Monday, 11 August 2025

பழமொழித் தொகுப்பு - 2

எங்கள் கிராமத்துப் பாட்டிகள்.. எங்கள் ஆச்சி எப்போதோ சொன்னவை  !

1) பத்தியமாச் சாப்பிடுறேன்னு… பாகற்காயையும் தின்னானாம் !

2) கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல.. 

3) முன் கை நீண்டாத்தான் புறங்கை நீளும் !

4) வெறும் கையால் முழம் போடாதே ! வெறுங்கை முழம் போடுமா ?

5) வாயும் வயிறும் தான் எல்லாம் ! (அதாவது ஒரு உயிருக்கு அடிப்படைத் தேவை உணவுதான் !)

6) வாய்க்கு வந்ததப் பேசுனா வயிறு தான் காஞ்சு போகும் !

7) ஊர் கூடித் தேர் இழுக்கணும் ! உறவு கூடி குடும்பம் நடத்தணும் !

8) கோவில்ல மட்டுமே கூத்தாடி இல்ல..‌ (கூத்தாடி என்பது நடராஜப் பெருமானைக் குறிக்கும் : கடவுள் எங்கும் இருக்கிறான் என்று பொருள் ).

9) உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகுமா ?

10) கறியின் சுவை சட்டி அறியுமா ? கரண்டிக்குத் தெரியுமா ?

(கறி என்பது குழம்பைக் குறிக்கும். திருநெல்வேலிப் பக்கம் “இன்னிக்கு என்ன கறி ஒங்க வீட்ல ?” என்று கேட்கும் பழக்கம் உண்டு)

11) அஞ்சும் மூணும் அடுக்கா இருந்தா.. அறியாப் பொண்ணும் கறி சமைப்பா !

(அஞ்சு - கடுகு மிளகு சீரகம் கொத்தமல்லி - இவைகள் இருக்கும் அஞ்சறைப் பெட்டி .

மூணு - உப்பு.. புளி.‌. மிளகாய் .

அடுக்கா இருந்தா - வசதியாக இருந்தால் என்று பொருள்.)

12) நீரடிச்சு நீர் விலகுமா ?

13) நீராத்துனாலும் ஆத்தும்.. நெருப்பாத்துனாலும் ஆத்தும் !

இந்தப் பழமொழியின் விளக்கம் : வீட்டில் இழக்க முடியாத ஒரு பேரிழப்பு : 

அதிலிருந்து மீள வெறும் சொற்கள் போதாது. அந்தச் சூழ்நிலையில் எவ்வளவு பேரிழப்பாக இருந்தாலும்.. இழந்தவர் குளித்துத்தான் ஆக வேண்டும். 

பசிக்கிறதோ இல்லையோ எதாவது சமைத்த உணவைச் சாப்பிட்டுத் தான் ஆக வேண்டும்.‌ 

தண்ணீர் குடித்துத் தான் ஆக வேண்டும் !

அப்படி , அந்தத் தண்ணீரும்.. அந்த நெருப்பும் படிப்படியாக இழந்தவரை மெல்ல மெல்லத் தேற்றி விடும் !

14) பங்காளி பகை பாக்குற வரைக்கும்.. 

(இதையேதான் தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்றும் சொல்லி வைத்தார்கள்.)

அங்காளி‌ பகை ஆக்குற வரைக்கும் !

(அதாவது தாய் வழி உறவுகளான அங்காளிகள் பகை.. பல காலம் கழித்துப் பார்த்தாலும்..உணவு சமைத்துப் போட்டுச் சாப்பிட்டு விட்டால் தணிந்து விடும் என்று பொருள் )

15) இட்ட குடியும் கெட்டு..‌‌  ஏத்த குடியும் கெட்டு…

16) நாயாப் பேயா அலஞ்சான்.. நாதியத்துப் போனான் !

(வகையில்லாமல் வேலை செய்வோரை இப்படிச் சொல்வார்கள் ).

17) ஓடுற தண்ணியோட ஓடுற ஒனக்கு..‌ ஓங்கிப் பேச என்ன இருக்கு ?

18) மாட்ட ஓட்றவன் மகாதேவன் ! வண்டிய ஓட்றவன் வடிவேலன் ! 

(அதாவது ஆண்டவன் தான் நம் வாழ்க்கையை வழி நடத்துகிறான் என்று பொருள் .)

19) உடையவன் இல்லேன்னா ஒரு மொழம் கட்டை !

(அடுத்தவர்களை நம்பி ஒரு வேலையை விட்டு விடுவது நாம் இருந்து செய்வது போல் ஆகாது என்று பொருள்.)

20) கங்காணி அங்குட்டுப் போனா.. காத்தாட இவன் இங்குட்டுப் போய்டுவான் !

(கங்காணி - கண்காணிப்பவன் - Supervisor)

21) கும்பி கூழுக்கு அழுது ! கொண்டை பூவுக்கு அழுது ! 

(கும்பி - வயிறு)

22) ஏணி.. தோணி.. நார்த்தங்கா..

(ஏணி ஏற்றி விடும் : தான் ஏறாது. தோணி கரை சேர்க்கும் : தான் கரை ஏறாது .

நார்த்தங்காய் மற்ற உணவுப் பொருட்களை செரிக்க வைக்கும் : தான் செரிக்காது).

23) வடக்க பாத்த மாட மாளிகைய விடத் தெக்க பாத்த தென்னங்குடிச மேல்! 

24) அத்த மகளக் கட்டுனா அடிதடியாம்..மாமன் மகளக் கட்டுனா மச்சு வீடாம் !

25) கடலயத் தின்னா செரிக்கும்.. கல்லத் தின்னா செரிக்குமா ?

26) சோத்துத் தண்ணியும்.. சேத்துத் தண்ணியும் ஒண்ணாகுமா ?

27) கோட்டயில பொறந்தாலும் போட்ட புள்ளித் தப்பாது !

28) பொண்ணு வளத்தியோ.. பொடலு வளத்தியோ ?

(அதாவது பெண் குழந்தையும்.. புடலங்காய்ப் பிஞ்சும் மளமளவென வளர்ந்துவிடும் என்று பொருள்). 

29) வேல செய்றவன் பாவத்த நீ பத்துனா..‌ ஒம்பாவத்த யாவாரி பத்துவான்.. தெரிஞ்சுக்கோ !(பாவத்தப் பத்துதல் - வேலை செய்தவர்களை ஏமாற்றுதல்.  யாவாரி - வியாபாரி)

30) கையும் கையும் சண்ட போட்டுக்கிட்டாக் காரியம் எப்படி நடக்கும் ?

(கையும் கையும் என்பது உடன் பிறந்தவர்களைக் குறிக்கும்)

31) கண்ணு பாத்தா கை செய்யணும். 

(எதையும் சட்டென்று கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் குறிப்பவை இந்தச் சொற்கள்)

32) காது கேக்கணும் : கை செய்யணும் !

33) தேர்ந்தெடுத்து உண்டால் தேகம் நல்லாருக்கும் !

34) வயித்துக்கு வஞ்சனை செஞ்சே வாழ்நாள் பூரா கஷ்டந்தான் !

35) விலகக் கத்துக்குட்டீன்னா.. வீண் பிரச்சினைகள் வராது !

36) தெளிவாத் தெரிஞ்சுக்கோ : தைரியமா வாழலாம் !

37) வெந்ததுக்கும்.. வேகாததுக்கும் வித்தியாசம் தெரியாதவன் வீணாப் போவான் !(எதிலும் ஒரு பக்குவம் இல்லாமல் இருப்பவர்களை இப்படிச் சொல்வார்கள்)

38) கண்ணளவுதான் கையளவு !

39) வீராப்புப் பேசி வீணாப் போகாதே !

40) கடமைய முடிக்க வக்கில்லாதவன் கட்டப்பஞ்சாயத்துத் தலைவனாம் !

41) கண்டதே காட்சி.. கொண்டதே கோலம் !

42) ஆத்தா அப்பனப் பாக்க வக்கில்ல.. ஆட்டம் பாக்க ஆடுதுறை போனானாம் !

43) வெட்டிப் பேச்சு வேலைக்கு ஆவாது !

44) ஒடம்பு வளைஞ்சு வேல செய்யலே.. உள்ளம் நொந்து போவே !

45) ஒழவனும் ஒழவியும் சேத்துலகை வச்சாத்தான்.. நீ ஒக்காந்து சோத்துல கை வப்பே !

46) ஆடுற வரைக்கும் ஆட்டம் : கூடுற வரைக்கும் கூட்டம் !

47)தேடுற வரைக்கும் தேட்டம் : தெளிஞ்சு போச்சுன்னா ஓட்டம் !

48)நலிந்தோர்க்கில்லை நாளும் கிழமையும் !

49)முடியும்னு நெனச்சீன்னா மல கூட மண்ணளவுதான் !

50)முடியாதூன்னு நெனச்சீன்னா ஒரு கை மண் கூட மல அளவுடா மவனே ‌!

51) பொலம்பிக்கிட்டே இருந்தாப் பொழுது தான் போகும்‌ : பொழப்பு நடக்காது புள்ளே !

52) ஆச இருக்குத் தாசில் பண்ண… அதிர்ஷ்டம் இருக்கு..‌ கழுத மேய்க்க…

53) அவனா ? கழுத மேல ஏறிக் கைலாயமே போய்ருவானே ?

54) ஊதுற சங்க ஊதிடணும் ! விடிஞ்சா விடியுது.. விடியாட்டாப் போகுது !

(அதாவது சொல் பேச்சுக் கேட்காத ஆட்களுக்கும் பெரியவர்களாகிய நாம் எடுத்துச் சொல்ல வேண்டிய நல்லது கெட்டதைச் சொல்லி விட வேண்டும் ! கேட்டு நடந்தால் சரி  : கேட்காவிட்டால் நமக்கு ஒன்றும் நஷ்டமில்லை : அதற்காக அவர்களையும் விட்டு விடக்கூடாது என்று பொருள்)

55) வாய்க்காத் தண்ணியும் , வயக்காட்டுத் தண்ணியும் ஒண்ணல்லடா !

56) வாய்க்காத் தண்ணி ஓடுற தண்ணி : வயக்காட்டுத் தண்ணித் தேங்குன தண்ணி !

57)‌ தண்ணி வத்துனா கொளம் நாறும் ! ரத்தம் சுண்டுனா மனுஷன் நாறுவான் !

(அதாவது குளத்தில் தண்ணீர் வற்றி விட்டால் மீன்கள் மற்றும் சிறுசிறு புழுப் பூச்சிகள் இறந்து விடும். அந்த உடல்கள் காயக்காய துர்நாற்றம் வீசத் தொடங்கும் . அதேபோல் ரத்தம் குறையும் போது உடல் வலிமை குறைந்து , வேலை செய்ய முடியாமல் ஆகி.. மற்றவர்களின் ஏச்சுப் பேச்சுகளுக்கு ஆளாவான் என்று பொருள்.) 

58) பாப்பான் சாப்பாடு பசிக்கு ஓதவாது ! (அதாவது அடுத்தவர் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு அவனுடைய பசி அடங்காது என்று பொருள். பாப்பான் - பார்ப்பவன்).

59) நீர்ல துள்றது நெலத்துல துள்ளாது டோய் !

60) காட்ல இருக்கறது காட்ல இருக்கணும் ! நாட்ல இருக்கறது நாட்ல இருக்கணும் ! இல்லேன்னா.. அவ்வ்ளோதான் !

61) ஏண்டா மட்டிப் பயலே ! எகிறிக்கிட்டு ஓடுற ஆத்த.. ஏணியாப் போட்டாடா தாண்டுவே ?

62) பழைய சோத்தத் தின்னாலும்.. பாங்காத் திங்கணும்.. பசி அடங்கத் திங்கணும் !

63) நொறுவலாத் தின்னுட்டிருந்தே.. நொறுங்கிப் போய்டும் எலும்பு !(நொறுவல் - சிறு தீனி : snacks)

64) மதில் மேல் பூனையா இருடா பேராண்டி ! தப்பில்ல.. ஆனா மதி கெட்ட பூனையா இருந்துறாத !

65) முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கிறதும் கோழி தான் !அதுகளக் காபந்து பண்றதும் கோழி தான் புள்ள ! சேவலு.. சோலி முடிஞ்சுருச்சுன்னா திரும்பியே பாக்காது !

66) பொட்டைங்க நல்லாருந்தா பூமி நல்லாருக்கும் புள்ள !(பொட்டைங்க - எல்லா உயிரினங்களில் இருக்கும் பெண்பால் உயிரினங்களைக் குறிக்கும்).

67) தேட்டை போட வந்த திருட்டுப் பூனை.. தேனிக் கூட்டத்துல மாட்டுனாப்புல…

68) இஷ்டம் ஒன்னய எட போடும் ! கஷ்டம் ஒன்னயப் பொடம் போடும்! 

எங்கள் கிராமத்துப் பாட்டி ஒருவர் மிகவும் பிரியமாக இருப்பார்கள். அதேநேரம் மிகவும் உரிமையோடு திட்டவும் செய்வார்கள்  .

அவர்கள் சொன்ன சில பழமொழிகள் உங்கள் பார்வைக்கு நண்பர்களே !

69) போட்டுக் கொடுத்தவன் படுபாவி ! போடாமக் கெடுத்தவன் பெரும் பாவி ! (போட்டுக் கொடுத்தல் - கோள் மூட்டுதல்) 

70) கீழ விழும் மழ (மழை) ! மேல போகும் நெருப்பு !ஆனா மழ தாண்டா நெருப்ப அணைக்கும் !

71) ஆலமரந் தாண்டா விழுது விடும் : அத்தி மரமா விழுது விடும்? 

72) நாண்டுக்கிட்டுச்‌‌ சாகறதுக்கும் நாராயணன் வரணுண்டா பாவிப் பயலே !

73) சாகறதுக்கு ஆறுவழீன்னா வாழறதுக்கு நூறு வழிடா மவனே !

74) 'கன்னா கருப்பட்டி.. வான்னா வாயில போடு'ன்னு பேசாத புள்ள !(“க“ என்ற எழுத்தில் தொடங்குவது கருப்பட்டி என்ற ஒருசொல் மட்டுமே இல்லை : எத்தனையோ சொற்கள் இருக்கின்றன. அதேபோல்தான் “வா” என்ற எழுத்தில்  தொடங்குவது வாய் என்ற சொல் மட்டுமே இல்லை : எத்தனையோ சொற்கள் “வா” என்ற எழுத்தில் தொடங்குகின்றன ! தான் சொல்வது மட்டுமே சரி என்று விதண்டாவாதம் பேசுபவர்களிடம் இந்தப் பழமொழியைச் சொல்வார்கள்).

75) சொளவுல தட்டித் தெருவுல வாச்சாப்புல !

(சொளவு என்பது தமிழகத்தில் தென் மாவட்டங்களில் புழக்கத்தில் இருக்கும் ஒருவகை முறம் : சுளகு என்றும் சொல்வார்கள்.நுனிப் பகுதி குறுகலாகவும் அடிப்பகுதி அகலமாகவும் இருக்கும் ).

76) அண்ட அசலோட ஒத்துப் போகாதவன் விண்டதெல்லாம் வீண் பேச்சு !

77) கோழயா இருந்தாலும் இரு ! கொள்ளைத்காரனா இருக்காதே !

78) வா வீராப்பெல்லாம் வாச்சவகிட்ட மட்டுந்தான் !

(வா - வாய் :வாச்சவ - பெண்டாட்டி).

79)சோழநாட்டில் வழங்கிவரும் பழமொழிகள் :

வேதாரண்யம் விளக்கழகு, திருவாரூர்த் தேரழகு, திருவிடைமருதூர் தெருவழகு !மன்னார்குடி மதிலழகு !

(என் எண்ணத்தில் தோன்றிய மேலும் சில அழகுகள்  :

ஆற்றங்கரை நாணல் அழகு !ஆள்வோரின் நேர்மை அழகு !அழகுப் பெண்ணின் நாணம் அழகு! ஆனைக்கு அதன் சிறு அசைவு அழகோ அழகு !

மழலையின் சிரிப்பழகு !மங்கையின் பொறுமை அழகு !மரத்தின் நிழல் அழகு !மல்லிகையின் வெண்மை அழகோ அழகு !

வேந்தனுக்கு வெற்றி அழகு !மாந்தருக்கு மதிப்பு அழகு !

சார்ந்து வாழ்தல் சமூக அழகு !தாழ்ந்து போதல் யாருக்கும் அழகோ அழகு ! )

 எங்கள் ஆச்சி சொன்ன பழமொழிகள் 

80) நலிந்தோர்க்கு இல்லை நாளும் கெழமையும்.

(அதாவது உடல் நலம் இல்லாதவர்கள் பண்டிகை நாட்களில் கட்டாயம் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது இல்லை என்று பொருள்). 

81) நாலு தென்ன இருந்தா நா நாட்டாமடா !

(அதாவது நாலே நாலு தென்னை மரங்களை வைத்து நன்கு பராமரித்தால் நல்ல வருமானம் பெறலாம் என்று பொருள்).

82) விரலுக்கேத்த வீக்கம் !

(அதாவது வருமானத்துக்குள் செலவு செய்ய வேண்டும்).

83) சட்டுவம் அறியுமா சட்டி வெஞ்சன ருசி ?

(தோசை திருப்பியைத் திருநெல்வேலி பக்கம் சட்டுவம் என்பார்கள்.வெஞ்சனம் - குழம்பு).

84) வெஞ்சினம் வெஞ்சன ருசிய அறிய விடாது !

(வெஞ்சினம் - கடுமையான கோபம் : வெஞ்சனம் - குழம்பு).

85) வெளக்கு எரிஞ்சு வீடு கெட்டுப் போகாது ! (வெளக்கு - விளக்கு).

86) கண் இமைக்குத் தெரியுமா தன்னோட மதிப்பு ?

87) நாக்கு மொழ நீளம் இருந்தா நாங்க என்ன செய்றது ?

(அதாவது எப்போதும் ருசியாகச் சாப்பிட நினைக்கும் மனிதர்களைப் பற்றி இப்படிச் சொல்வார்கள்).

88) ஒரு வாழை ஒருதரந்தான் கொல தள்ளும் !

(அதாவது வாழைமரம் ஒரேயொரு முறை மட்டுமே தார் போடும்.

கொல - குலை 

“ வாழைத்தார் என்பதை வாழைக்குலை என்று தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அழைப்பார்கள்).

89)வாழைமரம் போல் ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை !

          

              








No comments:

Post a Comment