Tuesday, 2 July 2024

பெங்களூருவில் பூத்த பிரம்ம கமலம் !

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் ஒரு அபூர்வமான பூவப்பத்தி இந்தப் பதிவுல பாக்கலாம் வாங்க.

நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடி என்று பாடினான் பாரதி ! நட்சத்திரங்கள் மட்டுமா ? இதோ நானும் அப்படித்தான் என்கிறது பிரம்ம கமலம் என்றும் நிஷகாந்தி என்றும் அழைக்கப்படும் இந்த அபூர்வ மலர் !
இந்த மலரின் தாவரவியல் பெயர் (botanical name) Epiphyllum oxypetalum ஆகும் .
வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே June மாத இறுதியில் (அந்த மாத பௌர்ணமியை ஒட்டிய நாட்களில் என்றும் சிலர் சொல்கின்றனர் ) இரவில் மட்டுமே மலரக்கூடிய அபூர்வ வகை மலரான இது சில மணி நேரங்களில் குவிந்து வாடி விடுகிறது.
இது கள்ளி இனத்தைச் சேர்ந்த செடி என்பதால் இலையை நட்டு வைத்தாலே‌ செடி உண்டாகி விடுகிறது.‌ தண்டையும் நட்டு வளர்க்கலாம்.
இலையின் பக்கவாட்டில் சிறுசிறு கணுக்கள் தோன்றி, அவற்றிலிருந்து புதுஇலைகள் உருவாகும். 
அதன் கணுக்களில் புதிய மொட்டுகள் உருவாகி மலர்களாய் மலரும் என்று சொல்கிறார்கள் தாவரவியலாளர்கள்.
கடந்த 28.06.2024 வெள்ளிக்கிழமை அன்று பெங்களூரில் ககதஸ்புரா பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் எங்கள் மகன் வீட்டில் இந்தப் பிரம்ம கமலம் பூத்ததைப் படமெடுத்து whatsappல் பகிர்ந்து இருந்தனர் மருமகளும், மகனும்.

ஒரு மாதத்திற்கு முன் நான் அங்கு போயிருந்த போது இந்தச் செடியைக் காட்டினர். ஆனால் எனக்கு அதன் முக்கியத்துவம் அப்போது தெரியவில்லை.

28.06.2024 பூத்த ஒரு பூவையும்.. 29.06.2024 அன்று பூத்த 6 பிரம்ம கமலங்களையும் அவர்கள் புகைப்படம் எடுத்து அனுப்பிய போது தான் அதன் அபூர்வத் தன்மை எனக்கு விளங்கியது.

கொசு அதிகமாக இருக்கிறது என்று கதவு மற்றும் ஜன்னல் கதவுகளைச் சார்த்தி வைத்திருக்கிறார்கள்.‌ 
இரவு 8 மணி வாக்கில் குபீரென ஒரு இனிய நறுமணம் சாத்தியிருந்த கதவுகளையும் தாண்டி பரவிய போது தான் அவசர அவசரமாகக் கதவைத் திறந்து பார்த்திருக்கிறார்கள். 

இந்த அழகான அபூர்வமான மலர் அப்போது அவர்களுக்குக் காட்சி கொடுத்துள்ளது.
மிகவும் மகிழ்ச்சியாக அதைப் புகைப்படமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அதைத்தான் இப்போது பார்க்கிறீர்கள் நண்பர்களே !

இந்த வெண்ணிறம் கொண்ட மலரானது, மூன்றுவிதமான இதழ்களைக் கொண்டு அழகாக இருக்கும். 
பாரதத்தைப் பொறுத்தவரை  இமயமலைப் (இந்தியா, நேபாளம், பூட்டான், பாகிஸ்தான் மற்றும் தென்மேற்கு சீனா) பகுதிகளில் மலைகளின் இண்டு இடுக்குகளில் மலர்வதாகத் தாவரவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இது உத்தரகாண்டின் அதிகாரப்பூர்வ மாநில மலர் ஆகும்.

இத்தாவரம் தென் அமெரிக்காவின், மெக்சிக்கோ காடுகளைக் பிறப்பிடமாக கொண்டது. அங்கிருந்து இது உலகமெங்கும் பரவியுள்ளது. Princess of Night என்றும் Queen of Night என்றும் அங்கெல்லாம் அழைக்கப்படும் இது பரவிய இடங்களில் இதைச்சுற்றி உள்ளூர் தொன்மங்களும் முளைத்துள்ளன என்றும் சொல்கின்றனர். 
ஐரோப்பாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் பெத்லகேமின் நட்சத்திரம் என்று இது அறியப்படுகிறது. ஏசு பிறந்தபோது அவரைக் காண வந்த மூன்று அரசர்களுக்கு வழிகாட்டிய நட்சத்திரங்களின் குறியீடாக இதை அவர்கள் பார்க்கின்றனர்.

இலங்கையில் இது சொர்க்கத்தின் பூ என்று அறியப்படுகிறது. புத்தருக்கு அஞ்சலி செலுத்த விண்ணுலகினர் மண்ணுலகில் பூவாக வருவதாக அவர்கள் கருதுகின்றனர். 

இது தமிழ்நாட்டிலும் பரவலாக வளர்கிறது. ஹோசூர், கிருஷ்ணகிரி, தேனி, திருப்பத்தூர் சென்னையில் சில பகுதிகளில் இதைப் பலர் வீடுகளில் வளர்க்கிறார்கள்.

இந்து பாரம்பரியத்தில் சிவபெருமானை வழிபடும் ஒரு மங்கள மலராக இது கருதப்படுகிறது.

தன்னைப் பார்வதியைப் பார்க்க விடாமல் தடுத்த விநாயகரின் தலையைச் சிவபெருமான் வெட்டி விடுகிறார்.பின்னர் பார்வதி மிகவும் வேதனைப்படும் போது விநாயகரின் உடலுக்கு யானைத் தலை ஒன்றைப் பொருத்துகிறார். அந்தத் தலையும் உடலும் ஒட்டிக் கொள்ள வேணுமே ? 
அப்போது பிரம்ம தேவன் இந்தப் பூவைப் பிழிந்து அமிர்தம் போன்ற சாறெடுத்து.. அதைப் பயன்படுத்தி யானைத் தலையை விநாயகரின் உடலில் பொருத்தினார் என்று ஒரு புராணக் கதையும் சொல்கிறார்கள்.
அதேபோல் இராமாயணத்தில் சஞ்சீவினி மூலிகையின் உதவியுடன் லட்சுமணன் உயிர் பெற்ற போது தேவர்கள் மகிழ்ச்சியில் வானத்திலிருந்து பிரம்ம கமலப் பூக்களை பொழிந்ததாக நம்பப்படுகிறது. இதன் விளைவாக இந்தப் பூ பூமியில் விழுந்து பள்ளத்தாக்கில் வேரூன்றியது என்றும் கூறப்படுகிறது.

கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் துங்கநாத் ஆகிய புனிதக் கோயில்களில் சிவபெருமானை வழிபட இந்த மலர் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. 

இந்த பிரம்ம கமலம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது
குறிப்பாக, கல்லீரலில் ஏற்படும் தீங்கு விளைவுகளைக் குறைக்கவும், பாலியல் சம்பந்தமான ஆரோக்கியத்தை பேணி காக்கவும், காய்ச்சலுக்கு சிகிச்சை தரவும், காயங்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தவும், நரம்புக் கோளாறுகளைக் குணப்படுத்தவும், மாதவிடாய் பிரச்னைகளை சரி செய்யவும், தோல் பிரச்னைகளை சரி செய்யவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் இந்த பிரம்ம கமலம் பூ பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.
இப்படிப் பாரம்பரிய மருத்துவத்தில் மட்டுமின்றி.. சூப்கள் மற்றும் பழச்சாறுகள் போன்ற சில உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. 

இறைவன் படைப்பில் எத்தனை எத்தனையோ அற்புதங்கள் !கற்றது கை மண் அளவு என்பது உண்மை என்று நிரூபிப்பது போல் நாம் இன்னும் அறியாத பலப்பல அபூர்வமான விஷயங்கள் உலகத்திலும் அண்டத்திலும் பரவிக் கிடக்கின்றன இல்லையா நண்பர்களே ?
முடிந்தவரை நல்ல விஷயங்களைத் தேடித்தேடிப் படிப்போம்.. பகிர்வோம் !
நலமே விழைவு : நலமே விளைவு !

No comments:

Post a Comment