Tuesday, 29 November 2022

மகப்பேறு லேகியம்

பிள்ளைப்பேறு மருந்து

       இந்தப் பதிவில் இந்த 71 வயது அம்மா உங்களிடம் பகிர்வது திருநெல்வேலிப் பக்கம் பெண்கள் பிள்ளை பெற்ற பின் காலங்காலமாகக் கொடுக்கப்படும் ஒரு தரமான மருந்து.

   தமிழகத்தில் சில இடங்களில் இது பிரசவ நடகாய லேகியம் என்று அழைக்கப்படுகிறது.

  இதற்குத் தேவையான இயற்கை மூலிகைப் பொருட்களை முதலில் பார்ப்போம். ஒவ்வொன்றும் 10 கிராம்.

  1.        மஞ்சள்

  2.        சுக்கு -         

  3.        மிளகு-           

  4.        ஓமம்-

  5.        நறுக்குமூலம்   

  6.        அக்கரா        

  7.        சித்தரத்தை           

  8.       திப்பிலி        

  9.        சீரகம்          

10.        பெருஞ்சீரகம்          

11.        கருஞ்சீரகம்    

12.        அதிமதுரம்     

13.        சாரணவேர்           

14.        காயம்

15.        வால்மிளகு

16.        கிராம்பு                                

17.        வாய்விளங்கம்  

18.        சனிஞாயிறு

19.        ஆனைக்கொம்பு

20.        அதிவிடங்கம்   

21.       சதகுப்பை

22.        கிராணி ஓமம்                 

23.        குறுந்தட்டி வேர்

24.        நெல்லிமுள்ளி

25.        விஷ்ணு கிரந்தி

26.        சீந்தில் கொடி 

27.        கடுக்காய்

28.        ஏலம்

29.        பப்படப்புல்லு - கொஞ்சம்

30.    வெள்ளை மிளகு 

31.    தான்றிக்காய்

32.   லவங்கப்பட்டை

33.   கருடக்கொடி

34.   தாளிதபத்ரி

35.   ஜாதிபத்ரி

மேலே குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அனைத்தையும் வாங்கி நன்கு சுத்தம் செய்து, பெரிய வேராகவோ அல்லது தடிமனான வேராகவோ இருந்தால் நன்கு தட்டி, வெறும் வாணலியில் தனித்தனியாக இளம் சூட்டில் (simல்) நன்றாக சூடாகும் வரை வறுக்கவும். அதன்பின் எல்லாவற்றையும் ஒன்றாய்ச் சேர்த்து மிஷனில் கொடுத்து அரைத்து வாங்கி நன்றாக ஆறவைத்து, ஈரமோ, காற்றோ புகாத கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். கை படாமல் பத்திரமாக

வைத்துக்கொண்டால் வருடக் கணக்காக இருக்கும்.

  இந்த பிள்ளைப்பேறு லேகியம்   செய்யும் முறை  

 தயார் செய்து வைத்துள்ள பொடி - 1 பங்கு

பனைவெல்லம் - 1 பங்கு

நல்ல இஞ்சி - 1\2 பங்கு

தேன் - 1\4 கிலோ

நெய் 1\2 - கிலோ

 1.இஞ்சியைத் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது நெய்விட்டு நன்கு வதக்கவும்.

 2.பனைவெல்லத்தைத் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து இளக்கி  வடிகட்டவும்.

3.இஞ்சி ஆறியபின் மிக்ஸியிலிட்டு பனைவெல்லப்பாகை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு அரைக்கவும்.

4.ஒரு அகலமான அடிகனமானப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து மீதமுள்ள பனைவெல்லப்பாகை ஊற்றவும். பின்னர் மருந்துப்பொடி, இஞ்சி விழுது ஆகியவற்றைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கட்டியின்றி கிளறவும்.

5.நன்கு திரண்டு வந்ததும் - அல்வா பதம் - மீதமுள்ள நெய் மற்றும் தேன் சேர்த்து இறக்கவும்.

6.நன்கு ஆறியபின் எவர்சில்வர் டப்பா அல்லது கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொள்ளவும்.

தயவுசெய்து பிளாஸ்டிக் டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டாம்.

காலை மற்றும் இரவு 2 மேசைக்கரண்டி அளவு சாப்பிட்டுவர உடல் கட்டுப்பாட்டில் இருக்கும்; தாய்ப்பால் பெருகும்; கர்ப்பப்பை சுருங்கும். பிள்ளைப்பேற்றுக்குப் பிறகு ஏற்படும் மாத விலக்கில் எந்தத் தொந்தரவும் நிச்சயம் வராது.

அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது என்றால் இந்த மருந்தை பதினாறு நாட்களுக்கு மேல் சாப்பிடத் தொடங்குங்கள்.

அதேபோல் இதை ஓரிரு நாட்கள் சாப்பிட்டுப் பாருங்கள்.. ஒத்துக் கொண்டால் தொடர்ந்து சாப்பிடுங்கள்.. இல்லை என்றால் விட்டு விடுங்கள் !

ஏனெனில் எல்லோருக்கும் எல்லாமும் ஒத்துக் கொள்ளாது என்பதை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.           ++++××××++++

       இதே பொடியைச் சாதாரணமாக நாம் பயன்படுத்தும்போது நமக்கும் நல்ல மருந்து. உடலின் தலை முதல் கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளையும் சீர் செய்யும் மூலிகைகள் இதில் அடங்கி உள்ளன.

 அலைச்சலினாலோ அல்லது அதிக வேலைப் பளுவினாலோ… அதீதமான உடல் வலி ஏற்படும்போது , தேவையான அளவு பனைவெல்லத்தை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் போட்டு சில நிமிடங்கள்  கொதிக்க வைத்து, சற்று ஆறியதும் வடி கட்டாமல், அப்படியே குடிக்க உடல்வலி போயே போய்விடும். 

 குழந்தைகளுக்கும் அளவைக் குறைத்துக் கொடுக்கலாம். சிறிதும் பயம் வேண்டாம். பக்க விளைவுகளோ பின் விளைவுகளோ கிடையாது. சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம்; அதற்கும் பயம் வேண்டாம். வயிறு சுத்தமாகிவிடும். அளவுக்கு அதிகமாகப் போனால் மட்டும் அதை நிறுத்த முயலுங்கள்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் !

நலமே வாழ நல்வாழ்த்துக்கள் அன்பு நண்பர்களே !

          +++++×××××+++++

No comments:

Post a Comment