Friday, 26 April 2024

நிழல் இல்லா நாள்: பூஜ்ய நிழல் நாள் : Zero Shadow Day

நிழல் இல்லாத நாள் !

பூஜ்ய நிழல் நாள் !

Zero Shadow Day !

வானியலில் எத்தனையோ அரிய நிகழ்வுகள் ஏற்பட்டு, நம்மை சிலிர்க்க வைத்துவிடுகின்றன.. அப்படித்தான், இந்த நிழல் இல்லா நாளும் வியப்பைத் தருகிறது..

நிழல் இல்லாத நாள் என்றால் என்ன? இந்த நாள் ஏன் மிகவும் அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது தெரியுமா? 

எப்போதுமே சூரிய ஒளியின் கீழ் நாம் நிற்கும்போது.. நடக்கும் போது நம்முடைய நிழல், காலையில் மேற்கு நோக்கியும், மதியம் மற்றும் சாயங்கால நேரத்தில், கிழக்கு நோக்கியும் என நீண்டு அமையும். இதுபோன்ற நேரங்களில் நம்முடைய நிழல் பூமியின் மீது விழும்…

ஆனால், குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் செங்குத்தாக நிழல் அமையும்... 

இந்த நாட்களில் நண்பகலில், நம்முடைய நிழல் நீளாமல், காலடியின் கீழேயே அமையும்... இதற்குதான் நிழல் இல்லா நாள் அல்லது பூஜ்ய நிழல் நாள் என்று சொல்வார்கள். 

இதையே ஆங்கிலத்தில் Zero Shadow Day என்கிறார்கள்.

சுருக்கமாகச் சொல்லப்போனால், பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் மீது சூரியக் கதிர்வீச்சு நேர் செங்குத்தாக விழக்கூடிய நாளாகும்.

இந்த Zero Shadow Day பொதுவாக, ஒரு வினாடியின் ஒரு பகுதியே நீடிக்கும் என்றாலும், அதன் விளைவுகளை இரண்டு நிமிடங்களுக்கு பார்க்க முடியும் என்றும் வானியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆண்டுக்கு இரு முறை கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் நிகழும். அங்கு நண்பகலில் சூரியனின் கதிர்கள் பூமியின் மேற்பரப்பில் செங்குத்தாக இருக்கும். இதனால் செங்குத்தாக இருக்கும் கட்டடங்கள், பொருட்கள், மனிதர்களின் நிழல் தரையில் விழாது.

அட்ச ரேகையின் +23.5 மற்றும் - 23.5 டிகிரி புள்ளிகளுக்கு இடையிலான பகுதியில் ஆண்டுக்கு இரண்டு முறை இந்த நிகழ்வு உண்டாகிறது.

இந்த நாட்களில் மதியத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு எந்த ஒரு பொருளும் நிழலுடன் இருக்காது என்று இந்திய வானியல் சங்கத்தின் இணையதளம் விளக்குகிறது.

பெங்களூரு 13 டிகிரி வடக்கு அட்ச ரேகையில் அமைந்துள்ளதால், இந்த அரிய வானியல் நிகழ்வான நிழலில்லா வகை 24.04.2024 அன்று பெங்களூருவில் நிகழ்ந்தது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில், சமதள பரப்பளவில் ஏதேனும் ஒரு உருளையான பொருளை செங்குத்தாக வைத்து, அதன் நிழல் விழவில்லையா என்பதை நீங்களே வீட்டிலிருந்தபடியே நேரடியாகவே பார்க்க முடியும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்திச் சொல்லி இருந்தனர்.

அதன்படியே, இன்று ( 24.04.2024 ) சரியாக மதியம் 12.17 முதல் 12.23 வரை நிழல் தரையில் விழவில்லை... இந்த அரிய நிகழ்வை பெங்களூர்வாசிகள் தங்கள் வீடுகளிலிருந்தே நேரடியாகவே சோதித்துப் பார்த்தனர்.. உயரமான பொருளைச் செங்குத்தாக வைத்து, அதன் பிம்பம் தரையில் விழுகிறதா என்று பார்த்தார்கள்.. நிழல் சுத்தமாக விழவில்லை. அதேபோல, தங்கள் தலைக்கு மேல செல்போனை உயர்த்தி பிடித்தும் தங்கள் நிழலை கண்டறிய முற்பட்டனர். அதிலும் நிழல் எதுவுமே விழவில்லை.

கடந்த வருடம் ஏப்ரல் 25 மற்றும் ஆகஸ்ட் 18 ஆகிய 2 தேதிகளில் பெங்களூரில் பூஜ்ஜிய நிழல் நாட்கள் அறியப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுபோலவே, இந்திய நகரங்களான சென்னை, மும்பை, புனே போன்ற பகுதிகளிலும் நிழல் இல்லா நாள் நிகழ்ந்துள்ளது.

தமிழகத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, கடலூர், ஆம்பூர், ஆரணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், கேளம்பாக்கம், வேலூர், ஆற்காடு, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், ஆவடி, சென்னை ஆகிய இடங்களில் இன்று நிகழ்வு மதியம் 12:13 மணியளவில் இது நிகழ்ந்தது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வு பூமியின் அச்சுடன் தொடர்புடையது. அப்போது, சூரியன் குறிப்பிட்ட அட்சரேகைக்கு நேர் உச்சியில் இருக்கும் போது இந்த அற்புதமான தருணம் ஏற்படும். சுற்றுப்புறங்கள் நிழல்கள் இல்லாத பகுதியாக மாறும்.

இந்திய வான் இயற்பியல் கழகம், வானியல் கல்வியை ஊக்குவிக்க இந்த நிகழ்வைப் பயன்படுத்துகிறது. பூமிக்கும் சூரியனுக்குமான உறவை இதன் வாயிலாக விளக்குகின்றனர்.

அந்த வகையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வானியல் ஆர்வலர்கள், இந்திய வான் இயற்பியல் கழகத்தின் (Indian Institute of Astrophysics (IIA),

கோரமங்களா வளாகத்திற்கு 24.04.2024 அன்று அழைக்கப்பட்டனர். 

அங்கு, நிழல் இல்லாத நேரமான பிற்பகல் 12:17 முதல் 12:23 மணி வரை, நேரடிச் செயல்பாடுகளைக் கண்டு ரசித்தனர்.

மனிதர்கள் கண்டு பிடித்தது கொஞ்சமே கொஞ்சம் தான் !

இயற்கையின் கண்டறியப்படாத அற்புதங்கள் அதிசயங்கள் ஏராளம் ஏராளம்.. இல்லையா அன்பு நண்பர்களே ?

நலமே விழைவு : நலமே விளைவு !

தகவல்கள் : படித்தவை மற்றும் கேட்டவை.

படங்கள் உதவி கூகுள்.

நன்றி கூகுள் !



               

Thursday, 4 April 2024

நிகிதா கௌல் என்ற நவீன வேலு நாச்சியார் !

நம்ம நாட்டில் வீர மங்கைகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு வீர மங்கையைப் விஷயத்தைத் தான் இந்தப் பதிவுல உங்களோடப் பகிர்ந்துக்கப் போறேன்.

கடந்த 14.02.2019ஆம்‌ஆண்டு புல்வாமா தாக்குதலில் 40 CRPF வீரர்கள் வீரமரணம் அடைந்தது நினைவிருக்கிறதா நண்பர்களே ?

அதற்குப் பதிலடியாக 2019 பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி operation Bandar என்ற பெயரில் நமது இராணுவம் தீவிரவாதிகளின் இடங்களைக் கண்டுபிடித்து அழித்தது.

ஆனால் அந்த நடவடிக்கையில் பங்கேற்ற நமது வீரர்கள் நாலு பேர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.

அவர்களில் ஒருவர் தான் வணக்கத்துக்குரிய மேஜர் விபூதி சங்கர் தௌண்டியால் என்னும் இளம் வீரர்.

தானே விரும்பி இந்த ஆபரேஷனில் பங்கேற்ற அவருக்கு எதிரிகளின் தாக்குதலால் கழுத்திலும் வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்தன.‌ 

Srinagar ல் ‌உள்ள 92 base hospitalக்குக் கொண்டு போயும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.

திருமணமாகி 9 மாதங்களே ஆன நிலையில்..‌ “ நமது முதலாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாட வருகிறேன் “ என்று இந்தப் பரிதாப நிகழ்வு நடந்த சில நாட்களுக்கு முன்.. தன் 27 வயதே ஆன இளம் மனைவியான நிகிதா கௌலுக்கு மகிழ்ச்சியுடன் செய்தி அனுப்பினார் 

ஆனால் அதற்கும் முன்பே அவரை வீர மரணம் அழைத்துக் கொண்டு விட்டது.

அவருடைய தியாகத்தைக் கௌரவிக்கும் விதமாக Shaurya Chakra விருது  2019ல் அளிக்கப்பட்டது.

ஆனால் அவருடைய தியாகம் வீண் போகவில்லை.

தன் கணவர் விட்டுச் சென்ற கடமையைத் தொடர நிகிதா கௌல் முடிவு செய்தார்.

ஆம்.. இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற முடிவு செய்த அந்த இளம்பெண் அதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கினார்.

கணவர் காலமாகி ஆறு மாதங்கள் கழிந்த நிலையில்  Short Service Commission (SSC) நடத்தும் தேர்வுக்கு விண்ணப்பித்தார்.

மிகவும் கடினமான அந்தத் தேர்வுக்கு வயது வரம்பு பொதுவாக 20 - 27 ஆக இருந்தாலும் இராணுவத்தில் பணிபுரிந்த வீரர்களின் விதவை மனைவிகள் அதாவது (widows of defense personnel)‌ 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

49 வாரங்கள் இதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தக் கோர்ஸில் தேறியவர்கள் 14 வருடங்கள் பாரத இராணுவத்தில் வேலை பார்க்கலாம். முதலில் 10 வருடங்கள் : தேவைப்பட்டால் அல்லது முடிந்தால் மேலும் 4 ஆண்டுகள் பணி புரியலாம்.

இராணுவத்தில் பணி புரிய வேண்டும் என்று ஒரு ஆழமான உத்வேகம் அதாவது aspiration கொண்டவர்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பை அளிக்கிறது.

அதோடு commissioned officers என்ற அதிகாரம் உள்ள உயர் பதவியில் இவர்கள் 10 ஆண்டுகள் பணியாற்ற முடியும்.

இந்த SSC தேர்வில் வெற்றி‌ பெற்ற நிகிதா கௌல் Services Selection Board (SSB) interviewவிலும் 2020ல் தேறினார்  : பணி நியமன ஆணைக்காகக் காத்திருந்தார்.

கடந்த 26.05.2021ல்‌  Officers Training Academy ‌படிப்பு மற்றும் பயிற்சியை முடித்தவருக்கு 29.05.2021ல்‌ முறைப்படியான சான்றிதழ் சென்னை Officers Training Academy (OTA) மற்றும் பணிநியமன ஆணை அதாவது (she was formally commissioned) வழங்கப்பட்டது.

Army Commander..‌ Northern Command Lt Gen YK Joshi அவர்களே நிகிதாவின் தோள்பட்டையில் பணி நியமன அடையாளமாக நட்சத்திரங்களை அணிவித்த அந்தத் தருணம் இந்த இளம் பெண்ணுக்கு நிச்சயமாக ஒரு பெருமைமிகு தருணம் தான் !

பாரத இராணுவத்தில் சேர்ந்ததன் மூலம் துணிச்சல் மிக்க தன் கணவர் வீர மரணம் அடைந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவருக்குப் பொருத்தமான ஒரு அஞ்சலியை இந்த இளம் பெண் செலுத்தி விட்டாள்‌ என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் தன் கணவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய போது நிகிதா பேசிய சொற்கள் பொருள் பொதிந்தவை :

“நீங்கள் என்னை நேசித்ததாகச் சொன்னீர்கள்..‌ ஆனால் நாட்டைத் தான் அதிகம் நேசித்தீர்கள்..‌ அது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.

அடுத்தவர்களை நீங்கள் நேசித்த விதம் மிகவும் வித்தியாசமானது.‌ ஏனெனில் உங்களுக்கு அறிமுகமே இல்லாத ஆட்களுக்காக உங்கள் உயிரையும் பணயம் வைக்க நீங்கள் தயாரானீர்கள்.

மிகவும் துணிச்சலான உங்களைக் கணவராக அடைந்தது எனது கௌரவம். உங்களை என் இறுதி மூச்சு இருக்கும் வரை நேசிப்பேன். உங்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.. I owe my life to you !” 

நமது பாரத நாட்டு வரலாற்றில் தங்கள் கணவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற களம் இறங்கிய வீரமங்கை வேலு நாச்சியார்.. ஜான்சி ராணி.. சித்தூர் ராணி பத்மினி போன்ற வீரமங்கைகள் நிறையப் பேர்.

அந்த வகையில் சொன்னதைச் செயலிலும் காட்டி விட்ட இந்த நவீன வீர மங்கை‌ நிகிதா கௌலுக்கு நாமும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.. நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.

“நம்பற்குரிய நம் வீரர் - தன் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர் !” என்ற நம் முண்டாசுக் கவியின் வரிகள் இங்கு நினைவு கூறத் தக்கது !

ஜெய்ஹிந்த் !

Monday, 1 April 2024

கோனார்க் சூரியனார் கோவில்


“ கல்லிலே கலைவண்ணம் கண்டான்

கண்பார்வை மறைந்தாலும் காணும் வழி தந்தான் ! “ என்று பழைய தமிழ்த் திரைப்படப் பாடல் ஒன்று.

அப்படிப்பட்ட ஒரு புகழ்பெற்ற கோவிலைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம் வாங்க பிள்ளைகளா !


இந்தக் கோயிலுக்கு வரும் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என மூன்று பருவத்தினருக்கும் மகிழ்ச்சி சேர்க்கும் வகையில் தனித்தனியாகச் சிற்பங்கள் அமைந்திருக்கின்றன.

சிறுவர்களுக்காக விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் சிற்பங்கள் மிகக் குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இளைஞர்களுக்காக ஊடல், கூடல், ஆடல் போன்ற சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. 

வயதானவர்கள் கண்டுகளிக்க ஆன்மிக சிற்பங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 

கோவிலின் அடிவாரம் முதல் கோபுர உச்சி வரை உள்ள சுவர்கள் அழகிய சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 


கோவிலின் மேலேயுள்ள மாடங்களிலும் வீணை, மார்டலா போன்ற பல்வேறு இசைக்கருவிகளை வைத்திருக்கும் ஆண் மற்றும் பெண் இசைக் கலைஞர்களின் கற்சிலைகள் உள்ளன. 

இதுபோன்ற மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தையும் கல்லிலேயே உயிரோட்டத்துடன் காட்சிகளாக்கி ஏராளமான சிற்பங்களாகச் செதுக்கி இருக்கிறார்கள் .

அதனால் தான் “ இங்கே, கல்லின்மொழி மனிதனின் மொழியை தாண்டிச் செல்கிறது" என்று வியந்து கூறியிருக்கிறார், மகாகவி ரவீந்திரநாத் தாகூர். 

இப்படி அவரை வியக்க வைத்தவை, உலகப் புகழ் பெற்ற கொனார்க் சூரியபகவான் கோவில் சிற்பங்கள் தான் .

மனிதன் முதலில் இயற்கை சக்திகளையே வழிபட்டான் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அப்படி மனிதர்கள் வழிபட்ட முக்கியமான வழிபாடுதான் ‘சூரிய வழிபாடு ‘!

இது இந்துக்களின் முக்கிய வழிபாடுகளில் ஒன்றாகவே மாறிவிட்டது . 

விவசாயத்துக்கு அடிப்படையானவற்றில் சூரியனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.‌ அந்த சூரிய பகவானுக்கு ஒவ்வொரு அறுவடையின் போதும் படையல் போட்டு வணங்கி விட்டுத்தான் விவசாயப் பெருமக்கள் சொந்தப் பயன்பாட்டுக்கோ அல்லது விற்பனைக்கோ தானியங்களை எடுத்துச் செல்வர்.

அதுதான் விவசாயிகள் தாண்டி அனைவரும் கொண்டாடும் பொங்கல், ஓணம், லோ ஹரி, மேகி பிஹு, நுவாகை ஜூஹார் பண்டிகைகள் என்று நமது நாடு முழுவதும் ஆனது.



நவக்கிரகங்களில் ஒன்றாக விளங்கும் சூரியனுக்கு, தமிழகத்திலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் தனிக்கோவில்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

அவற்றில் ஒடிசா மாநிலத்தில் உள்ள கோனார்க் என்ற இடத்தில் அமைந்தது தான் உலகப் புகழ் பெற்ற இந்தச் சூரியனார் கோவில். 


பரி கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இக்கோவில் சூரியனுடைய தேர் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

சிவப்பு மண்பாறை, கறுப்புக் கிரானைட்,  khondalite (கோண்டலைட்) பாறைகள் போன்ற மூன்று வகை கற்களினால் கட்டப்பட்டுள்ளது.


Ashlar masonry is a type of stone construction where all stones are dressed or cut to a uniform shape, size, and surface appearance. They are then laid in horizontal courses, or layers, with very little of a supporting substance called mortar between them.

 'ஆஷ்லார்' (Ashlar Technique) தொழில்நுட்பம் இந்தக் கட்டடம் கட்டும் போது பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறார்கள்.

Ashlar Technique என்பது a type of stone construction - இவ்வகைக் கட்டட அமைப்பில் பயன்படுத்தப்படும் கற்களின் உருவ அமைப்பு அதாவது shape மற்றும் மேற்புறத் தோற்றங்களும் (surface appearance) ஒரே மாதிரியாக இருக்கும்படியாக ஒரே அளவாகக் கற்கள் வெட்டப்பட்டுப்.. படுக்கை வசத்தில் அதாவது horizontalஆக அடுக்கப்படுகின்றன.  

கற்களுக்கு இடையில் மிகமிகக் குறைந்த அளவே சுண்ணாம்பு சிமெண்ட் மணல் தண்ணீர் கொண்டு தயாரிக்கப்படும் கலவை பயன்படுத்தப் படுகின்றது .

கலிங்க கட்டிடக்கலை அமைப்புப்படி, 7 குதிரைகள் பூட்டி, 24 சக்கரங்களுடன் கொண்ட தேரில் சூரியன் எழுந்தருள்வது போல தேர் வடிவில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. 

7 குதிரைகள் 7 நாட்களையும், 24 சக்கரங்கள் 24 மணி நேரத்தையும் குறிக்கும். 

சூரியன் என்றாலே சமஸ்கிருத முறைப்படி காயத்ரி.. ப்ரிஹதி.. உஷ்னிஷ்.. ஜகதி.. ட்ரிஷ்துபா.. அனுஷ்துபா.. பங்க்டி (Gayatri, Brihati, Ushnish, Jagati, Trishtubha, Anushtubha, Pankti) எனும் ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட  24 சக்கரங்களைக் கொண்ட தேரில் சூரியன் எழுந்தருளியிருப்பது தான் நமக்கு நினைவுக்கு வரும். அந்த அமைப்பில் தான் இந்தக் கோவில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

நாழிகை, நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிடும் கால ஓட்டத்திற்கு ஏற்பவும், சூரியனின் நகர்வுக்கு ஏற்பவும், சூரிய ஒளியானது மூலவரின் சிலை மீது படும் வகையிலும் கோயிலைக் கட்டியிருக்கிறார்கள்.


இந்தத் தேருக்கு 12 ஜோடிகள் (24) சக்கர அமைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. 12 ஜோடி சக்கரம் என்பது 12 மாதங்களைக் குறிப்பதாக அமைகிறது. 

ஒவ்வொரு சக்கரத்தை ஒட்டியுள்ள சிலைகள் வெவ்வேறு பருவகால நிலையைக் குறிப்பதாக அமைகிறது. 

சூரிய பகவான் சிலை அருகில் உஷா மற்றும் பிரத்யுஷா என்ற இரண்டு பெண் தெய்வங்களின் சிலைகள் உள்ளன. 

சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் என்ற விதிப்படி கொனார்க் கோயில் கிழக்கு - மேற்கு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.


11-ம் நூற்றாண்டு முதல் 15-ம் நூற்றாண்டு வரை இன்றைய ஒடிசா, வங்காளம், சத்தீஸ்கர், வட ஆந்திரா மாநிலங்களை உள்ளடக்கிட மகாநதி - கோதாவரி நதிகளுக்கு இடையேயுள்ள நிலப்பகுதிகளைக் கீழைக் கங்கர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சி புரிந்துவந்தனர். 

இதிலுள்ள திரிகலிங்கர்கள் பிரிவைச் சேர்ந்த கங்கப் பேரரசன் முதலாம் நரசிம்ம தேவரால் (1236–1264) இந்தக் கோவில் கட்டப்பட்டதாக அறிகிறோம் . 

இவர், பீகார் மற்றும் வங்காளத்தை சுல்தானியர்களிடமிருந்து கைப்பற்றியதன் நினைவாக, ஒரு நினைவு கட்டடம் எழுப்ப நினைத்தார்.

இந்து சமய மரபுகளில் ஒன்றான சௌரவ மதத்தில் சூரிய பகவான்தான் முக்கியக் கடவுள். 

அதன் பேரிலேயே சூரிய பகவான் மேல் கொண்ட பக்தியினால், சூரிய கோயில் எழுப்ப முடிவு செய்தார் அவர்.

12 ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் 1200 பணியாட்களோடு நடைபெற்ற கட்டுமானப் பணியானது சுமார் 12 ஆண்டுகள் நடைபெற்றது என்கிறது வரலாறு.

இதைக்கட்டுவதற்கு பேரரசின் 12 ஆண்டு வருமானம் செலவிடப்பட்டதாகவும் ஒரு தகவல்.

இந்தக் கோவிலுக்குள், எங்கும் தூண்கள் காணப்படவில்லை. ஒவ்வொரு கற்களுக்கும் நடுவில் இரும்புத் துண்டுகளைக் கொடுத்து இணைத்து கட்டியுள்ளனர்.

இந்தக் கோவிலின் அமைப்பு மூன்று பிரிவுகளாக இருந்துள்ளது. அதன்படி ஒவ்வொரு 4 மாதத்திலும் ஒவ்வொரு பிரிவின் வழியாக சூரிய ஒளி, மூலவர் சூரியநாதர் சிலை மீது படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

நாழிகை, நேரத்தை எவ்வளவு துல்லியமாகக் கணக்கிட்டிருக்கிறார்கள் பாருங்கள்  நம் முன்னோர் ! எவ்வளவு வானவியல் குறித்த தெளிவான அறிவு அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும் ?

இங்குள்ள தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு வாய்ந்தவை. 

இந்தத் தேரின் சக்கரத்தை நாம் தினமும் கையாளுகின்றோம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அதாவது, மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 10 ரூபாய் நோட்டின் பின்னால் இருப்பது கொனார்க் சூரிய கோயிலின் தேர்ச்சக்கரமே.

1508-ல் சுல்தான் சுலைமான் போர் தொடுத்து வந்தபோது முக்கிய கருவறையும் இதர இந்து கோயில்களும் சேதப்படுத்தப்பட்டன என்று சொல்லப்படுகிறது. 

15-வது மற்றும் 17-ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பல முறை பல்வேறு படைகளால் இக்கோயில் சூறையாடப்பட்டதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. 

இதையடுத்து, புயல், அரிப்பு காரணமாகவும், கலசத்தின் எடை அதிகமான காரணமாகவும் கட்டடம் சரிந்துள்ளது. 


புதர் மண்டிய நிலையிலிருந்த கோயில் 1,800-களில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது மீட்டெடுக்கப்பட்டு, பாதுகாக்கத் தொடங்கினர். 

தற்போது, இந்திய அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கோயிலின் கோபுரம் 1676-ம்ஆண்டிலிருந்து கருப்பு நிறமாக உள்ளது. இதனால் இது 'கருப்பு பகோடா' என்றும் அழைக்கப்படுகிறது . 

நரசிம்ம தேவரால் கட்டப்பட்ட முழுக்கோவிலும் இப்போது இல்லை. கோவிலின் சில பகுதிகள் இடிந்து விட்டாலும் மிடுக்குக் குறையவில்லை.

 சூரியக்கோவிலில் உடைந்து விழுந்த சிற்பங்கள் உள்ளிட்ட முக்கிய பொருட்களை கொனார்க் அருங்காட்சியத்தில் இன்றும் காணலாம்.


இந்தியாவில் சூரிய பகவானுக்காக அமைக்கப்பட்டு எஞ்சி நிற்கும் கோவில் கொனார்க் சூரியக்கோவில் மட்டுமே. 

கடந்த காலங்களில் படையெடுப்புகளாலும்.. பராமரிப்பின்றியும்.. கடல் அலைகளின் சீற்றத்தாலும் பெருமளவு சிதிலமடைந்து விட்ட‌ நிலையில்…

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோவிலின் பெருமையை உணர்ந்து இந்தக் கோவிலை யுனெஸ்கோ அமைப்பு 'உலகப் பண்பாட்டுச் சின்னமாக' 1984ம் ஆண்டில் அறிவித்தது. 

கோவிலைச் சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

கொனார்க்கில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் நடைபெறும் 'மஹாசப்தமி விழா' மிகவும் புகழ் பெற்றது. 

அப்போது சூரிய பகவானை தரிசிக்க லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவர். 

டிசம்பர் மாதத்தில் சூரியக்கோயில் முன் நடனத் திருவிழா ஒன்றும் நடத்தப்படுகிறது.



உலகெங்கும் மதம், கடவுள் போன்றவை மனிதர்களின் பயத்தை தூண்டவும், அவர்களை அடிமைப்படுத்தவுமே பயன்பட்டு வந்த காலத்தில் ஆன்மீகத்தையும், அறிவியலையும் ஒன்றுபடுத்தி உடலுக்கு ஆரோக்கியத்தையும், மனதுக்கு தெளிவையும் தரும் வகையில் அமைக்கப்பட்டவை தான் ஹிந்து கோயில்கள் ஆகும். ஹிந்து கோயில்களில் புதைந்திருக்கும் அறிவியல் உண்மைகள் பலவும் இன்றைய நவீன கால அறிவியல் அறிஞர்களுக்குப் புரியாத புதிராகவே இருக்கின்றன .

பாரதம் புண்ணிய பூமி ! அது எந்தக் காலம் முதற்கொண்டோ அறிவியல் உட்பட அனைத்துத் துறைகளிலும் ஆகச் சிறந்து விளங்கியது என்பது உண்மையான வரலாற்றை ஊன்றிப் படிப்பவர்களுக்கு நன்கு தெரியவரும் !

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி ! அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கம் தருவாய் போற்றி !

தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி !

தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தைத் தருவாய் போற்றி !


ஞாயிறே நலமே வாழ்க ! நாயகன் வடிவே போற்றி !

நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி !


ஓம் பாஸ்கராய வித்மஹி திவாகராய தீமஹி : தன்னோ சூர்யப் பிரசோதயாத் :

பாரத நாடு பழம் பெரும் நாடு : நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் பிள்ளைகளா ! 

இது போன்ற நல்ல விஷயங்கள் உங்கள் நண்பர்களும் தெரிந்து கொள்ள நிறைய ஷேர் செய்யுங்கள் !


வாழிய பாரத மணித்திரு நாடு ! ஜெய்ஹிந்த் !

பின் குறிப்பு : 

தகவல்கள் - பார்த்தவை: படித்தவை : கேட்டவை.

படங்கள் உதவி  : from free download in google.

Thank You Google !