1) கறக்குறது ஒழக்குப் பாலு ஒதைக்கறது பல்லுப் போக.
2) கொண்டாங் கொடுத்தான் வூட்டுக்குப் போனியோ..குடுமி அறுபட்டு வந்தியோ ?
3) அலை அடித்து ஆழ்கடல் அழியாது!
4) துள்ளிக் குதித்த முன் சோறு காடிப் பானையில் விழும் !
5) சேக்காளி சரியா இருந்தாச் சேறு கூடச் சோறு தான் !
6) உறவு சபைக்கு.. நட்பு உள்ளத்துக்கு !
7) கற்றலுக்கு வயதில்லை ! கனிந்த நெஞ்சில் துயரில்லை !
8) நந்தன் படைத்த பண்டம் , அது நாய் பாதி.. பேய் பாதி !
9) தாத்தன் அண்டப் புளுகன் : அப்பன் ஆகாசப் புளுகன் : மவன் ஆழிப் புளுகன் !
10) தங்கச்சி புள்ள தாம் (தன்னுடைய) புள்ளைன்னாத் தனக்கெதுக்குப் புள்ள ?
11) தாய் வீட்டுக்குப் போனாலும் தன்னைப் பேணிப் போ !
12) உள்ளங்கை காயல..
ஒறவு காஞ்சு போச்சு !
நனஞ்ச கை காயல..
நட்பு காஞ்சு போச்சு !
(ஒரு வீட்டில் உள்ளங்கையால் எடுத்துச் சாப்பிடுகிறோம். சாப்பிட்டு முடித்து கை கழுவி அந்த ஈரம் காயும் முன் அந்த உறவே விட்டுப் போய் விட்டது என்று பொருள்)
13) பேய்க்கு வாக்கப்பட்டாப் புளியமரம் ஏறித்தான் ஆவோணும்!
14) கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேடுறான் பாரு !
15) மொகம் பாத்து உள்ளே போ ! மனம் பாத்து ஒறவு வை !
16) கனவுல வெத வெதச்சு.. காத்துல நாத்து நட்டாப் பயிரா வெளயும் ?
17) வெத நெல்ல வேக வச்சுத் தின்னுட்டா.. வெளச்சலுக்கு என்ன செய்வே ?
18) அக்கச்சி அங்க அங்கன்னாளாம்: தங்கச்சி இங்க இங்கன்னாளாம் : அயித்தான் எங்க எங்கன்னானாம்!
19) அக்கா வீட்டுக் கோழியத் திருடி மச்சானுக்கு விருந்தா ?
20) அடுப்படி ஒறவா ?
ஆம்பள ஒறவா ?
(அதாவது ஒரு வீட்டின் குடும்பத் தலைவி முகம் சுளிக்காமல் வரவேற்றால் தான் அந்த வீட்டில் இருப்புக் கொள்ளும் !)
21) அக்கு தொக்கு இல்லாதவனுக்குத் துக்கம் என்ன வந்தது ?
22) அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம் !
23) அஞ்சினவனுக்கு ஆனை ! அஞ்சாதவனுக்குப் பூனை !
24) அத்தாம் பெரிய ஆனைக்கு எமன்.. இத்துனூண்டு எறும்பு !
25) ஆனையும் பூனையும் ஒண்ணாகுமா ? அடுத்த வீட்டு சம்பாத்தியம் சோறு போடுமா ?
26) அகப்பட்ட நாயை அடி ! அதக் கண்ட அடுத்த நாய் காதவழி ஓடும்!
27) நண்டு கொளுத்தா..வளையில தங்காது !
28) தவளை தன் வாயால் கெடும் !
29)தண்ணித் தவளய மாதிரி கத்தாதே!
30) தவள தரைக்கு இழுக்க..
மீனு தண்ணிக்கு இழுக்க..
31) அறுத்த வயலில ஆயிரம் பறவைங்க !
(அறுவடை முடிந்த வயலில் சிதறிக் கிடக்கும் தானிய மணிகளைத் தின்னப் பறவைகள் வருவதைக் குறிக்கும்)
32) மாட மாளிகைல வாழ்ந்தாலும் மாடப்புறா போல் வாழணும் !
(மாடப்புறா இணையைப் பிரியாது)
33) வேலில போற ஓணான எடுத்து வேட்டில விட்டுக்கிட்டு…குத்துதே.. கொடையுதேன்னா ?
34) ஐயோ பாவம் பாத்தா.. ஆறு மாசத்துக்குப் பாவம் !
(சுயநலமமுள்ள மற்றும் ஏதேனும் காரியம் ஆகணும் என்றால் மட்டுமே நம்மை அணுகும் மனிதர்களைப் பற்றி இப்படிச் சொல்வார் எங்கள் ஆச்சி)
35) ஆடத் தெரியாதவ தெரு கோணல்னாளாம் !
36) கலந்த சோத்துக்குக் கஞ்சிச் சோறு மேலு !
(அதாவது மிச்சம் மீதி இருக்கிறது என்று குழம்பு, ரசம் ,காய் , மோர் என்று எல்லாவற்றையும் ஒன்றாகப் பிசைந்து சாப்பிடுவதை விட.. தண்ணீர் ஊற்றிய பழைய சோறு நன்றாக இருக்கும் !)
37) சிகப்பு ஒரு அழகு : சூடு ஒரு ருசி ! கருப்பு ஒரு அழகு : காந்தல் ஒரு ருசி !
38) அடிக் கசடு அத்தன ருசி !
39) வாய்க்கு வந்ததைப் பேசாதே ! வாங்கிக் கட்டிக் கொள்ளாதே !
40) செஞ்சதல்லாம் செஞ்சுட்டு…சாகப் போற காலத்துல ‘ சங்கரா.. சங்கரா !’ ன்னா ?
41) ஆண்டாண்டு காலம் மாண்டு புரண்டாலும் மாண்டார் மீண்டு வருவரோ ?
42) எரியற கொள்ளிய இழுத்தா.. கொதி தானா அடங்கும் !
43) நீதானே ? " சித்துக்குப் பித்தெடுத்து..சீலப் பேனுக்கு ரவுக்கை தச்சு.. கோழிக் குஞ்சுக்குக் குல்லா போட்ருவியே…!”
இது எங்கள் கிராமத்தில் வழங்கப்படும் ஒரு பழமொழி !
கொஞ்சம் விசித்திரமாக இருக்கிறது இல்லையா நண்பர்களே ?
இதைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்.
சித்து என்றால் சித்தெறும்பு .
சித்தெறும்பு என்னவெல்லாம் சாப்பிடும் ? அதற்குப் பித்தம் ஏறி விட்டால் அதைக் கண்டு பிடித்து அதற்குப் பித்தம் எடுத்து விடுவாயே !
சீலப் பேன் என்பது தலையில் பேன் பார்க்கும் போது தவறிப் போய்ச் சேலையில் விழுந்து விடும் பேன். அப்படி விழுந்து விட்டால் மிகவும் குட்டியாக இருக்கும் அதைக் கண்டு பிடிப்பது மிகவும் கடினம் .
ஆனால் அதையும் தேடிக் கண்டு பிடித்து அதற்கு ரவிக்கை அதாவது சட்டை தைத்துப் போட்டு விடுவாய்:
கோழிக்குஞ்சுக்குக் குல்லா போட்ருவே -
கோழிக்குஞ்சே அவ்வளவு குட்டியாக இருக்கும் !
அதோட தலை எவ்வளவு குட்டியூண்டு இருக்கும் ?
அந்தத் தலைக்குக் குல்லா தைத்துப் போடுவது எவ்வளவு கஷ்டமான வேலை ?
அதையே நீ செய்து விடுவாய் .
சரி.. இதையெல்லாம் யாரைப் பார்த்துச் சொல்வார்கள் என்று தானே கேட்கிறீர்கள் ?
யாராலும் செய்ய முடியாதை நான் செய்து காட்டுகிறேன் பாருங்கள் என்று வாய்ச் சவடால் பேசும் ஆட்களைக் கிண்டல் செய்ய இப்படிப் பேசுவார்கள் எங்கள் கிராமத்தில் !
44) வேவுற வூட்டுக்கு.. வெட்ற கெணறு ஆகுமா ?
(அதாவது , ஒரு வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது இப்போது தான் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கிணறு உதவாது என்பது பொருள் !)
45) கொண்டாங்கொடுத்தான் வீட்ல.. குறிப்பறிஞ்சு நடந்துக்க !
(அதாவது ஆண் (கொண்டான்) அல்லது பெண்(கொடுத்தவன்) - திருமண உறவு உள்ள வீட்டில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் !)
46) 'நரை'ம்பானேன்.. 'சிரை'ம்பானேன் ?
(அதாவது ,” உன் தலையில் நரைமுடி இருக்கிறது “ என்று ஒருவர் சொன்னால்…“ நீதான் கொஞ்சம் அதச் சிரச்சு விடேன் அதாவது மழித்து விடேன் “ என்று பதில் வருமாம்.
இதன் பொருள்.. தேவையில்லாமல் அடுத்தவர் பிரச்னையில் தலையிடக்கூடாது என்பது !)
47) திருடனுக்குத் தேள் கொட்டுனாப்புல..
48) ஆகாத பொண்டாட்டி கை பட்டாக் குத்தம்.. கால் பட்டாக் குத்தம் !
49) ஊரான் வூட்டு நெய்யே.. என் பொண்டாட்டி கையே !
50) மசமசன்னு நிக்கிற நேரத்துல.. மதுரைக்கே போய்ட்டு வந்துறலாம் !
51) தென்ன மரத்துல தேள் கொட்டுச்சாம்.. பனை மரத்துல நெறி கட்டுச்சாம் !
52) சுத்தி பனங்காடு ! சூழ சலசலப்பு !
53) பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது !
54) தண்ணில தூக்கிப் போட்டா.. நீச்சல் தானே வரும் !
55) கோட்டையில பொறந்தாலும் போட்ட புள்ளி தப்பாது !
56) எண்ணெயத் தேச்சுக்கிட்டு விழுந்து புரண்டாலும் ஒட்றது தான் ஒட்டும் !
57) காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு
58) காக்கா முட்டையிலேருந்து , கழுகுக் குஞ்சா வரும்
59) காவோலயப் பாத்துச் சிரிச்சுதான் குருத்தோலை !
(அதாவது , தானும் இப்படிக் காய்ந்து போகும் காலம் வரும் என்பதை உணராது..
அந்தக் காய்ந்த ஓலையைப் பார்த்து இப்போது தான்
அரும்பி வரும் குருத்தோலை சிரித்ததாம் ).
60) எரியிற கொள்ளியில.. எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி ?
61) எரியிற கொள்ளிய எடுத்துத் தலயச் சொறிஞ்சுக்கிட்டாப்புல !
62) எரியுற வூட்லப் புடுங்குனது ஆதாயம் !
(இந்தச் சொற்களை இரண்டு வகையாகப் பொருள் கொள்ளலாம் !
வீடு எரிந்து கொண்டிருக்கும் போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு மீட்கலாம் !
இன்னொன்று - எரிந்து கொண்டிருக்கும் வீட்டிலிருந்து திருடுன வரைக்கும் ஆதாயம் !
63) இட்ட குடியும் கெட்டு.. ஏத்த குடியும் கெட்டு !
64) பாத்திரம் அறிந்து பிச்சை இடு!
கோத்திரம் தெரிந்து
பெண்ணைக் கொடு !
65) வஞ்சித்து வாழ்வதை விடக் கெஞ்சி வாழ்வது மேல் !
66) காலப் புடிச்சு.. கையைப் புடிச்சவன்.. கடேசில கழுத்தையே புடிச்சிட்டானாம் !
67) தொசுக்குத் தோள்ள.. சுருக்குப்பை இடுப்புல..
(நடக்கத் தொடங்காத குழந்தைகளைத் தொசுக்கு என்று எங்கள் கிராமத்தில் சொல்வார்கள்.
அதாவது “ தோளில் தொற்றிக் கொள்ளும் பிள்ளை “ என்பதன் வழக்குச் சொல் .)
68) நரிக்கு நாட்டாம குடுத்தா.. கெடைக்கு ரெண்டாடு கேக்குமாம்!
69) கைக்கும் வாய்க்கும் காத தூரமா ?
70) தாயப் பழிச்சாலும் தண்ணியப் பழிக்காதே !
71) தாயத் தண்ணித் தடத்துல பாத்தா.. பொண்ண வூட்ல பாக்க வேணாம் !
72) வாத்தி புள்ள மக்கு ! வைத்யன் புள்ள நோயாளி !
73) வேணா.. வேணான்னாலும் வர்றது வந்தே தீரும் ! போறது போயே தீரும் ! நடப்பது நடந்தே தீரும் !
74) கூரை மேலப் போட்டுட்டுக்.. கெணத்துக்குள்ளத் தேடுனானாம்!
75) கூரை மேலச் சோத்த போட்டா.. கோடி காக்கா !
76 )குருவிக்குத் தக்கன ராமேஸ்வரம் !
இந்தப் பழமொழிக்கான விளக்கம்: :
நம்முடைய தகுதிக்கும், வசதிக்கும் தகுந்தது தான் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் இந்த பழமொழி உபயோகப்படுத்தப்படுகிறது.
அதென்ன குருவிக்குத் தக்கன ராமேஸ்வரம் ?
குருவிக்கும் ராமேஸ்வரத்துக்கும் என்ன தொடர்பு ?
குறி வைக்கத் தப்பாது ராமசரம் என்பதே உண்மையான பழமொழி.
ராமனின் அம்பு (ராமசரம்) குறி வைத்துவிட்டால் தப்பாது இலக்கை அடையும் என்பதே இதன் பொருள் . இதுவே நாளடைவில் பேச்சுவழக்கில் குருவிக்குத் தக்கன ராமேஸ்வரம் என்று வழங்கப்படுகிறது.
77) கள்ளன் பெருசா ? காப்பான் பெருசா ?
(90 - 95 விழுக்காட்டுக்கு மேல் கள்ளன் தான் பெரியவனாக இருக்கிறான். களவு போன பின் தான் பொருளைக் காத்துக் கொண்டு இருப்பதாக நினைத்துக் கொண்டு இருப்பவன் விழித்துக் கொள்கிறான்).
78) கள்ளன் நம்புனாலும் குள்ளன நம்பாதே !
79) வானரீயம் வந்தாலும் வாரி வைக்க ஏனமில்லே !
( அதாவது வானத்திலிருந்து செல்வாதி செல்வங்கள் வந்தாலும்.. அவற்றைப் பத்திரப் படுத்தப் போதிய வசதி இல்லை என்று பொருள். ஏனம் என்றால் பாத்திரம் ).
80) இருக்கறத விட்டுட்டு பறக்கறதப் புடிக்க நெனச்சானாம்!
81) கைல இருக்குற களாக்கா.. மரத்துல இருக்குற பலாவ விட மேல் !
(அதாவது களாக்காய் மிகவும் சிறியதாக இருக்கும் : பலாக்காய் அல்லது பலாப்பழம் பெரிதாக இருக்கும்.
கையில் இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ முயற்சிக்க வேண்டும் என்று பொருள்).
82) வெறுங்கை முழம் போடுமா ?
83) உழக்குக்குள்ள கிழக்கு மேக்கா?
84) தடி எடுத்தவனெல்லாம் தண்டக்(ல்)காரனா ?
85) கண்ணளவு தான் கைய்யளவு !
86) அதது ஒடம்பு அதது கையால் எண்சாண் !
87) மச்சான் வாச்சா மலை ஏறிப் பொழக்கலாம் !
88) அன்னு செய்யாதது.. ஆறு மாசம் !
89) பத்து விரலாலப் பாடுபட்டா.. அஞ்சு விரலால அள்ளித் திங்கலாம் !
90) கேட்டுக் குடுத்தா தானப் பிரபு. கேக்காமக் குடுத்தா தர்மப் பிரபு !
91) தாயும் தாயா இருந்தாத்தான் தாய்!
92) ஊருக்கா ? வூட்டுக்கா ?
(“ எங்கள் வீட்டில் குழந்தை பிறந்திருக்கிறது என்று யாராவது வந்து சொன்னால் “ ஊருக்கா.. வூட்டுக்கா ?” என்று தான் முதலில் கேட்பார்கள். குறிப்பாக வயதான பாட்டிகள்.
‘ ஊருக்கு ‘ என்றால் பெண் குழந்தை . அதாவது ஒரு குறிப்பிட்ட வயதில் அவள் திருமணமாகி அடுத்த வீட்டுக்குச் சென்று விடுவாள்.
‘ வூட்டுக்கு ‘ என்றால் ஆண் குழந்தை . அவன் பெற்றோருடனேயே இருப்பான் என்று பொருள்.)
93) உண்ட வூட்டுக்கு ரெண்டகம் செய்யாதே !
(ரெண்டகம் என்றால் - ரெண்டு + அகம் = ரெண்டகம் : அதாவது அந்த வீட்டில் உள்ளவர்கள் பிரிந்து போகும்படி துரோகம் செய்யாதே என்று பொருள் )
94) கை காயும் முன்னே களவாடாதே!
95) கையும் வாயும் சுத்தமா இருந்தா.. கண்ட எடத்துல குந்தித் திங்கலாம்!
(அதாவது திருடாமல்.. பொய் சொல்லாமல் வாழ்ந்தால் யாரும் உதவி செய்வார்கள் என்று பொருள்) .
96) வாய்க்கால்ல துட்டப் போட்டுட்டு.. வயல்ல தேடுனானாம் !
97) முரடன அடிச்சு வளக்கணும் : முருங்கைய ஒடிச்சு வளக்கணும் !
98) ஒழச்ச ஒடம்பு களைக்கும் ; ஒழக்காத ஒடம்பு கனக்கும் !
99) கொஞ்சலும்.. கொட்டலும் கொட்டாயிலும் கூடாது.. கொழுந்தியா பாக்கவும் கூடாதுடா மவனே !
(கொட்டலும் - குட்டுதலும் : கொட்டாயிலும் - கொட்டகையிலும் - அதாவது பொது வெளியில் என்று பொருள்)
100) மனசார வேல செஞ்சா…. மண்டியிட்டுச் சாப்டலாம் !
:
No comments:
Post a Comment