108ன் சிறப்பு தெரியுமா?
படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கிறது என்கிறார்கள்.
பிரார்த்தனை, வேண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோம்.
வேத காலத்தில் ஜோதிடம் என்பது ஒரு முழுமையான அறிவியலாக இருந்து வந்துள்ளது. அரசர்களுக்கு வழி காட்டுபவர்களாக ஜோதிடர்கள் இருந்துள்ளனர்.
அதோடு தனிமனித வாழ்வில் திருமணம் செய்யும் முன்பு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது வழக்கமாக இருந்துள்ளது.
வேத ஜோதிடத்தில் 9 கிரகங்கள் 12 வீடுகளைக் கடப்பதை அடிப்படையாகக் கொண்டு தனிமனித கர்மாக்கள் கணிக்கப்பட்டன.
9*12=108
இன்றும் அது நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதோடு 27 நட்சத்திரக் கூட்டங்கள் (Constellations) 4 திசைகளில் இருப்பதும் கணக்கில் கொள்ளப்பட்டது. 27*4=108.
வேதங்களுக்கு விளக்கம் தரும் 108 உபநிடதங்கள் வேத கால நம்பிக்கையை நன்கு விளக்குகின்றன.
இந்த 108 எண்ணின் தன்மையும் மேன்மையும் நமது ரிஷிகளுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது.
நவீன கணிதவியல் உருவாவதற்குப் பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அதாவது வேத காலத்திலேயே நமது முன்னோர்கள் வானவியல் கணிதத்தில் பலப்பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
கிரகங்கள்.. நட்சத்திரங்கள் வானத்தில் உள்ள அனைத்தையும் அவர்கள் ஆராய்ந்து தெளிவான முடிவுகளுக்கு வந்துள்ளனர்.
நமது வானவியல் வல்லுநர் வணக்கத்துக்குரிய திரு. வராக மிகிரர் இந்த 108 ன் மேன்மையை அப்போதே தெளிவாக ஆராய்ந்து தனது புத்தகங்களில் எழுதியுள்ளார்.
கலிலியோ “கணக்கு என்ற மொழியைக் கொண்டு தான் கடவுள் அண்டத்தைப் படைத்துள்ளார்.. 108 என்ற எண் இதில் முக்கிய அங்கம் வகிக்கிறது” என்கிறார்.
பூமியின் விட்டத்தைப் போல் 108 மடங்கு அதிக விட்டம் கொண்டது சூரியன்.
அதேபோல் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு.
பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமும் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு.
இவைகளே முழு சூரிய கிரகணம் ஏற்பட அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது என்கின்றனர் வானியலாளர்கள்.
ஆன்மீகத்தைப் பொறுத்தவரை..
பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பது போல வைணவ திவ்ய க்ஷேத்திரங்கள் 108.
இந்து தர்ம நம்பிக்கையின் படி Gokarnaவுக்கும் கன்யாகுமரிக்கும் இடையில் உள்ள இப்போதைய கேரளா பகுதி மஹா விஷ்ணுவின் 6வது அவதாரமான பரசுராமரால் அவருடைய கோடாரியால் தூர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது என்று கூறுகிறார்கள்.
கார்த்தவீர்ய அர்ஜுனா மற்றும் மற்ற க்ஷத்திரியர்களைக் கொன்று விட்டு அந்த நிலத்தை 64 கிராமங்களாகப் பிரித்து பிராமணர்களுக்குத் தானமாக அளிக்கிறார்.
இந்த கிராமங்களில் 108 மஹா சிவ லிங்கங்களும்.. துர்காதேவி சிலைகளும் வழிபாட்டுக்காக நிறுவப்பட்டன.
இந்த 108ல்..105 கோவில்கள் கேரளாவிலும்.. 2 கர்நாடகாவிலும்.. 1 தமிழகத்தில் கன்யாகுமரியிலும் உள்ளன.
இந்த விவரங்கள் மலையாள மொழியில் எழுதப்பட்ட சிவாலா ஸ்தோத்திரம் என்ற பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பல இந்துக் கோவில்களின் கட்டுமானத்திலும் இந்த 108 என்ற எண் தொடர்புடையதாக இருக்கிறது.
முக்திநாத் க்ஷேத்திரத்தில் 108 நீரூற்றுக்கள்.
உத்தராகண்டில் ஜகேஸ்வரர் சிவன் கோவிலில் 108 சிவசந்நிதிகள்.
நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108.
அர்ச்சனையில் 108 நாமங்கள் (Ashtothram)
108 மணிகள் (beads)அல்லது உருத்திராட்சம் கொண்டவை ஜபமாலைகள் .
சீக்கிய குருமார்களும் 108 முடிச்சுகள் உள்ள கம்பளி ஜபமாலையையே பயன்படுத்துவார்களாம்.
அரச மரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை.
ஓர் எண் சிறப்பான இடம் பெறும்போது அதே எண்ணிக்கையில் பல விஷயங்களும் அமைகின்றன.
நமது இந்து தர்மம் மட்டுமல்ல உலகின் பிற நாடுகளின் மத நம்பிக்கைகள் சிலவற்றிலும் இந்த 108 என்ற எண் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
எடுத்துக்காட்டாக..
தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக நட்சத்திரங்கள்.
திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108.
ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசைகளால் வரவேற்கப்படும். இந்த ஓசை 108 வகை மனத் தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
மகா நிர்வாணத்தை அடைய 108 படிகள் உள்ளதாக புத்தமதம் கூறுகிறது.
மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
குங்ஃபூ கலையை உருவாக்கிய General Yue Fei உடலில் 108 அழுத்தப் புள்ளிகள் - Locking Hand Techniques - இருப்பதாகக் கூறியது இன்றுவரை பின்பற்றப் படுகிறது.
உடலில் 108 வர்ம அல்லது மர்ம ஸ்தானங்கள் உள்ளன என வர்மக்கலை கூறுகிறது.
108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் : பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் என்பார்கள்.
பஞ்ச பூதங்களால் ஆனது நமது உடல்… (Physical body) : மனம் அதன் எண்ணங்கள் (Subtle body) இவை கண்ணுக்குத் தெரியாத நுட்பமான தாக்கங்களை நமக்கு ஏற்படுத்துகின்றன.
இந்த உடலும் மனமும் ஒன்றுக்கொன்று மிகவும் தொடர்புடையன . அதாவது ஒன்றில் ஏற்படும் மாறுதல் மற்றதைப் பாதிக்கிறது அல்லது வலுவாக்குகிறது.
மன ஓட்டங்களைச் சீர் செய்ய தியானம் உதவுகிறது.. அதன் நல்ல விளைவு உடலைச் சீராக்குகிறது.
அதேபோல் உடலில் ஏற்படும் நல்ல மாற்றம் மன நிலையை மேன்மைப் படுத்தி விடுகிறது.
இந்த நிகழ்வுகளுக்கு 108 என்ற எண் பெரிதும் உதவுகிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
அதேபோல் சூர்ய நமஸ்காரம் என்பது 12 நிலைகளில் 9 முறை செய்யப்படுவது. ஆக 12*9 = 108 நிலைகள் (poses).
நமது இந்து தர்ம நம்பிக்கையின் படி தலை உச்சியிலிருந்து தண்டுவட அடிப்பாகம் வரை 7 சக்கரங்கள் உள்ளன :
இதில் நெஞ்சுப் பகுதியின் நடுவில் அமைந்திருக்கும் இருதய சக்கரம் முழுமையான அன்பை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது.
அந்தச் சக்கரத்தைத் தியானத்தின் மூலம் ஒருவர் திறந்து விட்டால் மன்னிக்கும் மனப்பான்மை.. மரியாதை.. இரக்கம் இவை மூலம் ஒருவரிடம் நல்ல இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்கிறார்கள்.
இந்த இருதய சக்கரமானது 108 energy lineகள் குவியும் இடமாகக் கருதப்படுகிறது.
நமது ஆயுர்வேத மருத்துவம் நமது உடலில் 108 மர்ம அல்லது இரகசியப் புள்ளிகள் உள்ளன.. அவற்றில் தசைநார்கள்.. சதைகள் மற்றும் நரம்புகள் ஒன்றிணைகின்றன என்று கூறுகிறது.
இந்தப் புள்ளிகள் உடலின் சீரான இயக்கம் நடைபெற உதவுகிறது : இவற்றில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு (imbalance) உடலில் சீரான சக்தி ஓட்டம் (energy flow) பாய்வதைத் தடுக்கிறது என்கிறார்கள்.
மொத்தத்தில் யோகாவில் கற்பிக்கப்படும் ஆசனங்கள் : மந்திர உச்சாடனங்கள் (chanting) : மூச்சுப்பயிற்சி மற்றும் இந்து தர்ம நூல்கள் - அனைத்தும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் முறையான சக்தியை (balance in energy) ஒருங்கிணைத்து அதன் மூலம் உயரிய ஆன்ம நிலையை அடைய போதிக்கின்றன.. உதவுகின்றன.
அதற்கு இந்த 108 என்ற எண் மிகவும் உதவுகிறது.
ஏனெனில் ஒவ்வொரு தனி மனிதனும் தனித்துவம் கொண்டவன். “ அவனுக்கு 108 ஆசைகள்” என்று கிராமங்களில் சொல்வார்கள்.
UNO எனப்படும் சீட்டு விளையாட்டில் 108 கார்டுகள்.
Canasta எனப்படும் பாரம்பரிய சீட்டு விளையாட்டிலும் 108 கார்டுகள் தான்.
1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும் : 0 என்பது சூன்யத்தை அல்லது ஆன்மிகச் சாதனையில் முழுமையையும் : 8 என்பது எட்டுத் திக்குகளிலும் உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்.
இப்படி 108 என்பது வரையறைக்குட்பட்ட எண்ணாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலையை உணர்த்துகிறது.