Monday, 20 July 2020
Thursday, 16 July 2020
மகப்பேறு மருந்து...பிள்ளை பெற்ற தாய் பின்பற்ற வேண்டிய முறைகள்.. குழந்தைக்கான நெறிமுறைகள்.
மகப்பேறு மருந்து
ஒவ்வொன்றும் 10 கிராம்
1. மஞ்சள்
2. சுக்கு -
3. மிளகு- 50 கிராம்
4. ஓமம்-
5. நறுக்குமூலம்
6. அக்கரா
7. சித்தரத்தை
8. திப்பிலி
9. சீரகம்
10. பெருஞ்சீரகம்
11. கருஞ்சீரகம்
12. அதிமதுரம்
13. சாரணவேர்
14. காயம்
15. வால்மிளகு
16. கிராம்பு
17. வாய்விளங்கம்
18. சனிஞாயிறு
19. ஆனைக்கொம்பு
20. அதிவிடங்கம்
21. சதகுப்பை
22. கிராணி ஓமம்
23. குறுந்தட்டி வேர்
24. நெல்லிமுள்ளி
25. விஷ்ணு கிரந்தி
26. சீந்தில் கொடி
27. கடுக்காய்
28. ஏலம்
29. பப்படப்புல்லு - கொஞ்சம்
30. வெள்ளை மிளகு
மேலே குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அனைத்தையும் வாங்கி நன்கு சுத்தம் செய்து, பெரிய வேராகவோ அல்லது தடிமனான வேராகவோ இருந்தால் நன்கு தட்டி, வெறும் வாணலியில் தனித்தனியாக இளம் சூட்டில் (simல்) நன்றாகச் சூடாகும் வரை வறுக்கவும். அதன்பின் எல்லாவற்றையும் ஒன்றாய்ச் சேர்த்து மிஷனில் கொடுத்து அரைத்து வாங்கி நன்றாக ஆறவைத்து, ஈரமோ, காற்றோ புகாத கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். கை படாமல் பத்திரமாக வைத்துக்கொண்டால் வருடக் கணக்காக இருக்கும்.
மகப்பேறு லேகியம் செய்யும் முறை
தயார் செய்து வைத்துள்ள பொடி - 1 பங்கு
பனைவெல்லம் - 1 பங்கு
நல்ல இஞ்சி - 1\2 பங்கு
தேன் - 1\4 கிலோ
நெய் 1\2 - கிலோ
1.இஞ்சியைத் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது நெய்விட்டு நன்கு வதக்கவும்.
2.பனைவெல்லத்தைத் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து இளக்கி வடிகட்டவும்.
3.இஞ்சி ஆறியபின் மிக்ஸியிலிட்டு பனைவெல்லப்பாகை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு அரைக்கவும்.
4.ஒரு அகலமான அடிகனமானப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து மீதமுள்ள பனைவெல்லப்பாகை ஊற்றவும். பின்னர் மருந்துப்பொடி, இஞ்சி விழுது ஆகியவற்றைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கட்டியின்றி கிளறவும்.
5.நன்கு திரண்டு வந்ததும் - அல்வா பதம் - மீதமுள்ள நெய் மற்றும் தேன் சேர்த்து இறக்கவும்.
6.நன்கு ஆறியபின் எவர்சில்வர் டப்பா அல்லது கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொள்ளவும்.
தயவுசெய்து பிளாஸ்டிக் டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டாம்.
7.காலை மற்றும் இரவு 2 மேசைக்கரண்டி அளவு சாப்பிட்டுவர உடல் கட்டுப்பாட்டில் இருக்கும்; தாய்ப்பால் பெருகும்; கர்ப்பப்பை சுருங்கும். பிள்ளைப்பேற்றுக்குப் பிறகு ஏற்படும் மாத விலக்கில் எந்தத் தொந்தரவும் நிச்சயம் வராது.
திருநெல்வேலிப் பக்கம் பேறுகாலத்தின்போது இந்த மருந்தைப் பயன்படுத்துவர்.
இதே பொடியைச் சாதாரணமாக நாம் பயன்படுத்தும்போது நமக்கும் நல்ல மருந்து. அலைச்சலினாலோ அல்லது அதிக வேலை பளுவினாலோ ஏற்படும் அதீதமான உடல் வலி ஏற்படும்போது தேவையான அளவு பனைவெல்லத்தை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, சற்று ஆறியதும் வடி கட்டாமல், அப்படியே குடிக்க உடல்வலி போயே போய்விடும். குழந்தைகளுக்கும் அளவைக் குறைத்துக் கொடுக்கலாம். சிறிதும் பயம் வேண்டாம். பக்க விளைவுகளோ பின் விளைவுகளோ கிடையாது. சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம்; அதற்கும் பயம் வேண்டாம். வயிறு சுத்தமாகிவிடும். அளவுக்கு அதிகமாகப் போனால் மட்டும் அதை நிறுத்த முயலுங்கள்.
ஒருநாள் விட்டு ஒருநாள் தாய் சிறிது சீரகம் நாலைந்து மிளகு சேர்த்துச் சூடேற்றிய நல்லெண்ணெயைத் தலைமுதல் கால்வரை நன்கு தேய்த்துக் குளிக்க வேண்டும்.
குளித்த பின் கட்டாயம் சாம்பிராணிப் புகை போட்டுக் கொள்ள வேண்டும்.
பதினாறு நாட்கள் கட்டாயம் இவற்றை எல்லாம் பின்பற்ற வேண்டும்.
×××××××+++++++×××××
மகப்பேறு ஆனதும் பின்பற்றப்பட வேண்டிய முறைகள்
தாய் சாப்பிட வேண்டிய உணவுகளும்.. முறைகளும்:
காலை : எழுந்தவுடன் பால் அல்லது காஃபியுடன் 2 - 3 ரொட்டித் துண்டுகள்.
08 - 08.30 - 3 இட்லி
தொட்டுக்கொள்ள : மிளகுப்பொடி
செய்முறை -
மிளகு - 1 பங்கு
உளுந்தம் பருப்பு - 2 பங்கு
கறிவேப்பிலை - 2 பங்கு
பூண்டு - 2- 3 பற்கள்
உப்பு - தேவையான அளவு.
ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு வறுத்து நன்கு பொடித்து எவர்சில்வர் டப்பா அல்லது கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்.
இட்லியுடன் இந்தப் பொடியை நல்லெண்ணெய் அல்லது நெய் நிறைய சேர்த்துச் சாப்பிடவும்.
தேவைப்பட்டால் இட்லி சாப்பிட்ட பின் பால் (சின்ன டம்ளர்) குடிக்கலாம்.
சாப்பிட்ட பின் 2 - 4 வெற்றிலை களிப்பாக்குப் பொடியுடன் சுண்ணாம்பு சேர்த்துக் கட்டாயம் போட வேண்டும்.
மதியம் -12.30 - 01.00
குழைய வேக வைத்த புழுங்கல் அரிசி சாதம் - 1 கப்
பத்தியக் குழம்பு :
குழம்புக் கரண்டிக்கு ஒரு கரண்டி மிளகு
சீரகம் - 2 tb.sp.
கருவேப்பிலை - 1 கொத்து
புளி - 1சின்ன எலுமிச்சை அளவு
மேலே சொன்னவற்றை ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு அடுப்பை மிதமாக வைத்து நன்கு வறுக்கவும்.
ஆறியதும் நன்கு விழுதாக அரைக்கவும்.
சின்ன வெங்காயம் கொஞ்சம் மற்றும் பூண்டு நிறைய - இவற்றை நல்லெண்ணெய் விட்டு நன்கு வதக்கி அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்க்கவும். உப்பும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி ஆறவைத்து எவர்சில்வர் டப்பாவில் வைக்கவும்.
கைபடாமல் வைத்துக் கொள்ள வேண்டும். 3- 4நாட்கள் வைத்துக் கொள்ளலாம்.
தொடுகாய் - பிஞ்சான கத்தரிக்காய்.. அவரைக்காய் மற்றும் புடலங்காய் பொரியல் அல்லது பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு : இவற்றை மட்டுமே 16 நாட்கள் வரை சாப்பிட வேண்டும்.
தேங்காய் சேர்க்கக்கூடாது.
துவையல் : பாசிப்பருப்பைச் சிவக்க வறுத்து இரண்டு பற்கள் பூண்டு.. உப்பு.. விதைகள் நீக்கிய வரமிளகாய் ஒரு சின்னத்துண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிடலாம்.
(பச்சைமிளகாய் கூடாது)
பத்திய ரசம் : ஒரு சின்ன எலுமிச்சை அளவு புளியை சற்றே சூடேற்றி விட்டு ஒரு ஸ்பூன் மிளகு.. ஒரு ஸ்பூன் சீரகம்.. அரை ஸ்பூன் கொத்தமல்லி விதை - இவற்றுடன் நன்கு அரைத்துக் கொதிக்க விட்டு இறக்கி நெய்யில் கடுகு மட்டும் தாளிக்கவும்.
சாப்பிட்ட பின் 10 - 15 வெற்றிலைக் கட்டாயம் போட வேண்டும்.
நிறையத் தண்ணீர் குடிக்கக் கூடாது.
அதற்குப் பதில் தான் வெற்றிலை.
வெற்றிலை - ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
களிப்பாக்கு - வயிற்றுக் கழிவுகளை நீக்கும்.
சுண்ணாம்பு - பேறு காலத்தில் இழந்த இரத்தத்தை ஈடு செய்யும்.
மாலை 4-4.30 பால் அல்லது காஃபியுடன் 2-3 ரொட்டித் துண்டுகள்.
இரவு 07.30-08 மணிக்கு.
3- 4 இட்லியுடன் இட்லிப் பொடி அல்லது பாசிப்பருப்புத் துவையல்.
சிறிது நேரம் கழித்து ஒரு கப் பால்.
படுக்கும் முன் 5-7 வெற்றிலை போட வேண்டும்.
+++++++++++++
பொதுவாகப் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்.
தாய்.. குழந்தை இருவருக்கும் குளித்த பின் சாம்பிராணிப் புகை போட வேண்டும்.
குழந்தைக்கு நாள்தோறும் காலையில் தேங்காய் எண்ணையை லேசாகச் சூடேற்றி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தளதளவென்று தேய்த்துக் காலை இளவெயிலில் காட்ட வேண்டும்.
காலை 10.30 - 11 மணியளவில் வெந்நீரில் குழந்தையை இளஞ்சூடு ஏற்றப்பட்ட தேங்காய் எண்ணெய் தேய்த்து…நன்கு கைகால்..விரல்கள்.. முதுகு… தொடைகள் என்று நீவி விட்டு சுத்தமான கடலமாவு தேய்த்துக் குளிப்பாட்ட வேண்டும்.
குளிக்க வைத்தபின் இரண்டு காதுகளையும் ஊதிவிட வேண்டும்.
சாம்பிராணி போட்டு முடித்ததும் கீழே குறிப்பிட்டுள்ள மூலிகை மருந்துகளை உரை மருந்தைக் கொடுக்க வேண்டும்.
வசம்பு ( இதைப் பேர் சொல்லாதது அல்லது பிள்ளை வளர்த்தி என்றும் கூறுவர்.) இதை நல்லெண்ணெய் விளக்கேற்றி அதில் நன்கு கருகச் சுட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
சுக்கு - இதையும் வசம்பு போல் சுட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
ஜாதிக்காய்
மாசிக்காய் - இவை இரண்டையும் நன்றாகக் கழுவி விட்டுச் சோறு நன்றாகக் கொதித்துக் கொண்டு இருக்கும் போது அதில் போட்டு ஒரு பத்து நிமிடம் சூடேற்றி.. பின் சுத்தமான தண்ணீரில் கழுவித் துடைத்து வைத்துக் கொள்ளவும்.
மிளகு - ஒரு மிளகை தையல் ஊசியில் குத்தி தணலில் காட்டிச் சுட்டு வைத்துக் கொள்ளவும்.
இவை அனைத்தையும் ஒரு சுத்தமான எவர்சில்வர் டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
தாய்ப்பால் சில சொட்டுகள் பீய்ச்சி எடுத்து சுத்தமான உரைகல்லில் இவை அனைத்தையும் தாய்ப்பால் தொட்டு ஒவ்வொரு இழுப்பு இழுத்து (அதாவது உரத்து)க் குழந்தைக்குப் போட்ட வேண்டும்.
உரைத்த பின் ஒவ்வொரு முறையும் அந்தப் பொருட்களை நன்றாகச் சுத்தமான தண்ணீரில் கழுவி… சுத்தமான வெள்ளைத் துணியில் துடைத்து டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
குறிப்பு :
குழந்தையைக் குளிப்பாட்ட வசம்பைப் பேருக்கு உரைத்தாற் போல்தான் உரைக்க வேண்டும். இது மிகவும் முக்கியம் .
இந்த உரைமருந்து குழந்தையின் உடல் முழுவதையும் சீராக வைத்துக் கொள்ள உதவும்.
நல்ல ஆழ்ந்த தூக்கத்தைக் கொடுக்கும்.
குழந்தையைக் குளிக்க எடுத்துச் செல்லும் முன் இரண்டு அல்லது மூன்று உலர்திராட்சையை வெந்நீரில் ஊற வைத்துவிட்டுச் செல்லவும்.
உரைமருந்தைக் கொடுத்த பின் ஊறிய திராட்சையை நன்கு கசக்கி சுத்தமான வெள்ளைத் துணியில் வடிகட்டி குழந்தைக்குப் போட்டிவிட வேண்டும்.
இது குழந்தையின் வயிற்றையும் சுத்தப்படுத்தி விடும்..நெஞ்சுச் சளி கட்ட விடாது.
தாய் புளிப்பு அதிகம் உள்ள பொருட்களைச் சாப்பிடக்கூடாது. அதனால் தான் புளியை வெறும் வாணலியில் நன்கு சூடேற்றிப் பயன்படுத்துகிறோம்.
ஆனால் எங்கள் வீடுகளில் அவரவர் வழக்கப்படி என்னவெல்லாம் சாப்பிடுகிறோமோ அவை அனைத்தையும்… மாம்பழம்.. பலாப்பழம் உட்பட அனைத்தையும் சிறிது சிறிது ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொன்றாய் உணவோடு சேர்த்துக் கொடுத்து விடுவார்கள்.
ஏனெனில் பின்னாளில் பிள்ளையின் வயிற்றுக்கு எல்லாம் ஒத்துக் கொள்ளும்.
தாய்ப்பால் கொடுக்கும் முன் மார்பகங்களைப் பிதுக்கிக் கட்டுப்பாலைப் பீச்சி எடுத்து விட வேண்டும்.
பால் கொடுக்கும் முன் சுத்தமான வெள்ளைத் துணியால் மார்பகங்களை நன்கு அழுத்தித் துடைத்து விட வேண்டும்.
கட்டாயம் இரண்டு பக்கமும் பாலூட்ட வேண்டும்.
தாய் படுத்துக்கொண்டு ஒருபோதும் குழந்தைக்குப் பால் கொடுக்கக் கூடாது.
பிள்ளைக்குப் புரையேற வாய்ப்புகள் அதிகம்.
எவ்வளவுக்கு எவ்வளவு தாயும் சேயும் சுத்தமாக இருக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு எந்த நோயும் அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.
எப்பொழுதேனும் தாய் குளிருவது போல் உணர்ந்தால் பத்து மிளகைப் பனைவெல்லம் சேர்த்து நன்கு பொடித்து வாயிலிட்டு மெதுவாக அந்தச் சாற்றை இறக்கவும்.
நல்வாழ்த்துக்கள் பிள்ளைகளா !
காமராஜர்...
தண்ணீருக்கு ஞாபக சக்தி உண்டு !
Monday, 13 July 2020
ஓமம்
குழந்தைகளுக்கு நன்கு பசி எடுக்க..
ஓமம் - 1 டீஸ்பூன்
கசகசா - ½ டீஸ்பூன்
காலையில் ஊறவைத்து இரவில் நன்கு அரைத்து பாலில் கலந்து கொடுக்க வேண்டும்.
வாரத்தில் 3 நாள் தொடர்ந்து 3 வாரம் கொடுக்க நன்றாகப் பசி எடுக்கும்.
×××××++++++××××××
ஓமக்களி : செரிமான சக்தியை அதிகரிக்க..
அரை டம்ளர் ஓமத்தை நன்றாக உமி போகச் சுத்தம் செய்து அரைமணி நேரம் ஊறவைத்து.. நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அடி கனமான ஒரு வாணலியை அடுப்பில் வைத்து 100-150 gm. கருப்பட்டி (பனைவெல்லம்) தட்டிப் போடவும். கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து.. பனைவெல்லக் கரைசலை ஊற்றவும். நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள ஓம விழுதைச் சேர்த்து நன்கு கிளறவும். அடுப்பைக் குறைந்த தணலில் (keep the Stove in Sim position) வைத்துச் சிறிது நேரம் கிளறவும். தளதளவென்று வரும்போது தேவையான அளவு நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
ஆறியதும் கண்ணாடி பாட்டில் அல்லது எவர்சில்வர் டப்பாவில் சேகரித்து வைக்கவும்.
தயவுசெய்து பிளாஸ்டிக் டப்பாவைத் தவிர்க்கவும்.
இது செரிமானத் தன்மையை நன்கு அதிகரிக்கும்.
நான் ஒரு அளவு(அரை டம்ளர் என்று) சொல்லி இருக்கிறேன். நீங்கள் தேவைக்கேற்ப அளவைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.
இதில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் : ஓமத்தை நன்றாக உமி போகக் கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். இல்லையேல் சிலருக்கு அதனால் வயிற்றோட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கைபடாமல் , தண்ணீர் படாமல் வைத்துப் பழக வேண்டும். இது நமது நாட்டு மருந்து எல்லாவற்றிற்கும் பொதுவான ஒரு முக்கியமான விதி !
நல்வாழ்த்துக்கள் நண்பர்களே !
நெஞ்சுச் சளி கரைய
நெஞ்சுச் சளி கரைய
அருமை அன்புப் பிள்ளைகளா !
நான் எங்கள் வீட்டில் காலங்காலமாக நாட்பட்ட சளி இருமலைக் குணமாக்க ஒரு எளிய மருந்து சொல்கிறேன்.. கேளுங்க நண்பர்களே !
1)வெற்றிலை - 1 - 2
2) பூண்டு - 2பற்கள்
3 ) சுக்கு - ஒரு சிறிய துண்டு
4 ) மிளகு - 3 - 4
5 ) சீரகம் - அரை டீஸ்பூன்
6 ) ஓமம் - அரை டீஸ்பூன்
7 ) வேப்பிலைத் துளிர் - சிறிது
எல்லாவற்றையும் நன்கு மசிய விழுதாக அரைத்து ஒரு சுண்டைக்காய் அளவு தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட நெஞ்சுச் சளி இளகி மலத்துடன் வெளியேறிவிடும்.
சிலருக்கு வாந்தி எடுத்து சளி வெளியேறி விடும்.
பக்க மற்றும் பின் விளைவுகள் கண்டிப்பாக ஏற்படாது. இது அனுபவ உண்மை.
குழந்தைகளுக்குத் தேன் கலந்து கொடுக்கலாம்.
ஒரு வயது அல்லது இரண்டு வயதுக் குழந்தைகள் என்றால் சங்கில் (பாலாடை என்றும் சொல்வார்கள்) போட்டிவிடலாம்.
பயப்பட வேண்டாம்.. நண்பர்களே !
நல்வாழ்த்துக்கள் !
நாள்பட்ட சளி.. வரட்டு இருமல்..இவற்றால் ஏற்படும் காய்ச்சல் குணமாக..
நாள்பட்ட சளி..வறட்டு இருமல்.. அவற்றைத் தொடரும் காய்ச்சல் குணமாக...
காலங்காலமாக எங்கள் வீடுகளில் அளிக்கப்படும் சளி..இருமல் அவற்றினால் ஏற்படும் காய்ச்சலுக்கு அளிக்கப்பட்டுவரும் எளிமையான கைமருந்து ! நாள்பட்ட சளி..வறட்டு இருமல்.. திரும்பத்திரும்ப இந்தக் கட்டுச் சளியினால் ஏற்படும் காய்ச்சல் கூட இந்த மருந்தினால் குணமாகிவிடும்.
1.சுக்கு
2.அக்கரா
3.சித்தரத்தை
4.நறுக்குமூலம்
5.கருடக்கொடி
6.அதிமதுரம்
7.கிராம்பு
8.வால்மிளகு
இவை அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
சுக்கு, சித்தரத்தை, அதிமதுரம் - இவை எல்லாம் தடித்த வேர்கள். அவை பிளக்குமாறு தட்டிக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கனமான வாணலியை வைத்து, நன்கு சூடேற்றி, அடுப்பை சிம்மில் (Keep the gas stove in the sim position) வைத்துக் கொண்டு ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் போட்டு வறுத்துக் கொள்ளவும். (கை பொறுக்கும் சூடு போதும்) .
ஆறிய பின் மிக்ஸியில் போட்டு அரைத்துச் சலித்து வைத்துக் கொள்ளவும்.
இதோடு ஒவ்வொரு கைப்பிடி துளசி, தூதுவளை, வெற்றிலை, ஆடாதோடை இலைகள் நொச்சி இலைகளை நன்கு சுத்தம் செய்து, நிழலில் உலர்த்திப் பொடித்து மேலே குறிப்பிட்டிருக்கும் மருந்துப் பொடியுடன் சேர்த்து நன்கு கலந்து கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். காலை, மாலை - இருவேளை ஒரு ஸ்பூன் தேனில் கலந்து சாப்பிடவும்.
ஒரு கால் மணி நேரம் வேறெந்தப் பானமோ, உணவோ எடுத்துக் கொள்ளக் கூடாது.
மற்றபடி பத்தியம் ஏதும் கிடையாது. எப்பேர்ப்பட்ட சளியையும் அறுத்து வெளிக் கொணர்ந்து விடும்.
குழந்தைகளுக்கு வயதுக்கேற்றாற்போல் அளவைக் குறைத்து, தேனில் கலந்து கொடுக்கலாம்.
பக்க விளைவுகள்.. பின் விளைவுகள் அறவே கிடையாது.
நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் நண்பர்களே !
Saturday, 11 July 2020
அழ அழச் சொல்பவன் ஆகாதவன்
ஜெங்கிஸ்கான் என்ற மன்னன் செல்லப் பிராணியாக ஒரு பருந்தை வளர்த்து வந்தான். கொடுங்கோலனான அவன் அந்தப் பருந்திடம் மிகுதியான பாசம் வைத்திருந்தான். பருந்தும் அவன் மேல் உயிரையே வைத்திருந்தது..
ஜெங்கிஸ்கான் எங்கே சென்றாலும் அந்தப் பருந்தையும் அழைத்துச் செல்வான். மற்ற நாடுகள் மேல் தாக்குதல் நடத்தி அவற்றைத் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதிலேயே தன் வாழ்நாளைக் கழித்தான். பருந்தும் அவனுடனேயே எல்லா நாடுகளுக்கும் பயணப்பட்டது.
மன்னனின் பருந்து என்பதால் சுற்றியிருந்தவர்கள் பருந்தை மரியாதையுடன் பார்த்துக் கொண்டார்கள். அரண்மனையில் ராஜ போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தது அந்தப் பருந்து.
ஒரு நாள் ஜெங்கிஸ்கான் தன் நண்பர்களுடன் வேட்டைக்குப் புறப்பட்டான். நண்பர்கள் அனைவரும் கத்தி, ஈட்டி, வில் அம்பு என்று பலவகையான ஆயுதங்களை ஏந்தி வந்தார்கள். ஜெங்கிஸ்கான் தன் செல்லப் பருந்தை மட்டுமே கொண்டு வந்தான். ""என் பருந்து நூறு வாட்களுக்குச் சமம்'' என்று நண்பர்களிடம் கர்வத்துடன் சொன்னான். அவன் குதிரையில் பயணித்த போது பருந்து கம்பீரமாக அவன்
முன்னால், குதிரை மேல் அமர்ந்து வந்தது.
பருந்தின் தலை மேல் வெள்ளியால் செய்த அழகான குல்லா ஒன்றைப் போட்டிருந்தான் ஜெங்கிஸ்கான். அந்தக் குல்லா தலையில்
இருக்கும்வரை பருந்து அவனை விட்டு விலகிச் செல்லக் கூடாது. அவனுக்கு ஏதாவது தேவை என்றால், அந்த வெள்ளிக் குல்லாவைக் கையில் எடுத்துக் கொண்டு பருந்தின் காதில் ஆணையிடுவான் ஜெங்கிஸ்கான். பருந்து பறந்து சென்று அவனது ஆணையை நிறைவேற்றி
வைக்கும்.
அன்று வேட்டையாட விலங்குகள் எங்கேயிருக்கின்றன என்று தெரியவில்லை. ஜெங்கிஸ்கான் தன் பருந்தின் தலையில் இருந்த வெள்ளிக்குல்லாவைக் கழற்றி அதன் காதில் ஏதோ சொன்னான். பருந்து பறந்து சென்று விலங்குகள் இருக்கும் இடத்தைக் காண்பித்தது.
ஜெங்கிஸ்கானும் நண்பர்களும் களைப்பு வரும்வரை வேட்டையாடினார்கள். விலங்குகளைத் தேடிக் கொண்டு ஓடியதில் ஒரு கட்டத்தில்
ஜெங்கிஸ்கான் நண்பர்களிடமிருந்து விலகி வந்துவிட்டான். மேலே பறந்தபடி வேட்டைக்கு உதவி செய்து கொண்டிருந்த பருந்து மட்டுமே அவனுடன் இருந்தது.
ஜெங்கிஸ்கானுக்கு கடுமையான தாகம் எடுத்தது. நீரைத் தேடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான். ஒரு இடத்தில் பாறையில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. பருந்தின் தலையில் இருந்த வெள்ளிக் குல்லாவைக் கழட்டி அதில் நீரைப் பிடித்தான். அவன் நீரைப் பருகும் நேரத்தில் பருந்து பறந்து வந்து அந்தத் தண்ணீரைத் தட்டிவிட்டது. தாகத்தில் தவித்துக் கொண்டிருந்த மன்னனுக்கு முதலில் பருந்தின் செயல் வியப்பாகத்தான் இருந்தது. தன் கையில் அமர்ந்திருந்த பருந்தை மென்மையாகத் தடவிக் கொடுத்துவிட்டு மீண்டும் தண்ணீரைப் பிடித்தான். குல்லாவில் நீர் நிரம்பி மன்னன் பருகும் சமயத்தில் பருந்து பறந்து வந்து மீண்டும் தண்ணீரைத் தட்டிவிட்டது. இப்போது மன்னனுக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது.
""இதே செயலை என் அமைச்சர் யாராவது செய்திருந்தால் அவரது தலையைக் கொய்திருப்பேன். நீ என் செல்லப் பிராணி என்பதால் உன்னை மன்னித்து விடுகிறேன். இனி ஒரு முறை இப்படிச் செய்தால் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை.''
ஜெங்கிஸ்கான் தன் போர் வாளை உறையிலிருந்து எடுத்துத் தன் வலக்கையில் பிடித்துக் கொண்டான். பருந்தை ஓரக்கண்ணால் பார்த்தபடி மீண்டும் தண்ணீரைப் பிடித்தான். "இந்த முறை தண்ணீரைத் தட்டிவிட்டு விளையாடினாயோ நீ செத்தாய்' என்று மனதிற்குள் கறுவிக் கொண்டான். வெள்ளிக்குல்லாவில் தண்ணீர் நிரம்ப நேரமானது. ஊற்று மிகவும் மெதுவாக வந்து கொண்டிருந்தது.
பருந்தைப் பார்த்தபடி நீரைக் குடிக்கப் போனான் மன்னன். பருந்து மன்னனை நோக்கிப் பறந்து வந்தது. வாளை வீசினான் அந்தக் கொடுங்கோலன். பருந்து வெட்டுண்டது. என்றாலும் அந்த உயிர் துறக்கும் வேளையிலும், மன்னன் கையில் இருந்த நீரின் மேல் விழுந்து அதைக் குடிக்காமல் செய்து விட்டது.
பருந்து இறந்துவிட்டது. மன்னனின் கோபம் அடங்கவில்லை. தாகம் அதைவிட அதிகமாக இருந்தது. சொட்டிக் கொண்டிருந்த நீரின்
வரத்து படிப்படியாகக் குறைந்து முற்றிலுமாக நின்று விட்டது. இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடித்து அங்கே போய் தாகசாந்தி செய்து கொள்ளலாம் என்று புறப்பட்டான். பாறையில் சிரமப்பட்டு ஏறிப் பார்த்தான். அங்கே ஒரு இடத்தில் நிறைய நீர் தேங்கி
இருந்தது. அதிலிருந்துதான் நீர் கசிந்து கொண்டிருந்தது என்பதைத் தெரிந்து கொண்டான். தேங்கியிருக்கும் அந்த நீரைக் கையால் அள்ளி அருந்தலாம் என்று நினைத்துக் கீழே குனிந்தான்.
அந்த நீர்த் தேக்கத்தில் கொடிய விஷமுள்ள கருநாகம் ஒன்று செத்துக் கிடந்தது. அந்த நீரிலேயே அது பல நாட்களாகக் கிடந்திருக்க வேண்டும். மன்னன் அந்த நீரை உண்டிருந்தால் உடனே செத்திருப்பான். அதனால்தான் பருந்து அவனை அந்த நீரை அருந்தவிடவில்லை.
உலகின் மிகப் பெரிய கொடுங்கோலனான ஜெங்கிஸ்கான், இறந்து கிடந்த பருந்தின் அருகில் அமர்ந்து அழுதான்.
நாடு திரும்பியதும் தனது தலைநகரத்தில் தங்கத்தில் ஒரு பருந்தைச் செய்து வைத்தான். அதன் ஒரு சிறகில் கீழ்க்கண்ட பொருள் விளக்கும் வாசகங்களை எழுதச் செய்தான்.
""கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும் துயரத்தையே தருகின்றன.''
மற்றொரு சிறகில் அவன் எழுதச் சொன்ன வாசகம் இன்னும் மகத்தானது
""உன்னுடைய உண்மையான நண்பன் உனக்குப் பிடிக்காத செயல்களைச் செய்தாலும் அதை உன் நன்மைக்காகவே செய்கிறான்.''
ஜெங்கிஸ்கான் கதை இத்துடன் முடிகிறது.
இதோ ஒரு கொசுறு கதை!
ஒரு செயலை எடை போடும் போது அந்தச் செயலை மட்டும் பார்க்காமல் அதைச் செய்பவர் எப்படிப்பட்டவர் என்பதையும் பார்க்க வேண்டும். நமது பெற்றோர், நம் குரு, உண்மையான நண்பர்கள் பல சமயங்களில் நமக்குப் பிடிக்காததைச் செய்வார்கள். அதற்காக அவர்களை விட்டு விலகிச் சென்று விடக் கூடாது. நம்முடைய நன்மைக்காகத்தான் அப்படிச் செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
படித்ததைப் பதிவிடுகின்றேன்
உங்கள் கருத்துக்களைத் தயவுசெய்து கமெண்ட் பகுதியில் பதிவிடவும்.
நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் நண்பர்களே !
வாழிய பாரத மணித்திருநாடு !