்கச் சொல்கிறார்கள்.
2. அடுத்து,. சில பெண்களுக்கு மசக்கை வாந்தி ஓரிரு வாரங்கள் அல்லது மாதங்களில் நின்று விடும். சிலருக்கோ குழந்தை பிறக்கும் வரை தொடரும்.
நான்.. முதல் குழந்தை உண்டாகி இருந்த போது அது பிறக்கும் வரை வாந்தி இருந்து கொண்டே தான் இருந்தது.
இரண்டாவது குழந்தைக்கு ஓரிரு வாரங்கள் மட்டுமே வாந்தி இருந்தது.
அப்படி வாந்தி வரும் போது ஆல்பக்கடா என்று நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
புளிப்புச் சுவை உள்ள அது வாந்தியை ஓரளவு கட்டுப்படுத்தும்.
அதேபோல் மாதுளங்கா இரசாயனம் என்று ஒரு சிரப். மாதுளம் பழம்.. கமலாரஞ்சு பழம் மற்றும் உலர் திராட்சை கொண்டு தயாரிக்கப்படும் இதுவும் அவ்வப்போது ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால்.. தொண்டைக்கு இதமாகவும் இருக்கும்.. வாந்தியையும் கட்டுப்படுத்தும்..
3. பொதுவாக எங்கள் வீடுகளில் கர்ப்பிணிப் பெண்கள் வயிறு முட்டச் சாப்பிடுவதைத் தவிர்க்கச் சொல்வார்கள்.
சிறிது இடைவெளி விட்டு சாப்பிடச் சொல்வார்கள்.
பசிக்க விடவும் கூடாது.. அதிகம் சாப்பிடவும் கூடாது.
பழங்களில் சீதாப்பழம் குழந்தையின் முதுகெலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உதவும் என்பார் எங்கள் நெருங்கிய நண்பரான மகப்பேறு மருத்துவர் ஒருவர்.
அதேபோல் ஆப்பிள் போன்றவைகளைச் சாப்பிடுவதை விட நமது இடத்தில் கிடைக்கும் வாழைப்பழங்கள்.. (மலைப்பழம் மற்றும் செவ்வாழை போன்றவை செரிக்கச் சற்றே நேரம் எடுத்துக் கொள்ளும். பழக்கம் இருந்தால் ஒழிய அவற்றைத் தவிர்க்கவும் ) கொய்யா..மாதுளை போன்றவை நல்லது.
குழந்தை உண்டான பெண்கள் பப்பாளிப் பழத்தை அறவே தவிர்க்க வேண்டும். சிலருக்கு மாம்பழம் மற்றும் பலாப்பழமும் கூடப் பிரச்னைகளை உருவாக்கும். கவனம் !
4. ஆறு மாதங்களுக்கு மேல் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். பயப்பட வேண்டாம்.
வயிறு அழுத்துவதால் உண்டாகும் ஒரு உந்துதல் தான் அது.
சிறுகீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீர் கழிவது இயல்பாக இருக்கும்.
வெள்ளைப் பூசணி.. சுரைக்காய் போன்ற நீர்க் காய்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
இளநீர் (இதில் இரும்புச்சத்து அதிகம்) மற்றும் மோர் போன்றவை தாகத்தையும் அடக்கும்.. உடலுக்குத் தேவையான ஊட்டத்தையும் தரும்.
5. எங்கள் வீடுகளில் ஏழாம் மாதம் ஒரு மூன்று நாட்கள் தொடர்ந்து புழுங்கல் அரிசி.. கொஞ்சம் வெந்தயம் மற்றும் ஓரிரண்டு பூண்டுப் பற்கள் தட்டிப் போட்டு உப்பு சேர்த்து நன்கு குழைய வேக வைத்து… பால் சேர்த்தோ.. சேர்க்காமலோ மாலை 7 - 7.30க்குள் சாப்பிடக் கொடுப்போம்.
அன்று அதற்குப் பிறகு உணவு ஏதும் தர மாட்டோம்.
இது வயிற்றில் வாயு கட்டுவதைத் தடுக்கும் என்பார்கள்.
6. அடுத்து கவனத்தில் கொள்ள வேண்டியது : ஏழு மாதம் கழிந்து விட்டாலே.. இரவு உணவை 7- 7.30 க்குள் சாப்பிட்டு விட வேண்டும். இதனால் நெஞ்சக் கரிப்பு... ஒரு மாதிரி ஏப்பம் வருதல் போன்றவை தவிர்க்கப்படும்.
கூடுமானவரை ஆவியில் வேக வைத்த இட்லி போன்ற எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. பரோட்டா.. சப்பாத்தி.. (அதிலும் கடைகளில் செய்ததை) போன்ற உணவுகளைத் தவிர்க்கவும்.
விருப்பப்பட்டால் பகல் வேளையில் சாப்பிடவும். இரவில் வேண்டவே வேண்டாம்.
7. அதேபோல் கர்ப்பிணிப் பெண்கள் நாள்தோறும் இல்லாவிட்டாலும் வாரத்தில் இரண்டு மூன்று நாட்களாவது வெற்றிலை பாக்கு போடுவது நல்லது.
இது செரிமானத்தை நன்கு ஊக்குவிக்கும் என்பதுடன் மகப்பேறு காலத்தில் ஏற்படும் calcium சத்தை ஈடுகட்டும் உதவும் என்பது எங்கள் அனுபவம்.
8.ஏழு மாதம் தொடங்கி விட்டால் வாரம் 3 முறை காலை 11 மணி அளவில்.. முருங்கைக்கீரை சூப் செய்து குடிக்க வேண்டும்.
முருங்கைக் கீரையை நுனியில் ஏழெட்டு கிளைகள் ( கொப்பு என்று இதைச் சொல்வோம்) இருக்கும் படி ஒடித்து நன்றாகக் கழுவ வேண்டும். (கீரைகளை ஆயக் கூடாது) இரண்டு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் அந்தக் கீரைக் கொப்பைப் போட்டுச் சிறிதளவு உப்பு மற்றும் நாலைந்து மிளகு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். ஒரு 5 நிமிடம் கொதித்தால் போதும்.
சற்றே ஆறியதும் வடிகட்டிக் குடிக்கவும்.
இது இடுப்பு தசைகளை இளக்கம் கொடுக்க வைக்கும் என்பார் எங்கள் இலவச முதியோர் இல்லத்தில் இருந்த 80 வயது பாட்டி ஒருவர்.
அவர் சொல்லி எங்கள் மருமகள் மற்றும் எங்கள் வளர்ப்பு மகள் உட்பட நிறையப் பேருக்கு இதைச் சொல்லி நல்ல பலன் அடைந்திருக்கிறார்கள்.
அதேபோல் எங்கள் நீண்ட நாள் நண்பர் ஒருவர் சொன்னது :
முருங்கைப் பிசின் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கிக் கழுவி விட்டுச் சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்தால் அதில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் தூசு மண் போன்றவை போய்விடும்.
நீரை அகற்றிவிட்டு ஊறவைத்த 10 - 15 பாதாம் பருப்புகளையும் இதோடு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
அடிகனமான ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் விட்டுச் சீனியைச் சுவைக்கேற்பச் சேர்க்கவும்.
சீனி கரைந்ததும் வடிகட்டி கொஞ்ச நேரம் கொதிக்க வைத்து அதில் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து அடிப்பிடிக்காமல் நன்கு கிளறவும்.
சிறிது நேரத்தில் அல்வா பதம் வந்துவிடும்.
இறக்கி வைத்து ஆற வைத்து மூன்று நாட்கள் காலை 11 மணி அளவில் சாப்பிடக் கொடுக்கவும். இதுவும் இடுப்புத் தசைகள் இளக உதவுகிறது என்பதை நாங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கறோம்.
9.எட்டாவது மாதம் தொடங்கி விட்டால் நாள்தோறும் இரவு படுக்கப் போகும் முன்.. முதுகுப் பகுதியின் கீழ்ப்புறம் நல்ல வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது மிகவும் நல்லது.
முடிந்தால்.. கிடைக்குமானால் ஐம்பாளம் பட்டை என்று நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி.. 5 பாகங்களாகப் பிரித்து வைத்துக் கொள்ளவும்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பங்காக இரவு வெந்நீரில் அதைச் சற்றே தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைத்து.. முதுகுப் பகுதியில் இடுப்புக்குக் கீழ்ப் புறம்.. சுத்தமான ஒரு துண்டை அந்த வெந்நீரில் நனைத்துப் பொறுக்கக் கூடிய சூட்டில் ஒத்தடம் கொடுத்தால் அந்தச் பகுதிகளில் இருக்கும் தசைகள் இளக்கம் கொடுக்கும்.
பேறு காலத்தின் போது அந்தப் பெண்ணுக்கு இவை மிகவும் உதவியாக இருக்கும்.
ஒத்தடம் கொடுக்கும் போது ஒத்தடம் கொடுப்பவர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் :
இந்தக் காலகட்டத்தில் குழந்தை உண்டாயிருக்கும் பெண்ணின் உடல் மிகவும் மிருதுவாக இருக்கும். அதனால் வெகு கவனமாக வெந்நீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
10. அடுத்து.. எட்டாவது மாதம் தொடங்கி விட்டாலே அவ்வப்போது வயிற்றில் வலி வரும்.. நிற்கும். தொடர்ந்து வலி விடாமல் இருந்தால் மருத்துவரை உடனே அணுகுவது மிகவும் நல்லது.
ஆனால் வலி விட்டு விட்டு வந்தால் பயப்பட வேண்டாம்.
வலித்து வலித்துத் தான் வயிறு கீழிறங்கும்.
அந்த வலி.. சில மணி நேரங்களில் பிள்ளை பிறக்கப் போவதைக் குறிக்கும் ஒன்றா அல்லது வயிறு கீழிறங்கவா என்று தெரிந்து கொள்ள எங்கள் வீடுகளில் சோம்புக் கஷாயம் கொடுப்போம்.
ஒரு ஸ்பூன் சோம்பை வெறும் வாணலியில் போட்டு சிறிது நேரம் சூடேற்றி அதில் ஒரு டம்ளர் தண்ணீர் விடவும். அது நன்கு ஒரு 5 நிமிடம் கொதித்ததும் இறக்கி ஆறவைத்து அந்தப் பெண்ணிற்குக் கொடுக்கவும்.
பிள்ளை வலி என்றால் அந்தக் கஷாயம் வலியைத் தூக்கி விட்டு விடும்.
False pain அதாவது வயிறு இறங்கத்தான் அந்த வலி என்றால் சிறிது நேரத்தில் வலி நின்று விடும்.
சிலர் சீரகத்தையும் இந்த முறையில் செய்து கொடுப்பார்கள்.
பிள்ளை பிறக்கும் நேரம் நெருங்கி விட்டது என்று அறிந்து கொள்ள இன்னும் சில விஷயங்கள்.
1.சிறுநீர் அல்லது மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் அதிகமாக இருக்கும்.. ஆனால் அவை வராது.
2.குழந்தையின் தலை கீழ் வயிற்றில் முட்டுவதை மிக நன்றாக உணர முடியும்.
இவை அனைத்தும் பெரும்பாலும் நார்மல் டெலிவரிக்கான அறிகுறிகள்.
அதேபோல் குழந்தை உண்டாகி இருக்கும் போது தைராய்டு மற்றும் இரத்தச் சர்க்கரை அளவுகள் கொஞ்சம் கூடும் அல்லது குறையும். இவற்றைப் பற்றியும் கவலை கொள்ள வேண்டாம்.
பொதுவாகக் குழந்தை பிறந்த பின் இவை பெரும்பாலும் சீராகி விடும்.
இது தொடர்பாக இன்னொரு விஷயம் . மாதக் கணக்கு ஏற ஏற வயிறு பெரிதாகும். அப்படிப் பெரிதாகும் போது வயிற்றின் மேல் தோல் தன்னால் விரிவடையும். அப்போது சில பெண்களுக்கு அதிகமாக அரிப்பு ஏற்படும். அதைத் தாங்க முடியாமல் சொரிந்து விடக் கூடாது. சிலருக்குப் புண்ணாகி விடும்.
அப்படிச் சொரிந்து தான் ஆக வேண்டும் என்றால் சற்றே சொரசொரவென்று இருக்கும் சுத்தமான ஒரு துண்டை வைத்துச் சற்றே அழுத்தித் துடைக்கிறார் போல் செய்யலாம்.
கொஞ்சம் தேங்காய் எண்ணையை வயிற்றின் மேல் தடவினாலும் அரிப்பு எடுப்பது குறையும்.
+++++++++++
கருவுற்ற பெண்களுக்கு சில அனுபவக் குறிப்புகள்.
பாகம் - 2
வளைகாப்பு
இது ஒரு வெறும் சடங்கு என்று தயவுசெய்து நினைத்து விடாதீர்கள் பிள்ளைகளா !
இதன் பின் பெரிய அறிவியலே இருக்கிறது.
ஐந்து அல்லது ஏழு மாதத்தில் அவரவர் குடும்ப வழக்கப்படி வளைகாப்பு இடப் படுகிறது.
முதலில் இந்த நிகழ்ச்சி கர்ப்பமாக இருக்கும் அந்தப் பெண்ணின் மனதில் ஒரு உற்சாகத்தையும்.. மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
எங்கள் மருமகளுக்கு இரண்டாவது பிரசவம் பெங்களூருவில் வைத்துப் பார்த்தேன்.
முதல் பிரசவம் நார்மல் தான்.
ஆனால் இரண்டாவது முறை குழந்தை உண்டாகி இருந்த போது வயிற்றில் குழந்தை புழக்கம் மிகவும் குறைவாக இருந்தது.
அவள் காண்பித்துக் கொண்டிருந்த மகப்பேறு மருத்துவர் அதை breech baby என்று குறிப்பிட்டார்.
( Breech baby என்றால் வழக்கமாக நார்மலாகப் பிரசவம் ஆகும் போது குழந்தையின் தலை தான் முதலில் வெளியே வரும்.. வரவேண்டும்.
ஆனால் இந்த breech baby விஷயத்தில் குழந்தையின் பிட்டம் மற்றும் கால்கள் வெளியே வரும்படி ஆகி விடும். இது பெரிய சிக்கலில் கொண்டு விட்டுவிடும். அதனால் இத்தகைய குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்து விடுவார்கள் மருத்துவர்கள்.)
ஏழாயிற்று.. எட்டாயிற்று.. குழந்தை வயிற்றில் எப்போதாவது தான் நகர்வதை அவள் உணர்ந்தாள்.
அப்போது ஒரு தகவல் இணையத்தில் கிடைத்தது.
வயிறு கிட்ட வைத்து பாடல் போட்டு கேட்க வையுங்கள் :
மற்றும் ஒரு டார்ச் லைட்டை வயிற்றில் இந்தப் பக்குவமும் அந்தப் பக்கமுமாக காட்டுங்கள். குழந்தை அந்த ஒலியையும் ஒளியையும் நோக்கித் திரும்பி நகரும் என்று.
சரியென்று அதையும் செய்தோம்.
அப்போது தான் நமது முன்னோர்கள் ஏன் வளைகாப்பு என்ற ஒரு சடங்கை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று மிகவும் நன்றாகப் புரிந்தது.
கைகள் அசையும் போதெல்லாம் அந்தக் கண்ணாடி வளையல்களும் அசைந்து கலகலவென ஒரு இனிமையான ஒலி கேட்கும் : அது குழந்தை காதில் விழும் போது எந்தப் பக்கம் ஒலி கேட்கிறதோ அந்தப் பக்கம் தன்னிச்சையாகத் திரும்பும் : அதாவது புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். அது தாய் சேய் இருவருக்கும் நல்லது.
இவள் ஏதோ கதை விடுகிறாள் என்று நினைப்பவர்கள் Googleல் "Life Before Birth" என்று தேடுங்கள். நிறையக் காணோலிகள் கிடைக்கும். வெளிநாட்டுக்காரன் சொன்னால் கேட்பீர்கள் அல்லவா ?
10-15 ஆண்டுகளுக்கு முன்பே Discovery Channel ல் இது குறித்து ஒரு Documentary film ஒன்று வந்திருக்கிறது.
அதில் அந்தக் கர்ப்பிணிப் பெண் மிக்ஸியைப் போட்டால் அந்தச் சத்தத்தைக் கேட்டுக் குழந்தை திடுக்கிடும்.
கடற்கரையோரமாக அவள் நடக்கும் போது அந்த அலைகளின் ஓசையை உன்னிப்பாகக் கேட்கும்.
சத்தமாக அவள் சிரித்தால் அதுவும் சிரிக்கும்.
கோபமாக அவள் கத்தினால் அது அப்படியே சுருண்டு கொண்டு விடும்.
சுவையாக அவள் ஏதாவது சாப்பிட்டால் அது வாயைச் சப்புக் கொட்டும்.
இப்போது புரிகிறதா பிள்ளைகளா.. வளைகாப்பை ஒரு விழாவாகக் கொண்டாடி..
அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு இரண்டு கைகளிலும் அழகழகான கண்ணாடி வளையல்களை வந்திருக்கும் மற்ற பெண்களை விட்டுக் கேலி கிண்டல் பேசிக் கொண்டே போட வைத்து..
வந்திருக்கும் மற்ற பெண்களை நலங்குப் பாடல்கள் பாடச் சொல்லி.. வீணை.. வயலின்.. புல்லாங்குழல் போன்றவற்றை வாசிக்கச் சொல்லி…
சுவையான வகைவகையான அன்னங்கள் தயார் செய்து வந்தவர்களுக்கும் பரிமாறி.. அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்கும் சாப்பிடக் கொடுத்து …
அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையை எவ்வளவு உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள் பாருங்கள் நம் முன்னோர்கள் ?
By All Means They are Very Great !
பொதுவாக முதல் குழந்தை உண்டாகி இருக்கும் போது மட்டுமே வளைகாப்பு போடுவார்கள்.
ஆனால் இந்த எளியவள் சொல்கிறேன்.. இரண்டாவது அல்லது மூன்றாவது கருத்தரிப்பு காலத்திலும் நீங்கள் கைகளில் கண்ணாடி வளையல்களை அணிந்து கொள்ளுங்கள் பிள்ளைகளா..
அது உங்களையும் உற்சாகப் படுத்தும்.. உங்கள் வயிற்றில் இருக்கும் பிள்ளையையும் உயிரோட்டமாக வைத்திருக்கும்.
++++++++++++
கருவுற்ற பெண்களுக்கு சில அனுபவக் குறிப்புகள்.
பாகம் - 3
மகப்பேறு ஆனதும் பின்பற்றப்பட வேண்டிய முறைகள் !
காலங்காலமாக எங்கள் வீடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளை இங்கே பகிர்கிறேன்.
அவரவர்களுக்கு ஏற்றாற்போல் கூட்டிக் குறைத்துப் பயன்படுத்திப் பாருங்கள்.
ஒத்துக் கொண்டால் தொடர்ந்து பயன்படுத்தலாம். இல்லையேல் விட்டு விடவும்.
பொதுவாகப் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்.
குழந்தைக்கு நாள்தோறும் காலையில் தேங்காய் எண்ணையை லேசாகச் சூடேற்றி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தளதளவென்று தேய்த்துக் காலை இளவெயிலில் காட்ட வேண்டும்.
காலை 10.30 - 11 மணியளவில் வெந்நீரில் குழந்தையை இளஞ்சூடு ஏற்றப்பட்ட தேங்காய் எண்ணெய் தேய்த்து…நன்கு கைகால்..விரல்கள்.. முதுகு… தொடைகள் என்று சற்றே அழுத்தி நீவி விட்டு.. சுத்தமான கடலைமாவு தேய்த்துக் குளிப்பாட்ட வேண்டும்.
குளிக்க வைத்தபின் இரண்டு காதுகளையும் ஊதிவிட வேண்டும்.
தாய்.. குழந்தை இருவருக்கும் குளித்த பின் சாம்பிராணிப் புகை போட வேண்டும்.
சாம்பிராணி போட்டு முடித்ததும் கீழே குறிப்பிட்டுள்ள மூலிகை மருந்துகளை உரை மருந்தாகக் கொடுக்க வேண்டும்.
வசம்பு ( இதைப் பேர் சொல்லாதது அல்லது பிள்ளை வளர்த்தி என்றும் கூறுவர்.) இதை நல்லெண்ணெய் விளக்கேற்றி அந்தத் தீபச் சுடரில் நன்கு கருகச் சுட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
சுக்கு - இதையும் வசம்பு போல் சுட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
ஜாதிக்காய் மாசிக்காய் - இவை இரண்டையும் நன்றாகக் கழுவி விட்டுச் சோறு நன்றாகக் கொதித்துக் கொண்டு இருக்கும் போது அதில் போட்டு ஒரு பத்து நிமிடம் சூடேற்றி.. பின் சுத்தமான தண்ணீரில் கழுவித் துடைத்து வைத்துக் கொள்ளவும்.
மிளகு - ஒரு மிளகை தையல் ஊசியில் குத்தி தணலில் காட்டிச் சுட்டு வைத்துக் கொள்ளவும்.
இவை அனைத்தையும் ஒரு சுத்தமான எவர்சில்வர் டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
தாய்ப்பால் சில சொட்டுகள் பீய்ச்சி எடுத்து சுத்தமான உரைகல்லில் இவை அனைத்தையும் தாய்ப்பால் தொட்டு ஒவ்வொரு இழுப்பு இழுத்து (அதாவது உரைத்து)க் குழந்தைக்குப் போட்ட வேண்டும்.
உரைத்த பின் ஒவ்வொரு முறையும் அந்தப் பொருட்களை நன்றாகச் சுத்தமான தண்ணீரில் கழுவி… சுத்தமான வெள்ளைத் துணியில் துடைத்து டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
குறிப்பு : வசம்பைப் பேருக்கு உரைத்தாற் போல்தான் உரைக்க வேண்டும். இது மிகவும் முக்கியம் .
இந்த உரைமருந்து குழந்தையின் உடல் முழுவதையும் சீராக வைத்துக் கொள்ள உதவும்.
நல்ல ஆழ்ந்த தூக்கத்தைக் கொடுக்கும்.
குழந்தையைக் குளிக்க எடுத்துச் செல்லும் முன் இரண்டு அல்லது மூன்று உலர்திராட்சையை வெந்நீரில் ஊற வைத்துவிட்டுச் செல்லவும்.
உரைமருந்தைக் கொடுத்த பின் ஊறிய திராட்சையை நன்கு கசக்கி சுத்தமான வெள்ளைத் துணியில் வடிகட்டி குழந்தைக்குப் போட்டிவிட வேண்டும்.
இது குழந்தையின் வயிற்றையும் சுத்தப்படுத்தி விடும்..நெஞ்சுச் சளி கட்ட விடாது
தாயைப் பொறுத்தவரை.. ஒருநாள் விட்டு ஒருநாள் தாய் சிறிது சீரகம் நாலைந்து மிளகு சேர்த்துச் சூடேற்றிய நல்லெண்ணெயைத் தலைமுதல் கால்வரை நன்கு தேய்த்துக் குளிக்க வேண்டும்.
குளித்த பின் கட்டாயம் சாம்பிராணிப் புகை போட்டுக் கொள்ள வேண்டும்.
அதோடு உச்சிப்பொடி என்று நாட்டு மருந்துக் கடைகளில் கேட்டால் கிடைக்கும்.
அதை வாங்கி வைத்துக் கொண்டு.. ஒரு சிட்டிகை எடுத்துத் தாய் சேய் இருவரின் உச்சந்தலையில் வைத்து விட வேண்டும். இது இருவருக்கும் மண்டையில் நீர் கோர்த்தல் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
பதினாறு நாட்கள் கட்டாயம் இவற்றை எல்லாம் பின்பற்ற வேண்டும்.
+++++++++++++++
கருவுற்ற பெண்களுக்கு சில அனுபவக் குறிப்புகள்.
பாகம் - 4.
தாய் சாப்பிட வேண்டிய உணவுகளும்.. முறைகளும்:
காலை : எழுந்தவுடன் பால் அல்லது காஃபியுடன் 2 - 3 ரொட்டித் துண்டுகள்.
08 - 08.30 - 3 இட்லி
தொட்கருவுற்ற பெண்களுக்கு சில அனுபவக் குறிப்புகள்.டுக்கொள்ள : மிளகுப்பொடி
செய்முறை -
மிளகு - 1 பங்கு
உளுந்தம் பருப்பு - 2 பங்கு
கறிவேப்பிலை - 2 பங்கு
பூண்டு - 2- 3 பற்கள்
உப்பு - தேவையான அளவு.
ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு வறுத்து நன்கு பொடித்து எவர்சில்வர் டப்பா அல்லது கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்.
இட்லியுடன் இந்தப் பொடியை நல்லெண்ணெய் அல்லது நெய் நிறைய சேர்த்துச் சாப்பிடவும்.
தேவைப்பட்டால் இட்லி சாப்பிட்ட பின் பால் (சின்ன டம்ளர்) குடிக்கலாம்.
சாப்பிட்ட பின் 2 - 4 வெற்றிலை களிப்பாக்குப் பொடியுடன் சுண்ணாம்பு சேர்த்துக் கட்டாயம் போட வேண்டும்.
குளித்து விட்டு வந்த பின் சோறு வடித்த கஞ்சியில் கொஞ்சம் உப்புப் போட்டு 1 அல்லது 2 டம்ளர் குடிக்கலாம். **தாய்ப்பால் நன்கு சுரக்க **இது உதவும்.
அதேபோல் **தாய்ப்பால் போதவில்லை என்று உணர்ந்தால் **குருமாவுக்குப் போடும் பட்டை சில துண்டுகளை லேசாகச் சூடேற்றி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து வைத்துக் கொண்டு.. தேவைப்படும் போது ஒரு டீஸ்பூன் பட்டைத் தூளை சிறிது புளிக்காத மோரில் கலந்து குடித்து விட்டு மீதம் உள்ள மோரையும் குடிக்கவும்.
**இன்னொரு முறை : **நன்கு கொதி வந்த பாலில் ஐந்தாறு பூண்டுப் பற்களைத் தட்டிப் போட்டு நன்கு குழைய வேக வைக்கவும். பூண்டு நன்கு வெந்ததும் தேவையான அளவு வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துப் பூண்டை நன்கு மென்று தின்று விட்டு மீதமுள்ள பாலைக் குடிக்கவும்..
**இதுவும் தாய்ப்பால் பெருக உதவும்.**
ஆனால் சிலருக்கு இது ஒத்துக் கொள்ளாது. எதையும் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் தயவுசெய்து உடனே நிறுத்தி விட வேண்டும்.
மதிய உணவு : 12 - 12.30
குழைய வேக வைத்த புழுங்கல் அரிசி சாதம் - 1 கப்
பத்தியக் குழம்பு :
குழம்புக் கரண்டிக்கு ஒரு கரண்டி மிளகு
சீரகம் - 2 tb.sp.
கருவேப்பிலை - 1 கொத்து
புளி - 1சின்ன எலுமிச்சை அளவு
மேலே சொன்னவற்றை ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு அடுப்பை மிதமாக வைத்து நன்கு வறுக்கவும்.
ஆறியதும் நன்கு விழுதாக அரைக்கவும்.
சின்ன வெங்காயம் கொஞ்சம் மற்றும் பூண்டு நிறைய - இவற்றை நல்லெண்ணெய் விட்டு நன்கு வதக்கி அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்க்கவும். உப்பும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி ஆறவைத்து எவர்சில்வர் டப்பாவில் வைக்கவும்.
கைபடாமல் வைத்துக் கொள்ள வேண்டும். 3- 4நாட்கள் வைத்துக் கொள்ளலாம்.
தொடுகாய் - பிஞ்சான கத்தரிக்காய்.. அவரைக்காய் மற்றும் புடலங்காய் பொரியல் அல்லது பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு : இவற்றை மட்டுமே 16 நாட்கள் வரை சாப்பிட வேண்டும்.
தேங்காய் சேர்க்கக்கூடாது.
துவையல் : பாசிப்பருப்பைச் சிவக்க வறுத்து இரண்டு பற்கள் பூண்டு.. உப்பு.. விதைகள் நீக்கிய வரமிளகாய் ஒரு சின்னத்துண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிடலாம்.
(பச்சைமிளகாய் கூடாது)
பத்திய ரசம் : ஒரு சின்ன எலுமிச்சை அளவு புளியை சற்றே சூடேற்றி விட்டு ஒரு ஸ்பூன் மிளகு.. ஒரு ஸ்பூன் சீரகம்.. அரை ஸ்பூன் கொத்தமல்லி விதை - இவற்றுடன் நன்கு அரைத்துக் கொதிக்க விட்டு இறக்கி நெய்யில் கடுகு மட்டும் தாளிக்கவும்.
சாப்பிட்ட பின் 10 - 15 வெற்றிலைக் கட்டாயம் போட வேண்டும்.
நிறையத் தண்ணீர் குடிக்கக் கூடாது. ( கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீர்)
அதற்குப் பதில் தான் வெற்றிலை.
வெற்றிலை - ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
களிப்பாக்கு - வயிற்றுக் கழிவுகளை நீக்கும்.
சுண்ணாம்பு - பேறு காலத்தில் இழந்த இரத்தத்தை ஈடு செய்யும்.
மாலை 4-4.30 பால் அல்லது காஃபியுடன் 2-3 ரொட்டித் துண்டுகள்
இரவு 7.30 - 8.00
இட்லிப் பொடி அல்லது பாசிப்பருப்புத் துவையல்.
சிறிது நேரம் கழித்து ஒரு கப் பால்.
படுக்கும் முன் 5-7 வெற்றிலை போட வேண்டும்.
தாய் புளிப்பு அதிகம் உள்ள பொருட்களைச் சாப்பிடக்கூடாது. அதனால் தான் புளியை வெறும் வாணலியில் நன்கு சூடேற்றிப் பயன்படுத்துகிறோம்.
எங்கள் வீடுகளில் அவரவர் வழக்கப்படி என்னவெல்லாம் சாப்பிடுகிறோமோ அவை அனைத்தையும்… மாம்பழம்.. பலாப்பழம் உட்பட அனைத்தையும் சிறிது சிறிது ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொன்றாய் உணவோடு சேர்த்துக் கொடுத்து விடுவார்கள்.
ஏனெனில் பின்னாளில் பிள்ளையின் வயிற்றுக்கு எல்லாம் ஒத்துக் கொள்ளும்.
+++++++++++++
பாகம் 5 - இறுதிப் பகுதி
தாய்ப்பால் கொடுக்கும் முன் மார்பகங்களை நன்றாக.. தாய் தனது உள்ளங்கையை வைத்து இட வலமாக.. வலி இடமாக சற்றே அழுத்தி மஸாஜ் செய்த பின்.. மார்பகங்களைப் பிதுக்கிக் கட்டுப்பாலைப் பீச்சி எடுத்து விட வேண்டும்.
கட்டுப்பால் குழந்தைக்கு ஒத்துக் கொள்ளவே ஒத்துக் கொள்ளாது என்பதை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும் பிள்ளைகளா !
குழந்தைகளுக்கு வயிற்று வலி.. மலக்கட்டு முதலானவைகள் இந்தக் கட்டுப்பால் கொடுப்பதால் வரும் பிரச்னைகள்.
பால் கொடுக்கும் முன் சுத்தமான வெள்ளைத் துணியால் மார்பகங்களை நன்கு அழுத்தித் துடைத்து விட வேண்டும்.
இப்போதெல்லாம் ஒன்று கேள்விப் படுகிறேன். பாலைப் பீய்ச்சி எடுத்து ஃபிரிட்ஜில் வைத்து விட்டுப் போகிறாளாம் தாய். வீட்டில் இருப்பவர்கள் குழந்தை அழும் போது அதைப் போட்டி விடுவார்களாம்.
இந்த 72 வயது அம்மா ஒரேயொரு கேள்வி கேட்கிறேன்.. எதற்கு இப்படிக் குழந்தையைக் கொடுமைப் படுத்துகிறீர்கள் ?
இதனுடைய பின் விளைவுகள் தெரியுமா உங்களுக்கு ?
இதற்கு நீங்கள் தாய்ப்பால் ஊட்டுவதை முற்றிலும் நிறுத்தி விடலாம் பிள்ளைகளா !
அதேபோல் இன்னொரு முக்கியமான விஷயம் : பிள்ளை பெற்ற இளம் அன்னையர்கள் சம்மணம் போட்டு குறைந்தது இரண்டு மாதத்திற்காவது உட்காரக் கூடாது. அப்படி உட்கார்ந்தால் காற்று உட்புக வாய்ப்பு உண்டு : அதனால் தாய்க்கு வயிற்றுப் பொருமல் வர வாய்ப்புகள் அதிகம் என்பார் எங்கள் ஆச்சி.
எப்பொழுதேனும் தாய் குளிருவது போல் உணர்ந்தால் பத்து மிளகைப் பனைவெல்லம் சேர்த்து நன்கு பொடித்து வாயிலிட்டு மெதுவாக அந்தச் சாற்றை இறக்கவும்.
எவ்வளவுக்கு எவ்வளவு தாயும் சேயும் சுத்தமாக இருக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு எந்த நோயும் அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.
இறுதியாக பல பிள்ளைப் பேறுகளைப் பார்த்த ஒரு செவிலித் தாயாக உங்களை என் பிள்ளைகள் போல் நினைத்து ஒன்று கூறுகிறேன்.
" காலமிது காலமிது… " என்று ஒரு பழையத் திரைப்படப் பாடல்.
அதில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சொல்லி இருப்பார் :
" ஐயிரண்டு திங்களிலும்.. பிள்ளை பெறும் போதும்.. அன்னை என்று வந்த பின்னும் கண் உறக்கம் போகும்.. கண் உறக்கம் போகும்.." !
இது முற்றிலும் உண்மை பிள்ளைகளா !
ஆனால் அத்தனை துயரமும் துன்பமும் அந்தக் குழந்தை
" அம்மா " என்று கூப்பிடும் ஒற்றைச் சொல்லில் அப்படியே காணாமல் போய் விடும்.
அது ஓடி வந்து கட்டிக் கொள்ளும் போது.. மனம் வானத்தில் பறக்கும்.
இன்னொன்று அன்புப் பிள்ளைகளா !
ஒரேயொரு குழந்தை நமக்குப் பிறக்காதா என்று ஏங்கித் தவித்து.. கோவில் கோவிலாகப் போவோர்.. பலவிதமான மருத்துவம் பார்த்துக் கொண்டு இருக்கும் பிள்ளைகளை இந்த முதியவள் பார்த்து மன வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.
ஆனால் ஆண்டவன் அந்தப் பெறும் பேற்றை உங்களுக்கு அளித்து ஆசீர்வதித்து இருக்கிறான்.
அதற்கு அவனுக்கு நன்றி சொல்லி நல்லபடியாகக் குழந்தை பிறந்து.. நலமே வாழப் பிரார்த்திக்கிறாள் இந்த 72 வயது அம்மா.
நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் அன்புப் பிள்ளைகளா !