Monday, 20 October 2025

வாழ்க்கை கற்றுக் கொடுத்தவை ! (தொகுப்பு - 2)

1)அனுபவம் மெதுவாகத்தான் கற்பிக்கும் : நமது தப்புகளும் தவறுகளும் அதற்குரிய கட்டணங்கள் !

2)எங்கு அன்பு முடிகிறதோ அங்கு கொடுமை பிறக்கிறது !

3)கடுகளவு சிறந்த சிந்தனை பூசணி அளவு நல்ல பலனைத் தரும் !

4)கற்றல் என்பது தானாக நிகழ வேண்டும் : கட்டாயப்படுத்திக் கற்பிக்கப்படுவது மனதில் பதியவே பதியாது !

5)விவேகம் என்பது, சாதாரண அறிவால் செய்ய முடியாததைச் செய்வதுதான் !

6)சிக்கனமும்.. சேமிப்பும் நமது வாழ்க்கைத் தரத்தை நிச்சயம் உயர்த்தும் அன்பு நண்பா ! 

7)பாதுகாப்பின் அடித்தளம் அச்சம்! 

8)சரியாகச் சிந்திக்கத் தெரிந்து கொண்டால் உலகில் எதையும் சாதிக்கலாம் : ஏன் ? உலகையே நம் வசமாக்கலாம் !

9)அடக்கம் நல்லொழுக்கத்தின் இன்னொரு உருவம் ! அதனாலேயே மனிதனுக்கு அது ஒரு நல்ல அணிகலன் !

10)அழகுக்கும் அறனுக்கும் அரணாய் அமைவது அடக்கம் மட்டுமே !


Wednesday, 13 August 2025

வாழ்க்கை கற்றுக் கொடுத்தவை !

சில மறுக்க முடியாத   உண்மைகள் !

தொகுப்பு - 1

1) மேலழகு விரைவில் கழன்று விடும்.. உள்ளழகு உள்ளத்தில் நிறைந்து விடும் !

2 ) எந்தப் பிரச்னையையும் முழுதாக உணர்ந்தவன் தெரிந்து தெளிகிறான் : உணராதவன் ஓய்ந்து போகிறான் !

3) நேரான மரங்கள் தான் முதலில் வெட்டப்படுகின்றன !

4) வறண்ட நாவும் பசித்த வயிறும் முழுமையாக வேலை செய்யாது.. அதுவும் நீரும் உணவும் கிடைக்கவே கிடைக்காது என்னும் போது !

5) மனிதர்களுடைய மனதை வசப்படுத்தக் கூடிய செயலுக்குப் பெயர் வாக்கு வன்மை !

6) பொய் சொல்லி நீண்ட காலம் வாழ்ந்தவனும் இல்லை :  மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை !

7) பெரும்பாலான மக்களுக்கு.. அவரவரின் தற்போதைய நிலை மகிழ்ச்சியானதாக இருப்பதில்லை ! ஏதோவொரு குறை இருந்து கொண்டே இருக்கிறது !

8) அளவுக்கு அதிகமானது போல்.. அளவுக்குக் குறைவானதும் பெரிய அபாயமே !

9) இயற்கை , காலம் , பொறுமை - இம்மூன்றும் தான் மிகப்பெரிய மருத்துவர்கள் !

10) மகிழ்ச்சிக்கும்.. துயரத்திற்கும் பெரிய இடைவெளி எப்போதும் இருந்ததில்லை !

11) மனசாட்சி ஆயிரம் சாட்சிகளுக்குச் சமமானது மட்டுமல்ல.. மேலானதும் கூட !

12) வெள்ளம் உயர்ந்தால் மலர் உயரும் ! உன் உள்ளம் உயர்ந்தால் நீ உயர்வாய் அன்பு நண்பா !

13) ஒரு பலவீனமான உடல் மனதையும் பலவீனப்படுத்துகிறது . எனவே உடல் நலத்தைப் பேணுதல் மிகவும் முக்கியம் நண்பா !

14) வாழ்க்கை என்பது வாய்ச் சொல்லால் ஆனதல்ல அன்பு நண்பா ! வளமான செயல்களால் ஆனது !

15) மனதின் வேண்டுதலை நிறைவேற்றுபவர் தான் கடவுள். மதத்தின் வேண்டுதலை அல்ல !

16) எல்லோருக்கும் உடையும் புள்ளி என்று ஒன்று இருக்கிறது !

17) முட்டாள்கள் குணம் என்பது, தாங்கள் செய்ய முடியாத காரியத்தை அறிவாளிகளும் செய்ய முடியாது என்று நினைக்குமாம். அது தான் அவர்களுடைய இயல்பு !

18) உடன் இருப்பவர்களுக்கு ஓடமாக இரு ! உதறிவிட்டுப் போனவர்களுக்குப் பாடமாக இரு !

19) அவிழ்க்க முடிந்த முடிச்சை அறுக்க நினைக்காதீர்கள்.

20)!இன்று தலைகுனிந்து படித்தால் நாளை தலைநிமிர்ந்து வாழலாம்! 

21) வண்ணத்துப்பூச்சிக்கு வானத்தை விற்பவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறான்.

22) முதலில் உங்களை வெல்லுங்கள்:  பிறகு உலகை வெல்லலாம் !

23) நேர்மறையான எண்ணங்கள்... உனது வெற்று ஒலியைச் சங்கீதமாக்கும்..

உன் வெறும் அசைவை நாட்டியமாக்கும்..

புன்னகையை பெரும் சிரிப்பொலியாக்கும்…

மனதைத் தியானத்தில் திளைக்க வைக்கும்..மொத்தத்தில் வாழ்க்கையைக் கொண்டாட்டமாக்கும் !

24) எல்லாவற்றையும் விட செயல்கள் சத்தமாகப் பேசுகின்றன..

25)  ‌‌தப்பை அல்லது தவறைச் சரியாகச் செய்தவன் தலை நிமிர்ந்து வாழ்கிறான் ! நல்லதைத் தப்பாக அல்லது தவறாகப் செய்தவன் தலை குனிந்து வாழ்கிறான் !

26) விருட்சம் நீரற்றுப் போனால் கிளைகள் விறகாகி விடும் !

27) கடலில் கல் எறிவதால் கடலுக்கு  வலிப்பதில்லை.. கல் தான் காணாமல் போகும்.. விமர்சனங்கள் கல்லாக இருக்கட்டும்.. நாம் கடலாக இருப்போம் !

28) காற்றடிக்கும் திசையில் பறக்கும் பலூன் அல்ல நாம் !

29) அடித்துச் செல்லும் ஆற்றில் உதிர்ந்த இலையாக இருப்பதை விட, திடமான பாறையாக இருந்திடலாம். தப்பில்லை ! 

30) தலைமை என்பது நிர்வாகியாக இருப்பதை விட மேலானது !

31) பிரச்சினையைக் கண்டறிவதற்கு விமர்சன சிந்தனை தேவை.. ஆனால் ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான சிந்தனை தேவை !

32) “Make me proud by being worthy citizens of this world " - 

அதாவது ஒரு நன் மதிப்புள்ள உலகக் குடிமகனாக இருந்து என்னைப் பெருமைப் படுத்து ! ஒரு நண்பரின் அம்மா எப்போதும் சொல்வது !

34) அறிவைப் பெருக்கிக் கொள் !  ஆகாயமும் வசமாகும் !

35) இயல்பாக இரு ! இதயம் வலுவாகும் !

36) உண்மையை கைக்கொள் ! நேர்மை தானே வரும் !

37) ஊருக்கு நன்மை செய் ! உன் வீடு நலமாக இருக்கும் !

38) எண்ணத் தூய்மை கொள் ! வண்ண மயமாகும் உன் வாழ்க்கை !

39) ஏணி போல் இரு ! ஏற்றம் தானே வரும் !

40) ஒன்று குறைந்தால் கூட 99 தான் ! அது 100 ஆகாது ! அதனால் ஒவ்வொன்றும் சிறப்பு வாய்ந்தது தான் !

41) கடமையைச் செய் !கவலை குறைந்து வாழலாம் ! பலனை எதிர்பார்க்காதே ! பரிதவிப்பு இல்லாமல் வாழலாம் !

42) நல்ல நட்பை நாடு ! நாளும் வாழு மகிழ்வோடு !

43) “ நானை” (அதாவது “ நான் “ என்ற அகங்காரத்தை) விடு ! சேனைத் தலைவனாவாய் !

44) தொல்லைகளாகச் சிலர்:  தொடர்பவர்களாகச் சிலர் : எல்லைகளாகச் சிலர் : எல்லாமுமாகச் சிலர் : கை கொடுப்பவர்களாகச் சிலர் : காட்டிக் கொடுப்பவர்களாகச் சிலர் : வலியாகச் சிலர் : வழியாகச் சிலர் : மகிழ்ச்சி கொடுக்கச் சிலர் : மகிழ்ச்சி கெடுக்கச் சிலர் : 

இப்படி வாழ்க்கை நெடுஞ்சாலையில் தான் எத்தனை எத்தனை பேரை எதிர் கொண்டு வருகிறோம் அன்பு நண்பரே? 

நல்லவையும் அல்லவையும் கலந்தது தான் வாழ்க்கை.. இல்லையா நண்பர்களே ?

45) வெற்றி மேலும் வெற்றியை உருவாக்கும் !

46) நல்ல வாழ்க்கை வழியை வகுத்து.. உழைப்பைக் கூட்டி.. எதிர்பார்ப்புகளைக் கழித்து.. மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் !

47) அன்பு நண்பா ! 

ஒருவர் தன்னுடன் ஒத்துப் போகவில்லை என்பதற்காக அவரை ஒதுக்க வேண்டாம்.

48) ஆனால் ஏற்கத் தகாதவற்றைப் பேசும் ஒருவரை முற்றிலும் ஒதுக்கிவிட வேண்டும் !

49) சுகம் தற்காலிகமானது !அமைதி நிரந்தரமானது !

50) மகிழ்ச்சிக்குத் திறவுகோல் வெற்றி அல்ல ! வெற்றிக்குத் திறவுகோல் தான் மகிழ்ச்சி !அதனால் தான் “எதையும் முழு மனதுடன் செய்ய வேண்டும்” என்று சொன்னார்கள் நம் பெரியவர்கள் !

51) அட்டையைப் பார்த்து ஒரு புத்தகத்தை ஒருபோதும் மதிப்பிடக்கூடாது நண்பா !

52) கோபத்தை உடனே உடனே வெளிக்காட்டாமல் அடக்கி வைத்து.. தேவைப்படும் சரியான தருணத்தில் வெளிக்காட்டி ‌ உண்மையைப் புரிய வைப்பவனே அறிவார்ந்த மனிதன் !

53) நம் எண்ணங்களே உலகை அழகானதாகவும் காட்டுகிறது !அழகு அறவே அற்றதாகவும் காட்டுகிறது !

54) மனதில் திண்ணமான உறுதி இருந்தால் கடல் மேல் நடந்தே அதைக் கடக்கலாம் நண்பா !

55) பயனற்ற விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதால்..‌ வீணாவது நமது திரும்பப் பெறவே முடியாத பொன்னான நேரமும்.. நமது ஆக்கப்பூர்வமான சக்தியும் தான் நண்பா !

56) மதி கெட்டவன் பிறரை எளிதாக அவமதிக்கிறான் !‌ நிறைவான மதி உள்ளனவோ தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறான் !

57) தோல்வியைக் கண்டு அஞ்சுபவர்களைவெற்றி நெருங்குவதில்லை :தானாக ஒதுங்கிக் கொள்கிறது !

58) அணியும் உடை உனக்கும்.. உன்னைப் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரலாம் ! ஆனால் உன் முகத்தில் இருக்கும் உண்மையான மலர்ச்சி அதைவிடச் சிறந்த மகிழ்ச்சியைத் தரும் !

59) உள்ளத்தில் உண்மை இருக்குமாயின் , கால தாமதம் ஆனாலும் வெற்றி நிச்சயம் !

60) உன் குறைகளை உண்மையான நண்பன் கட்டாயம் எடுத்துச் சொல்வான் ! அவனை விட உன் எதிரி உனக்கு நன்றாக உறைக்கும்படி சுட்டிக் காட்டுவான்! 

61) உண்மையான வீரத்தின் அடையாளம், துணிவோடு கடமையைச் செய்வதே !

62) கோடையில் வியர்வையும்.. குளிர்காலக் குளிரும் இயற்கை : அவற்றைத் தாங்கிக் கொள்ள உடலையும் மனதையும் பக்குவப்படுத்த வேண்டும் !

63) அகங்காரமே எல்லா வகையான தப்புகள் மற்றும் தவறுகளுக்கு அடிப்படை !

64) கூடி வாழும் இயல்பு இல்லாதவனுக்குச் சமுதாய வாழ்வு சுகமாக இருப்பதில்லை !

65) பிறரின் தகுதியை நாம் தெரிந்து கொண்டால்.. நம் தகுதியையும் பிறர் அறிந்து கொள்வர் !

66) பெண்ணின் அன்பும்..‌ பரிவும் இருக்கும் இடத்தில் , அனைத்து வகையான மகிழ்ச்சியும் நிம்மதியும் கட்டாயம் இருக்கும் !

67) நல்ல பெண்ணின் வாழ்வு அன்பு நிறைந்தஒரு சரித்திரம் !

68) ஒருவருக்குச் செய்யும் உதவியின் பெரும் பகுதி அவருக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவதே !

69) சோதனைகள் தான் ஒரு மனிதனுக்கு..‌ அவனுக்கே அவனை அறிமுகப்படுத்துகின்றன !

70) அன்பு ஒன்றே உலகின் அனைத்துச் சக்திகளையும் விட‌ அதிகமான ஆற்றல் படைத்தது !

71) கனமுள்ள தராசுத் தட்டு தான் தாழ்ந்திருக்கும் ! அதேபோல நிறைந்த அறிவுடைய நல்லவர்கள் மிகவும் அடக்கத்துடனே இருப்பர் !

72) ஒரு நல்ல பெண் பொறுமையில் இமயம் போலும்.. மண் மகளைப் போலும் இருப்பாள்! 

73) எதற்கும் தயங்குவோரும்.. அஞ்சுவோரும் இந்த உலகில் எதையும் சாதிக்க முடியாது !

74) உடல் மெலிந்தாலும்.. உள்ளம் மெலியக் கூடாது !

75) நாவை வென்றால் உலகை வெல்லலாம் !

76) பலம் பொருந்திய நூறு கைகளை விட.. திறம் வாய்ந்த ஒரு மூளையே சிறந்தது !

77) பழகி விட்டால் எத்தகைய கடினமான வேலையும் எளிதாகத் தோன்றும் !

78) பெண்ணுரிமை இல்லாத நாடு.. காற்றில்லாத வீடு !

79) நீந்தாதவன் கடலைக் கடக்க முடியாது ! செயல்படாதவன் முன்னேற முடியாது !

80) தற்பெருமை முடியும் இடத்தில் ஒழுக்கம் உருவாகிறது !

81)சூழ்நிலைகள் பலவீனமான எண்ணம் கொண்டவர்களுக்கு எஜமானர்கள் : அறிவாளிகளுக்கு அவையே நம்பிக்கைகள் !

82) தீமையான சொற்களால் தான் தீமையான செயல்கள் இரட்டிப்பாகின்றன !

அதனால் தான் எப்போதும் நல்லதையே நினைக்க வேண்டும் என்றனர் நம் முன்னோர் .

83)நம் வாழ்வின் உயர்வோ தாழ்வோ இருப்பது நம் நாக்கின் நுனியில் - அதாவது நம் பேச்சில் !

84) நல்ல மனிதர்களின் நட்பு நாளடைவில் நம்மையும் நல்ல மனிதர்களாக ஆக்கிவிடும் நண்பா! 

85) நாம் செய்ய வேண்டிய செயல்களை நாம் தீர்மானிப்பது போல்.. நம் செயல்களும், நம்மைக் கவனிப்பவர்களை, நம்மைக் குறித்துத் தீர்மானம் செய்ய வைக்கின்றன !

86) முடியாது என்ற சொல்லே நம் எண்ணத்தில் இருக்கக் கூடாது நண்பா !

87) தானாகக் கிடைக்கும் எதற்கும் மதிப்பு மிகவும் குறைவு என்பதை நம் மனதில் எப்போதும் கொள்ள வேண்டும் அன்பு நண்பா !

88)அனுபவமின்றி யாரும் அறிவாளி ஆவதில்லை !

89)பொறுமையே பெரிய சொத்து ! நேர்மையே வெற்றி ! அமைதியே ஆற்றல் !

90)உடலுக்கு உடை எப்படியோ அப்படியே உள்ளத்துக்கு நல்ல குணங்கள் !

91)சூழ்நிலைகள் பலவீனமான எண்ணம் கொண்டவர்களுக்கு எஜமானர்கள் : அறிவாளிகளுக்கு அவையே நம்பிக்கைகள் !

92) தீமையான சொற்களால் தான் தீமையான செயல்கள் இரட்டிப்பாகின்றன !

அதனால் தான் எப்போதும் நல்லதையே நினைக்க வேண்டும் என்றனர் நம் முன்னோர் .

93)நம் வாழ்வின் உயர்வோ தாழ்வோ இருப்பது நம் நாக்கின் நுனியில் - அதாவது நம் பேச்சில் !

94) நல்ல மனிதர்களின் நட்பு நாளடைவில் நம்மையும் நல்ல மனிதர்களாக ஆக்கிவிடும் நண்பா! 

95) நாம் செய்ய வேண்டிய செயல்களை நாம் தீர்மானிப்பது போல்.. நம் செயல்களும், நம்மைக் கவனிப்பவர்களை, நம்மைக் குறித்துத் தீர்மானம் செய்ய வைக்கின்றன !

96) முடியாது என்ற சொல்லே நம் எண்ணத்தில் இருக்கக் கூடாது நண்பா !

97) தானாகக் கிடைக்கும் எதற்கும் மதிப்பு மிகவும் குறைவு என்பதை நம் மனதில் எப்போதும் கொள்ள வேண்டும் அன்பு நண்பா !

98)அனுபவமின்றி யாரும் அறிவாளி ஆவதில்லை !

99)பொறுமையே பெரிய சொத்து ! நேர்மையே வெற்றி ! அமைதியே ஆற்றல் !

100) உடலுக்கு உடை எப்படியோ அப்படியே உள்ளத்துக்கு நல்ல குணங்கள் !

               +++++++++++++++



நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல பழக்க வழக்கங்கள் !

உண்மையான அன்பு.

நேர்மையை எப்போதும் பேணுதல்.

உதவி கேட்டு வருபவர்களுக்கு நம்மால் ஆனதை உடனே செய்தல் : அதை அத்தோடு மறந்து விடுதல்.

நன்றாகப் படிக்கும் பொருளாதார ரீதியாக வசதி குறைவான பிள்ளைகளுக்கு நம்மால் முடிந்த அளவு பண உதவி செய்தல்.

நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை எல்லா வகையிலும் நன்றாகக் கவனித்து வழி அனுப்புதல்.

கூடுமானவரை நமது பாரம்பரிய உணவு முறைகளைப் பின்பற்றுதல் : 

" உணவே மருந்து மருந்தே உணவு"  என்ற கொள்கையைக் கடைப்பிடித்தல்.

வீட்டைச் சுத்தமாகப் பராமரித்தல் : குறிப்பாகச் சமையல் அறை மற்றும் கழிப்பறை .. குளியலறை .

எந்த வேலையானாலும் Smart Work : not Hard Work.

Smart Work என்பது ஒரு விஷயத்தை எல்லாக் கோணங்களிலும் நன்கு ஆராய்ந்து அதைச் செயல்படுத்த ஆரம்பித்தல் !

Hard Work என்பது வெறும் உடல் உழைப்பு மட்டுமே !

தமிழில் பிழையின்றி எழுதுதல்.

குடும்பத்தில் அல்லது நட்பு வட்டத்தில்.. பாதிப்பு ஏற்படுத்தும் விஷயங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு‌க் கூடுமானவரை சுமூகமாகத் தீர்வு காண முயலுதல் : தொடர்ந்த முயற்சிகளுக்குப் பின்னும் முடியவில்லை என்றால் சில காலம் ஒதுங்கி இருத்தல்.

உணர்ந்து வந்தாலும்.. உணராமல் வந்தாலும்.. வந்து விட்டார்கள் என்றால் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மனதாரக் கவனித்து வழி அனுப்புதல். 

பழைய பிரச்சனைகளைக் கிளப்பாது இருத்தல்.

நமக்குத் தெரிந்த நல்ல குணமுள்ள பிள்ளைகளுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு நல்ல வழி காட்டுதல்.

யாரிடமும்.. எந்தச் சூழ்நிலையிலும் எதையும்.. எங்கேயும் எதிர்பாராமல் இருத்தல்.

இராணுவ வீரர்களை மனதார மதித்தல். அவர்களின் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காக மனதாரப் பிரார்த்தித்தல் !

எல்லாவற்றிற்கும் மேல் நாட்டுப்பற்று : “ பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்ததுவே” என்பதை எப்போதும் மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்ளுதல்.

மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை அன்புநண்பர்களே !

இதற்கெல்லாம் மேலாக " வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் அதுவும் உந்தன் விருப்பன்றே “ என்று இறைவனிடம் பரிபூரண சரணாகதி அடைந்து விடுதல்.

அடிக்குறிப்பு :

ஏதோ எழுத வேண்டும் என்று எழுதவில்லை அன்பு நண்பர்களே! 

Me and my husband lived a Very Much Contented Life என்றால் மேலே சொன்னவைகளைப் பின்பற்றியதால் மட்டுமே என்று இந்த எளியவளால் அறுதியிட்டுக் கூற முடியும்.

                +++++++++++++

ஒரு மனிதன் மன அழுத்தத்திற்கு எவையெல்லாம் காரணங்களாக அமைகின்றன?

எவையெல்லாம் என்று கேட்டால் எல்லாமே தான். வாழ்க்கையின் ஒவ்வொரு ஆளும்.. ஒவ்வொரு பொருளும் நமது மன அழுத்தத்திற்குக் காரணமாக இருக்கிறார்.. இருக்கிறது .

இந்த எளியவளைப் பொறுத்தவரை எது வந்தாலும் ஏற்றுக் கொண்டு.. எதிர்த்து நின்று சமாளிக்கும் மனப் பக்குவம் இல்லாமை தான் மிக முக்கியமான காரணம் என்பேன்.

இன்னொரு விஷயம் : நமக்கு மட்டுமே இதெல்லாம் நடக்கிறது என்று தீவிரமாக நினைப்பது.

" முன் பின்னாய்த் துயரம் முனிவருக்கும் உண்டு " என்று எப்போதோ ஒரு கவிதையில் எழுதினேன் இந்த எளியவள்.

உலகில் இருக்கும் அத்தனை உயிர்களுக்கும்.. கவனியுங்கள்.. மனிதர்களுக்கு மட்டுமல்ல.. எல்லா உயிர்களுக்கும் பிரச்னைகள் நாள்தோறும் உண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

" தம்மின் மெலியாரைக் கண்டு தமதுடைமை அம்மா பெரிதென்று அகமகிழ்க !" என்கிறார் வணக்கத்துக்குரிய குமரகுருபரப் பெருமான்.

இதையே தான் கவிஞர் திரு.‌ கண்ணதாசன் அவர்கள் எளிமைப்படுத்தி.. " உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு !" என்று சொல்லிச் சென்றார்.

எதையும் நாம் காணும் அல்லது அணுகும் முறையில் தான் இருக்கிறது மன அழுத்தம் வருவதும்.. வராமல் இருப்பதும் !

நேர்மையான மனத் துணிவோடு பிரச்னைகளைச் சமாளிக்கப் பழகிக் கொண்டால் மன அழுத்தம் என்ற சொற்களுக்கு நம் வாழ்வில் இடமே இருக்காது !

          +++++++++++++++++++

அனுபவம் பேசுகிறது !

அன்பு செய்யத் தெரிகிற மனதுக்குத் தான் வெறுக்கவும் தெரிகிறது : குணமுள்ள இடத்தில் தான் கோபமும் இருக்கிறது : ஏனெனில் அணைக்கிற கைகள் தானே அடிக்கவும் செய்கிறது ?

மலராத மொட்டு, சருகான மலர், வெம்பிய பிஞ்சு, வதங்கிய காய், அழுகிய கனி - இவைகளுக்கு மதிப்பேது ?

நீலவானம் கேட்கவில்லை என்று வானம்பாடிப் பறவை பாடாது இருப்பதில்லை !

எண்ணங்களே மனிதனை உருவாக்குகின்றன . வீரனாக வேண்டும் என்று நினைக்கிறவன் வீரனாகிறான் : எழுத நினைப்பவன் வரலாறு படைக்கிறான் : 

மக்கள் மனங்களைப் படிக்கத் தெரிந்தவன் தலைவனாகிறான் !

சின்ன வயதிலேயே தழும்பு ஏறி விட்டால் பெரிய வயசில் காயம் ஏற்படுவதில்லை : ஏற்பட்டாலும் காயமாக வலிப்பதில்லை !

நமக்கு உரிமை இல்லாத பொருட்களின் மீது அன்பு வைக்கக் கூடாது என்று அறிவிற்கு நன்றாகத் தெரிகிறது : பாழும் மனதிற்குத் தான் தெரிய மாட்டேன் என்கிறது !

சிதறிவிட்ட நீர்த் துளிகள் ஒன்று சேருமோ ? சென்று விட்ட நாட்கள் இன்று ஒன்று கூடுமோ ?

ஆசை, பாசம் , சொந்த பந்தம் எல்லாம் விலகுவதினால்‌‌ லட்சியங்கள் அழிந்து போவதில்லை: ஏனெனில் லட்சியங்களை அவை உருவாக்குவது இல்லை !

உண்மையான அன்பிற்கு உருவங்கள் தேவையில்லை : உண்மையான நட்பிற்குச் சந்திப்புகள் தேவையில்லை !

சூதும் வாதும் நிறைந்த உலகில் நல்லார் ஓதும் வழி நடந்தால் துயரம் குறையும் : நெஞ்சே இதில் ஐயம் கொள்ளாதே !

ஆபத்துக்கு உதவாத நண்பனும்..‌ அரும்பசிக்கு உதவாத அன்னமும் பயனற்றவை !

 நினைத்ததும் சாவது எளிது : பிறர் நம்மை நினைக்கச் சாவது அரிது !

வாழ்வும் சாவும் உடன் பிறப்புகள் !

மரத்தில் பூத்த பூவும் முடிவில் மண் கன்னத்தில் முத்தம் கொடுக்கும் !

கலி யுகத்தில் அஞ்சாமல் வாழ வேண்டிய நல்லவர்கள், அஞ்சி அஞ்சி அடங்கி விடுகிறார்கள் : 

அஞ்சி அஞ்சிச் சாக வேண்டிய கயவர்கள் தலைநிமிர்ந்து திரிகிறார்கள் !

அறுந்த பட்டம் என்று ஒன்று இல்லை. அது உலக வழக்கெனும் உயர் நீள் கயிற்றில் உலாவும் பட்டம் !

எரித்திடும் தீயை இளநிலா வாழ்த்துமோ ?

கனி பறிக்கிறோம் என்று கருதிப் பிஞ்சைப் பறிப்பதால் என்ன பெறுவோம் ?

கூர்முட் செடி என்று கூறி மலர்கள் மலர மறுத்தல் உண்டோ ?

தீயதற்கு இலவம் பஞ்சு நிபந்தனைகள் செப்ப வந்தால், வாய்க்கழகு என்று அதனைத் கேட்கும் வழக்கம் உண்டோ ?

முல்லைக் கொல்லையில் தென்றல் மோதிட ஒரு சில இதழ்கள் உதிர்ந்தன என்றால் முல்லைக் கொல்லையே பாழ் என்றிடல் நன்றோ ?

முகஸ்துதி ஒழுக்கத்தின் சாவு மணி !

காதலுக்கு அழகை மட்டும் நம்பிப் போகிறவர்கள், ஓட்டைப் படகில் உல்லாசப் பயணம் செய்பவர்களின் கதியைத் தான் அடைவார்கள்.

உண்மையான வெற்றி பெற  நினைக்கும் மனிதன் யாருடைய பரிந்துரை மற்றும் ஆதரவை எதிர்பார்ப்பதில்லை.. நம்புவதில்லை.

தன் திறமையை மட்டுமே அவன் நம்புகிறான் !

மலரின் உண்மையை அதன் மணமும், 

செயல் திறனை ஒருவரது சொல்லும், 

நெஞ்சகத்துள்ள தீமையை ஒருவரது எண்ணங்களும்.. பேச்சும் , உள்ளக் குறிப்பை முகமும் உணர்த்தும் !

புயல் சூழ்ந்த கடலிடையே நம்மை வழி நடத்திச் செல்வது‌ நமது நம்பிக்கையே !

                   +++++++++++++++

      பொருள் பொதிந்த வாழ்வு !

இருளைப் போக்கும் ஒளியைப் போன்ற ஒரு உயிராக இரு! 

பசிக்கும் உயிருக்கு உணவு கொடுக்கும் ஒரு உயிராக இரு !

தாகம் தணிக்கும் தண்ணீர் தரும் ஒரு உயிராக இரு !

பரிதவிக்கும் ஒரு உயிருக்கு ஆறுதல் நல்கும் ஒரு உயிராக இரு! 

துயரத்தில் துவளும் ஒரு உயிருக்கு தோள் கொடுக்கும் ஒரு உயிராக இரு !

ஆணோ.. பெண்ணோ நமது மனப்பான்மையை மாற்றிக் கொண்டு , சக உயிர்களுக்காகவும் கொஞ்சம் வாழ முயன்றால்.. 

நீண்ட காலம் நிலைத்திருக்கும் அமைதி அளிக்கப்பட்டு 

ஆண்டவனால் நிச்சயமாக நாம் ஆசீர்வதிக்கப் படுவோம் !

அப்போது சமூகத்திலும் மகிழ்ச்சி மலரத் தொடங்கி விடும் !

அர்த்தமுள்ள வாழ்க்கை என்றால் அதுதான் அன்பு நண்பா !

                 ‌+++++++++++++

வாழ்க்கை சார்ந்த            விதிமுறைகள் !

1) இறையச்சம் 

2) உண்மை (Sathyam)

3)‌ நேர்மை (Straightforwardness)

4) ஆய்ந்து.. ஆராய்ந்து புத்திசாலித்தனம் நிறைந்த வேலை பார்க்கும் முறை (Smart Work )

5) உண்மையான அன்பு (Real Affection)

6)‌விட்டுக் கொடுத்துப் போதல் . (Adjustment)

7) நம்மிடம் உதவி நாடி வரும் எளியவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு உதவி செய்தல். (Philanthropism)

8) நம்மால் முடிந்த சமுதாயத் தொண்டு. (Social Service)

9) எதையும் ஒத்துக் கொள்ளுதல். குறிப்பாக நல்லவைகளை (Acceptance).

10) அடுத்தவர் செய்யும் நல்ல காரியங்களைப் பாராட்டுதல்.(Appreciation)

11) அதேபோல் உறவு மற்றும் நட்பு வட்டத்தில் யாரேனும் தேவையற்ற செயல்களைச் செய்யும் போது.. அதைத் தவிர்க்கும்படி முடிந்தவரை எடுத்துச் சொல்லுதல் .

12) எதிலும் ஒரு ஒழுங்கு (Discipline)

13) ஒரு அக்கறையோடு செய்யும் செயல் .(Devotion -‌ இந்த ஆங்கிலச் சொல் இந ஆன்மீகத்திற்கு மட்டுமல்ல.. நாம் செய்யும் எந்த நல்ல வேலைக்கும் பொருந்தும்).

13)முடிவெடுக்கும் திறன் (Decision Making ).

( “ எண்ணித் துணிக கர்மம் “ என்று இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை சொல்லி வைத்துள்ளார்.)

14) உறுதியான போக்கு (Determination)

15) செய்யும் செயல்களில் அர்ப்பணிப்பு உணர்வு (Dedication)

முயன்ற வரை பின்பற்றுவோம் !அன்பு நண்பர்களே !

நலமே விழைவு !

நலமே விளைவு  !

            ++++++++++++++

உங்கள் வாழ்க்கையின் தலைசிறந்த வாழ்க்கை விதிகள் என்னென்ன ?

ஒரு நண்பர் கேட்ட இந்தக் கேள்விக்கு எனது பதில் !

1) வாழு.. வாழ விடு !

2) யாரிடமும் உண்மையான அன்புடன் இரு !

3) அன்பு வை.. ஆசை வைக்காதே !நேசம் வை.. பாசம் வைக்காதே!அன்பும் நேசமும் நிலையானவை : ஆசையும் பாசமும் தாற்காலிகமானவை!

4) எவ்வளவு இக்கட்டுகள் வந்ததாலும் நேர்மை தவறாதே !

5) உனக்குப் பசிப்பது போலத்தான் எல்லா உயிர்களுக்கும் பசிக்கும்.

6) முடிந்தால் மனதோடு உதவி செய்.. இல்லையென்றால் தொல்லை செய்யாதே !

7) திருந்தாத துஷ்டனைக் கண்டால் தூர விலகு !

8) எவ்வளவு முடியுமோ அவ்வளவு விட்டுக் கொடுத்துப் போ.. முடியவே இல்லை என்றால் மொத்தமாக ஒதுங்கி விடு !

9) ஒத்துக் கொள் அல்லது ஒதுங்கிக் கொள்! அதாவது எந்த வேலையோ.. பிரச்சனையோ யோசித்து ஒத்துக் கொண்டு விட்டால் ஒதுங்காதே ! ஒதுங்கிக் கொண்டு விட்டால் திரும்பப் போய் ஒத்துக் கொள்ளாதே !

10) எல்லாவற்றிற்கும் மேல் வீடெல்லாம் சேர்ந்தது தான் நாடு : ஆனால் நாடு நல்லா இருந்தால் தான் வீடு நல்லா இருக்கும் ! அதனால் நாட்டை நேசி .. நாட்டுப்பற்று மிகவும் முக்கியம் !

மேலேயுள்ள அனைத்தும் என் அம்மா என் மனதில் பதிய வைத்துச் சென்ற வாழ்க்கை விதிகள் !

95 விழுக்காடு கடைப்பிடித்து வாழ்க்கையின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டேன் !

நலமே வாழ நல்வாழ்த்துக்கள் அன்பு நண்பரே !

            ++++++++++++ 

உன்னுடைய நோக்கம் தூய்மை ஆனதென்றால்… நீயே எதிர்பாராத நேரத்தில்.. எதிர்பாராத இடத்திலிருந்து உனக்கு உதவிகள் தேடிவரும் நண்பா !

எதை அளக்க அல்லது அளவிட முடியாதோ அதை நிர்வகிக்க முடியாது ! எதை நிர்வகிக்க முடியவில்லையோ அதை அளக்க அல்லது அளவிட முடியாது !

குடும்பத்தைச் சுமப்பவன் கோமாளி ! விட்டுக் கொடுத்துப் போகிறவன் ஏமாளி !

பொதுநலம் நினைப்பவன் பிழைக்கத் தெரியாதவன் !சுயநலம் மிக்கவன்சொர்க்கவாசி! இதுதான் சமூகம் நம்மைப் பார்க்கும் பார்வை நண்பா !

பாண்டவர்கள் உரிமை இருந்தும் காப்பாற்றத் தெரியாதவர்கள் !கௌரவர்கள் உரிமைக்காக எந்த எல்லைக்கும் போகத் துணிந்தவர்கள் ! நாம் யாரைப் பின்பற்ற வேண்டும் என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும் !

நித்திய கர்மத்தை நீ செய் !செயலின்மையை விடச் செயல் சிறந்தது. செயல் செய்யாதவனுக்கு தன் உடலைப் பேணுதல் கூட இயலாது ! (பகவத் கீதை )

தீமையான சொற்களைப் பயன்படுத்துவதைக் கூடுமானவரை தவிர்த்து விடுவோம் ! ஏனெனில் அவைகளால் தான் தீமையான செயல்கள் விளைகின்றன : இரட்டிப்பாகவும் ஆகின்றன.

அறிவாளிகளுக்கு நம்பிக்கையைத் தரும்  ! அதே சூழ்நிலைகள்… பலவீனமான எண்ணங்கள்கொண்டவர்களுக்கு எஜமானர்கள்! 

நாம் நம் செயல்களைத் தீர்மானித்தால்..‌ அவைகள் நம்மை அதாவது நம் Image ஐத் தீர்மானிக்கின்றன. ஆகவே முடிந்தவரை நல்லதே செய்வோம் நண்பா !

உன் வாழ்வின் உயர்வு, உன் நாவின் நுனியில் !

நாம் நம் வாழ்நாளில் செய்த நற்செயல்களே நமக்கு உண்மையான சொந்தம் !

பொறுமையாக இருப்பவனால் தான், விரும்பியதை அடைய முடியும் !

கோபத்தால் சாதிப்பதை விட ஒருவன் பொறுமையால் அதிகம் சாதிக்கிறான் !

நாட்டுப்பற்றை விட மேலானது எதுவும் இல்லை !

ஒரு நாடு, அதன் திறமையான மேன்மை மிகுந்த கல்வி நிறுவனங்களால் தான் உருவாக்கப்படுகிறது !

அன்பைப் பணம் கொடுத்து வாங்கியவனும் இல்லை !

பணத்திற்காக விற்றவனும் இல்லவே இல்லை !

ஏனெனில் அன்பிற்கு விலை ஏதும் எப்போதும்.. எங்கேயும் கிடையவே கிடையாது !

தன்னம்பிக்கை இல்லாதவர்கள் இறந்தவர்களுக்குச் சமம் !

நம்பிக்கை எதிர் காலத்திற்கு ஒளி தரும் : வழி காட்டும் !

ஞாபகமோ இறந்த காலத்திற்கு முலாம் பூசும் !

நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது !

ஏதோவொரு வகையில் துயரத்தை அனுபவிக்காமல் மகிழ்ச்சியை அடைய முடியாது அன்பு நண்பா !

நம்மால் முடியும் என்று எண்ணுவதே முடிக்கும் ஆற்றலை அளிக்கும்.. அதிகரிக்கும் !தெரிந்து கொள் நண்பா !

மடிவதாய் இருந்தால் விதையாக மடிய வேண்டும் ! விழிப்பதாக இருந்தால் சூரியனாக விழிக்க வேண்டும் !

தொடக்கத்தை எவ்வளவு தீவிரமாக நினைத்துப் பார்க்கிறாயோ.. அதைவிட அதிகமாக முடிவைப் பற்றியும் யோசித்துச் செயல்படு நண்பா !

முதுமை வயதைப் பொறுத்தது அல்ல : அவரவர் உணர்வைப் பொறுத்தது !

வாழ்வில் நிறையப் பெற வேண்டும் என்றால்.. நிறையக் கொடுக்கவும் வேண்டும் அன்பு நண்பா !

குறிக்கோள் நிலையாக இருந்தால் மட்டுமே நாம் விரும்புவதைச் சாதிக்க முடியும் !

சில காரியங்கள் திறமைக்கும் , கடின உழைப்புக்கும் அப்பாற்பட்டவை !

உண்மையான அன்பை வாய்ச் சொல் வெளிப்படுத்தாது : செயல் மட்டுமே வெளிப்படுத்தும் !

நன்மையைப் பலர் விரும்புவர் : உண்மையைச் சிலரே விரும்புவர் !

பக்திக்கும், மரியாதைக்கும் உரிய இடம் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல : நாம் பணிபுரியும் இடமும் கூட ! ஏனெனில் செய்யும் தொழிலே தெய்வம் !

யார் ஒருவர் தனக்குத்தானே வாழ்வில் சில முறையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கடைப்பிடிக்கிறாரோ , அவரே உண்மையான சுதந்திர மனிதர் அன்பு நண்பா !

பணம் இல்லாதவனுக்கு உணவுக்குத் தட்டுப்பாடு : 

பணம் இருப்பவனுக்கு உணவுக்குக் கட்டுப்பாடு

               +++++++++++++

          கசக்கும் உண்மைகள் 

மலையும் மலை சார்ந்த இடமும் அன்று குறிஞ்சி !

இன்று ? குவாரி !

காடும் காடு சார்ந்த இடமும் அன்று முல்லை !

இன்று ? தொழிற்சாலைகள் !

வயலும் வயல் சார்ந்த இடமும் அன்று மருதம் !

இன்று ? ஃப்ளாட்கள் (flats) !

கடலும் கடல் சார்ந்த இடமும் அன்று நெய்தல் ! 

இன்று ? அமிலம் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளின் கிடங்கு !

மணலும் மணல் சார்ந்த இடமும் அன்று பாலை !

இன்று ? ஆற்று மணல் அள்ள வரிசையாக லாரிகள் நிற்கும்.. காத்துக் கிடக்கும் இடங்கள் !

என்று மாறும் இந்த நிலைமை ?

            ++++++++++++++

தெரிந்து கொள்வோம் நண்பா !

 வெற்றியின் நண்பன் நம்பிக்கை !

பெருமைக்குரிய மனிதர்கள் யார் தெரியுமா நண்பா ?

வாய்ப்புகளைத் தக்கபடி பயன்படுத்தத் தெரிந்தவர்கள்  !

அறிவற்ற நண்பனின் பேச்சைக் கேட்டுத் தோல்வி அடைவதை விட.. புத்திசாலியின் வசவுகளைக் (திட்டுகளைக்) கேட்டு.. அதை ஆராய்ந்து.. அதன்படி நடப்பது எவ்வளவோ மேல் நண்பா !

புத்தகம் இல்லாத வீடு.. ஜன்னல் இல்லாத வீட்டுக்குச் சமம் !

நிலையற்ற அழகு கண்ணை மட்டுமே கவரும் ! திறமை மனதையும் கவரும் !

உருண்டோடும் செல்வத்திடம் வைக்கும் ஆசையே அனைத்து அழிவுக்கும் படிப்படியாக வழி வகுக்கும் !

அசைக்க முடியாத நம்பிக்கையைத் தான் விவேகம் என்கின்றனர் ஆன்றோர் !

சின்னஞ்சிறு வயதில் அறியாமையுடன் இருப்பது பாவம்! ஆனால் வளர்ந்த பின்னும் அப்படி இருப்பது பைத்தியக்காரத்தனம் !

படிக்கும் போது ஆழ்ந்து படிப்பவனால் தான் சரியான மேற்கோள்களைக் காட்ட முடியும் !

ஒருவரின் சொந்த ஒழுக்கம் அவருக்கு தன்னம்பிக்கை தருகிறது : அந்தத் தன்னம்பிக்கை வெற்றியை அவரிடம் அழைத்து வருகிறது !

உண்மையில் மகிழ்ச்சியாக வாழ விரும்பினால், உனக்கு நீயே நேர்மையான நீதிபதியாக இருந்து பார் !

ஒருவரிடமுள்ள திறமையைப் பட்டை தீட்டி வெளிக் கொண்டு வருவதே உண்மையான கல்வி !

உண்மையான வலிமை உடல் பலத்தால் மட்டுமே வருவதில்லை : அது ஒருவரின் மன உறுதியிலிருந்தே உருவாகி வெளி வருவது !

பெற்றோர் தங்களின் கடமைகளை நேர்மையாகச் சரிவரச் செய்தால் , அதுவே பிள்ளைகளின் நல்ல வளர்ச்சிக்குப் போதுமானது !

கோபமும் , பொறாமையும் மனிதனைக் கொன்று விடும் சக்தி படைத்தவை ! அதனால் அக்குணங்களை அறவே தவிர்ப்போம் அன்பு நண்பா !

நீதியைப் பின்பற்றி வாழ்பவர் வாழ்க்கைச் சூரிய ஒளியைப் போல் ஒளிரும் தன்மை வாய்ந்தது! 

உன் எதிரிகளை நேசிக்க முயற்சி செய் : உன்னைச் சபிக்கிறவர்களை வாழ்த்திப் பழகு! ஏனெனில் அவர்கள் தான் உன் வாழ்க்கையை , உன்னை அறியாமலேயே புடம் போட்டு ஒளிரச் செய்பவர்கள் !

சிறிய விஷயத்தில் தவறாக நடப்பவன்.. பெரிய விஷயத்திலும் தவறாகவே நடப்பான் !

சரியான முறையில் வளர்க்கப்பட்ட மரங்களே நல்ல பலனைத் தரும் !

உண்மையான அன்பு உள்ள இடத்தில் அச்சமில்லை ! ஏனெனில் தூய அன்பு அச்சத்தைத் துரத்தவல்லது அன்பு நண்பா !

            +++++++++++++

படித்ததில் பிடித்தது..

ஒரே ஒருவருக்கு மட்டுமே ஒரு விஷயம் தெரிந்தது என்றால் அது ரகசியம்.

இன்னொருவருக்குத் தெரிந்து விட்டால் அது விஷயம்.

நிறையப் பேருக்குத் தெரிந்து விட்டது என்றால் அது தகவல் .

ஊர் முழுக்கத் தெரியுமென்றால், அது செய்தி !

அடுத்த தலைமுறைக்கும் தெரியுமென்றால், அது வரலாறு ! 














Monday, 11 August 2025

பழமொழித் தொகுப்பு - 2

எங்கள் கிராமத்துப் பாட்டிகள்.. எங்கள் ஆச்சி எப்போதோ சொன்னவை  !

1) பத்தியமாச் சாப்பிடுறேன்னு… பாகற்காயையும் தின்னானாம் !

2) கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல.. 

3) முன் கை நீண்டாத்தான் புறங்கை நீளும் !

4) வெறும் கையால் முழம் போடாதே ! வெறுங்கை முழம் போடுமா ?

5) வாயும் வயிறும் தான் எல்லாம் ! (அதாவது ஒரு உயிருக்கு அடிப்படைத் தேவை உணவுதான் !)

6) வாய்க்கு வந்ததப் பேசுனா வயிறு தான் காஞ்சு போகும் !

7) ஊர் கூடித் தேர் இழுக்கணும் ! உறவு கூடி குடும்பம் நடத்தணும் !

8) கோவில்ல மட்டுமே கூத்தாடி இல்ல..‌ (கூத்தாடி என்பது நடராஜப் பெருமானைக் குறிக்கும் : கடவுள் எங்கும் இருக்கிறான் என்று பொருள் ).

9) உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகுமா ?

10) கறியின் சுவை சட்டி அறியுமா ? கரண்டிக்குத் தெரியுமா ?

(கறி என்பது குழம்பைக் குறிக்கும். திருநெல்வேலிப் பக்கம் “இன்னிக்கு என்ன கறி ஒங்க வீட்ல ?” என்று கேட்கும் பழக்கம் உண்டு)

11) அஞ்சும் மூணும் அடுக்கா இருந்தா.. அறியாப் பொண்ணும் கறி சமைப்பா !

(அஞ்சு - கடுகு மிளகு சீரகம் கொத்தமல்லி - இவைகள் இருக்கும் அஞ்சறைப் பெட்டி .

மூணு - உப்பு.. புளி.‌. மிளகாய் .

அடுக்கா இருந்தா - வசதியாக இருந்தால் என்று பொருள்.)

12) நீரடிச்சு நீர் விலகுமா ?

13) நீராத்துனாலும் ஆத்தும்.. நெருப்பாத்துனாலும் ஆத்தும் !

இந்தப் பழமொழியின் விளக்கம் : வீட்டில் இழக்க முடியாத ஒரு பேரிழப்பு : 

அதிலிருந்து மீள வெறும் சொற்கள் போதாது. அந்தச் சூழ்நிலையில் எவ்வளவு பேரிழப்பாக இருந்தாலும்.. இழந்தவர் குளித்துத்தான் ஆக வேண்டும். 

பசிக்கிறதோ இல்லையோ எதாவது சமைத்த உணவைச் சாப்பிட்டுத் தான் ஆக வேண்டும்.‌ 

தண்ணீர் குடித்துத் தான் ஆக வேண்டும் !

அப்படி , அந்தத் தண்ணீரும்.. அந்த நெருப்பும் படிப்படியாக இழந்தவரை மெல்ல மெல்லத் தேற்றி விடும் !

14) பங்காளி பகை பாக்குற வரைக்கும்.. 

(இதையேதான் தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்றும் சொல்லி வைத்தார்கள்.)

அங்காளி‌ பகை ஆக்குற வரைக்கும் !

(அதாவது தாய் வழி உறவுகளான அங்காளிகள் பகை.. பல காலம் கழித்துப் பார்த்தாலும்..உணவு சமைத்துப் போட்டுச் சாப்பிட்டு விட்டால் தணிந்து விடும் என்று பொருள் )

15) இட்ட குடியும் கெட்டு..‌‌  ஏத்த குடியும் கெட்டு…

16) நாயாப் பேயா அலஞ்சான்.. நாதியத்துப் போனான் !

(வகையில்லாமல் வேலை செய்வோரை இப்படிச் சொல்வார்கள் ).

17) ஓடுற தண்ணியோட ஓடுற ஒனக்கு..‌ ஓங்கிப் பேச என்ன இருக்கு ?

18) மாட்ட ஓட்றவன் மகாதேவன் ! வண்டிய ஓட்றவன் வடிவேலன் ! 

(அதாவது ஆண்டவன் தான் நம் வாழ்க்கையை வழி நடத்துகிறான் என்று பொருள் .)

19) உடையவன் இல்லேன்னா ஒரு மொழம் கட்டை !

(அடுத்தவர்களை நம்பி ஒரு வேலையை விட்டு விடுவது நாம் இருந்து செய்வது போல் ஆகாது என்று பொருள்.)

20) கங்காணி அங்குட்டுப் போனா.. காத்தாட இவன் இங்குட்டுப் போய்டுவான் !

(கங்காணி - கண்காணிப்பவன் - Supervisor)

21) கும்பி கூழுக்கு அழுது ! கொண்டை பூவுக்கு அழுது ! 

(கும்பி - வயிறு)

22) ஏணி.. தோணி.. நார்த்தங்கா..

(ஏணி ஏற்றி விடும் : தான் ஏறாது. தோணி கரை சேர்க்கும் : தான் கரை ஏறாது .

நார்த்தங்காய் மற்ற உணவுப் பொருட்களை செரிக்க வைக்கும் : தான் செரிக்காது).

23) வடக்க பாத்த மாட மாளிகைய விடத் தெக்க பாத்த தென்னங்குடிச மேல்! 

24) அத்த மகளக் கட்டுனா அடிதடியாம்..மாமன் மகளக் கட்டுனா மச்சு வீடாம் !

25) கடலயத் தின்னா செரிக்கும்.. கல்லத் தின்னா செரிக்குமா ?

26) சோத்துத் தண்ணியும்.. சேத்துத் தண்ணியும் ஒண்ணாகுமா ?

27) கோட்டயில பொறந்தாலும் போட்ட புள்ளித் தப்பாது !

28) பொண்ணு வளத்தியோ.. பொடலு வளத்தியோ ?

(அதாவது பெண் குழந்தையும்.. புடலங்காய்ப் பிஞ்சும் மளமளவென வளர்ந்துவிடும் என்று பொருள்). 

29) வேல செய்றவன் பாவத்த நீ பத்துனா..‌ ஒம்பாவத்த யாவாரி பத்துவான்.. தெரிஞ்சுக்கோ !(பாவத்தப் பத்துதல் - வேலை செய்தவர்களை ஏமாற்றுதல்.  யாவாரி - வியாபாரி)

30) கையும் கையும் சண்ட போட்டுக்கிட்டாக் காரியம் எப்படி நடக்கும் ?

(கையும் கையும் என்பது உடன் பிறந்தவர்களைக் குறிக்கும்)

31) கண்ணு பாத்தா கை செய்யணும். 

(எதையும் சட்டென்று கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் குறிப்பவை இந்தச் சொற்கள்)

32) காது கேக்கணும் : கை செய்யணும் !

33) தேர்ந்தெடுத்து உண்டால் தேகம் நல்லாருக்கும் !

34) வயித்துக்கு வஞ்சனை செஞ்சே வாழ்நாள் பூரா கஷ்டந்தான் !

35) விலகக் கத்துக்குட்டீன்னா.. வீண் பிரச்சினைகள் வராது !

36) தெளிவாத் தெரிஞ்சுக்கோ : தைரியமா வாழலாம் !

37) வெந்ததுக்கும்.. வேகாததுக்கும் வித்தியாசம் தெரியாதவன் வீணாப் போவான் !(எதிலும் ஒரு பக்குவம் இல்லாமல் இருப்பவர்களை இப்படிச் சொல்வார்கள்)

38) கண்ணளவுதான் கையளவு !

39) வீராப்புப் பேசி வீணாப் போகாதே !

40) கடமைய முடிக்க வக்கில்லாதவன் கட்டப்பஞ்சாயத்துத் தலைவனாம் !

41) கண்டதே காட்சி.. கொண்டதே கோலம் !

42) ஆத்தா அப்பனப் பாக்க வக்கில்ல.. ஆட்டம் பாக்க ஆடுதுறை போனானாம் !

43) வெட்டிப் பேச்சு வேலைக்கு ஆவாது !

44) ஒடம்பு வளைஞ்சு வேல செய்யலே.. உள்ளம் நொந்து போவே !

45) ஒழவனும் ஒழவியும் சேத்துலகை வச்சாத்தான்.. நீ ஒக்காந்து சோத்துல கை வப்பே !

46) ஆடுற வரைக்கும் ஆட்டம் : கூடுற வரைக்கும் கூட்டம் !

47)தேடுற வரைக்கும் தேட்டம் : தெளிஞ்சு போச்சுன்னா ஓட்டம் !

48)நலிந்தோர்க்கில்லை நாளும் கிழமையும் !

49)முடியும்னு நெனச்சீன்னா மல கூட மண்ணளவுதான் !

50)முடியாதூன்னு நெனச்சீன்னா ஒரு கை மண் கூட மல அளவுடா மவனே ‌!

51) பொலம்பிக்கிட்டே இருந்தாப் பொழுது தான் போகும்‌ : பொழப்பு நடக்காது புள்ளே !

52) ஆச இருக்குத் தாசில் பண்ண… அதிர்ஷ்டம் இருக்கு..‌ கழுத மேய்க்க…

53) அவனா ? கழுத மேல ஏறிக் கைலாயமே போய்ருவானே ?

54) ஊதுற சங்க ஊதிடணும் ! விடிஞ்சா விடியுது.. விடியாட்டாப் போகுது !

(அதாவது சொல் பேச்சுக் கேட்காத ஆட்களுக்கும் பெரியவர்களாகிய நாம் எடுத்துச் சொல்ல வேண்டிய நல்லது கெட்டதைச் சொல்லி விட வேண்டும் ! கேட்டு நடந்தால் சரி  : கேட்காவிட்டால் நமக்கு ஒன்றும் நஷ்டமில்லை : அதற்காக அவர்களையும் விட்டு விடக்கூடாது என்று பொருள்)

55) வாய்க்காத் தண்ணியும் , வயக்காட்டுத் தண்ணியும் ஒண்ணல்லடா !

56) வாய்க்காத் தண்ணி ஓடுற தண்ணி : வயக்காட்டுத் தண்ணித் தேங்குன தண்ணி !

57)‌ தண்ணி வத்துனா கொளம் நாறும் ! ரத்தம் சுண்டுனா மனுஷன் நாறுவான் !

(அதாவது குளத்தில் தண்ணீர் வற்றி விட்டால் மீன்கள் மற்றும் சிறுசிறு புழுப் பூச்சிகள் இறந்து விடும். அந்த உடல்கள் காயக்காய துர்நாற்றம் வீசத் தொடங்கும் . அதேபோல் ரத்தம் குறையும் போது உடல் வலிமை குறைந்து , வேலை செய்ய முடியாமல் ஆகி.. மற்றவர்களின் ஏச்சுப் பேச்சுகளுக்கு ஆளாவான் என்று பொருள்.) 

58) பாப்பான் சாப்பாடு பசிக்கு ஓதவாது ! (அதாவது அடுத்தவர் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு அவனுடைய பசி அடங்காது என்று பொருள். பாப்பான் - பார்ப்பவன்).

59) நீர்ல துள்றது நெலத்துல துள்ளாது டோய் !

60) காட்ல இருக்கறது காட்ல இருக்கணும் ! நாட்ல இருக்கறது நாட்ல இருக்கணும் ! இல்லேன்னா.. அவ்வ்ளோதான் !

61) ஏண்டா மட்டிப் பயலே ! எகிறிக்கிட்டு ஓடுற ஆத்த.. ஏணியாப் போட்டாடா தாண்டுவே ?

62) பழைய சோத்தத் தின்னாலும்.. பாங்காத் திங்கணும்.. பசி அடங்கத் திங்கணும் !

63) நொறுவலாத் தின்னுட்டிருந்தே.. நொறுங்கிப் போய்டும் எலும்பு !(நொறுவல் - சிறு தீனி : snacks)

64) மதில் மேல் பூனையா இருடா பேராண்டி ! தப்பில்ல.. ஆனா மதி கெட்ட பூனையா இருந்துறாத !

65) முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கிறதும் கோழி தான் !அதுகளக் காபந்து பண்றதும் கோழி தான் புள்ள ! சேவலு.. சோலி முடிஞ்சுருச்சுன்னா திரும்பியே பாக்காது !

66) பொட்டைங்க நல்லாருந்தா பூமி நல்லாருக்கும் புள்ள !(பொட்டைங்க - எல்லா உயிரினங்களில் இருக்கும் பெண்பால் உயிரினங்களைக் குறிக்கும்).

67) தேட்டை போட வந்த திருட்டுப் பூனை.. தேனிக் கூட்டத்துல மாட்டுனாப்புல…

68) இஷ்டம் ஒன்னய எட போடும் ! கஷ்டம் ஒன்னயப் பொடம் போடும்! 

எங்கள் கிராமத்துப் பாட்டி ஒருவர் மிகவும் பிரியமாக இருப்பார்கள். அதேநேரம் மிகவும் உரிமையோடு திட்டவும் செய்வார்கள்  .

அவர்கள் சொன்ன சில பழமொழிகள் உங்கள் பார்வைக்கு நண்பர்களே !

69) போட்டுக் கொடுத்தவன் படுபாவி ! போடாமக் கெடுத்தவன் பெரும் பாவி ! (போட்டுக் கொடுத்தல் - கோள் மூட்டுதல்) 

70) கீழ விழும் மழ (மழை) ! மேல போகும் நெருப்பு !ஆனா மழ தாண்டா நெருப்ப அணைக்கும் !

71) ஆலமரந் தாண்டா விழுது விடும் : அத்தி மரமா விழுது விடும்? 

72) நாண்டுக்கிட்டுச்‌‌ சாகறதுக்கும் நாராயணன் வரணுண்டா பாவிப் பயலே !

73) சாகறதுக்கு ஆறுவழீன்னா வாழறதுக்கு நூறு வழிடா மவனே !

74) 'கன்னா கருப்பட்டி.. வான்னா வாயில போடு'ன்னு பேசாத புள்ள !(“க“ என்ற எழுத்தில் தொடங்குவது கருப்பட்டி என்ற ஒருசொல் மட்டுமே இல்லை : எத்தனையோ சொற்கள் இருக்கின்றன. அதேபோல்தான் “வா” என்ற எழுத்தில்  தொடங்குவது வாய் என்ற சொல் மட்டுமே இல்லை : எத்தனையோ சொற்கள் “வா” என்ற எழுத்தில் தொடங்குகின்றன ! தான் சொல்வது மட்டுமே சரி என்று விதண்டாவாதம் பேசுபவர்களிடம் இந்தப் பழமொழியைச் சொல்வார்கள்).

75) சொளவுல தட்டித் தெருவுல வாச்சாப்புல !

(சொளவு என்பது தமிழகத்தில் தென் மாவட்டங்களில் புழக்கத்தில் இருக்கும் ஒருவகை முறம் : சுளகு என்றும் சொல்வார்கள்.நுனிப் பகுதி குறுகலாகவும் அடிப்பகுதி அகலமாகவும் இருக்கும் ).

76) அண்ட அசலோட ஒத்துப் போகாதவன் விண்டதெல்லாம் வீண் பேச்சு !

77) கோழயா இருந்தாலும் இரு ! கொள்ளைத்காரனா இருக்காதே !

78) வா வீராப்பெல்லாம் வாச்சவகிட்ட மட்டுந்தான் !

(வா - வாய் :வாச்சவ - பெண்டாட்டி).

79)சோழநாட்டில் வழங்கிவரும் பழமொழிகள் :

வேதாரண்யம் விளக்கழகு, திருவாரூர்த் தேரழகு, திருவிடைமருதூர் தெருவழகு !மன்னார்குடி மதிலழகு !

(என் எண்ணத்தில் தோன்றிய மேலும் சில அழகுகள்  :

ஆற்றங்கரை நாணல் அழகு !ஆள்வோரின் நேர்மை அழகு !அழகுப் பெண்ணின் நாணம் அழகு! ஆனைக்கு அதன் சிறு அசைவு அழகோ அழகு !

மழலையின் சிரிப்பழகு !மங்கையின் பொறுமை அழகு !மரத்தின் நிழல் அழகு !மல்லிகையின் வெண்மை அழகோ அழகு !

வேந்தனுக்கு வெற்றி அழகு !மாந்தருக்கு மதிப்பு அழகு !

சார்ந்து வாழ்தல் சமூக அழகு !தாழ்ந்து போதல் யாருக்கும் அழகோ அழகு ! )

 எங்கள் ஆச்சி சொன்ன பழமொழிகள் 

80) நலிந்தோர்க்கு இல்லை நாளும் கெழமையும்.

(அதாவது உடல் நலம் இல்லாதவர்கள் பண்டிகை நாட்களில் கட்டாயம் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது இல்லை என்று பொருள்). 

81) நாலு தென்ன இருந்தா நா நாட்டாமடா !

(அதாவது நாலே நாலு தென்னை மரங்களை வைத்து நன்கு பராமரித்தால் நல்ல வருமானம் பெறலாம் என்று பொருள்).

82) விரலுக்கேத்த வீக்கம் !

(அதாவது வருமானத்துக்குள் செலவு செய்ய வேண்டும்).

83) சட்டுவம் அறியுமா சட்டி வெஞ்சன ருசி ?

(தோசை திருப்பியைத் திருநெல்வேலி பக்கம் சட்டுவம் என்பார்கள்.வெஞ்சனம் - குழம்பு).

84) வெஞ்சினம் வெஞ்சன ருசிய அறிய விடாது !

(வெஞ்சினம் - கடுமையான கோபம் : வெஞ்சனம் - குழம்பு).

85) வெளக்கு எரிஞ்சு வீடு கெட்டுப் போகாது ! (வெளக்கு - விளக்கு).

86) கண் இமைக்குத் தெரியுமா தன்னோட மதிப்பு ?

87) நாக்கு மொழ நீளம் இருந்தா நாங்க என்ன செய்றது ?

(அதாவது எப்போதும் ருசியாகச் சாப்பிட நினைக்கும் மனிதர்களைப் பற்றி இப்படிச் சொல்வார்கள்).

88) ஒரு வாழை ஒருதரந்தான் கொல தள்ளும் !

(அதாவது வாழைமரம் ஒரேயொரு முறை மட்டுமே தார் போடும்.

கொல - குலை 

“ வாழைத்தார் என்பதை வாழைக்குலை என்று தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அழைப்பார்கள்).

89)வாழைமரம் போல் ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை !

          

              








Friday, 8 August 2025

இரண்டு... இரண்டு !

எப்போதோ படித்ததை இப்போது பகிர்கிறேன் நண்பர்களே !

ஒரு வழிப்போக்கர் ஒரு கிராமத்துக் கிணற்றருகில் நின்று கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம் 

“ அம்மா ! ரொம்பத் தாகமா இருக்கும்மா.. கொஞ்சம் தண்ணி எறச்சு ஊத்துறீங்களா ?குடிச்சுக்குறேன் ! “ என்று உள்ளங்கைகளைச் சேர்த்துக் கொண்டு கேட்கிறார்.

“ இதோ.. குடிங்க ஐயா ! “ என்று தண்ணீர் இறைத்து ஊற்றிய அந்தப் பெண் சொன்ன சில விஷயங்கள் அவரைப் பக்குவப்படுத்தின !

அவை என்னென்ன என்றால் - 

இந்த உலகில் :  

நிரந்தரமான 2 பயணிகள் - நாள்தோறும் தோன்றி மறையும் சூரியனும் , சந்திரனும் மட்டுமே !

2 விருந்தாளிகள் - 

இளமை மற்றும் செல்வம் மட்டுமே! ஏனெனில் இரண்டுமே தற்காலிகமானவை !

சகிப்புத்தன்மை உடைய 2 பேர் - பூமித்தாய் மற்றும் மரங்கள்.

பிடிவாதம் நிறைந்த 2 - 

ஒன்று நமது நகங்கள்.. இன்னொன்று நமது முடி. 

இவை இரண்டும் நாம் எத்தனை முறை வெட்டினாலும் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருக்கும் !

இந்த உலகில் 2 பேர் தான் முட்டாள்கள்  -

ஒருவர் எந்தவிதமான தகுதியும் , ஞானமும் இல்லாமல் ஆளும் அரசன்.. 

மற்றொருவர் அத்தகைய பயனற்ற வீணாப்போன அரசனை ஆதாய நோக்கில்.. கபட எண்ணத்துடன் மிகைப்படியாகப் புகழும் ஒருவன் ; அண்டிப் பிழைப்பவன் !

அந்த வழிப்போக்கர் - மகாகவி காளிதாசன்.

அருள் செய்தவள்  - 

கல்விக் கடவுள் அருள்மிகு சரஸ்வதி தேவி !

Tuesday, 5 August 2025

பழமொழித் தொகுப்பு - 1 (எங்கள் ஆச்சி மற்றும் எங்கள் கிராமத்துப் பாட்டிகள் சொன்ன அனுபவச் சாறுகள் !)

1) கறக்குறது ஒழக்குப் பாலு ஒதைக்கறது பல்லுப் போக.

2) கொண்டாங் கொடுத்தான் வூட்டுக்குப் போனியோ..குடுமி அறுபட்டு வந்தியோ ?

3) அலை அடித்து ஆழ்கடல் அழியாது! 

4) துள்ளிக் குதித்த முன் சோறு காடிப் பானையில் விழும் !

5) சேக்காளி சரியா இருந்தாச் சேறு கூடச் சோறு தான் !

6) உறவு சபைக்கு..‌ நட்பு உள்ளத்துக்கு !

7) கற்றலுக்கு வயதில்லை ! கனிந்த நெஞ்சில் துயரில்லை !

8) நந்தன் படைத்த பண்டம் , அது நாய் பாதி.. பேய் பாதி !

9) தாத்தன் அண்டப் புளுகன் : அப்பன் ஆகாசப் புளுகன் : மவன் ஆழிப் புளுகன் !

10) தங்கச்சி புள்ள தாம் (தன்னுடைய) புள்ளைன்னாத் தனக்கெதுக்குப் புள்ள ?

11)‌ தாய் வீட்டுக்குப் போனாலும் தன்னைப் பேணிப் போ !

12) உள்ளங்கை காயல.. 

ஒறவு காஞ்சு போச்சு !

நனஞ்ச கை காயல..‌ 

நட்பு காஞ்சு போச்சு !

(ஒரு வீட்டில் உள்ளங்கையால் எடுத்துச் சாப்பிடுகிறோம். சாப்பிட்டு முடித்து கை கழுவி அந்த ஈரம் காயும் முன் அந்த உறவே விட்டுப் போய் விட்டது என்று பொருள்)

13) பேய்க்கு வாக்கப்பட்டாப் புளியமரம் ஏறித்தான் ஆவோணும்! 

14) கைப் புண்ணுக்குக் கண்ணாடி  தேடுறான் பாரு !

15) மொகம் பாத்து உள்ளே போ ! மனம் பாத்து ஒறவு வை !

16) கனவுல வெத வெதச்சு.. காத்துல நாத்து நட்டாப் பயிரா வெளயும் ?

17) வெத நெல்ல வேக வச்சுத் தின்னுட்டா.. வெளச்சலுக்கு என்ன செய்வே ?

18)‌ அக்கச்சி அங்க அங்கன்னாளாம்: தங்கச்சி இங்க இங்கன்னாளாம் : அயித்தான் எங்க எங்கன்னானாம்! 

19) அக்கா வீட்டுக் கோழியத் திருடி மச்சானுக்கு விருந்தா ?

20) அடுப்படி ஒறவா ?

ஆம்பள ஒறவா ?

(அதாவது ஒரு வீட்டின் குடும்பத் தலைவி முகம் சுளிக்காமல் வரவேற்றால் தான் அந்த வீட்டில் இருப்புக் கொள்ளும் !)

21) அக்கு தொக்கு இல்லாதவனுக்குத் துக்கம் என்ன வந்தது ?

22) அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம் !

23) அஞ்சினவனுக்கு ஆனை ! அஞ்சாதவனுக்குப் பூனை !

24) அத்தாம் பெரிய ஆனைக்கு எமன்.. இத்துனூண்டு எறும்பு  !

25) ஆனையும் பூனையும் ஒண்ணாகுமா ? அடுத்த வீட்டு சம்பாத்தியம் சோறு போடுமா ?

26) அகப்பட்ட நாயை அடி ! அதக் கண்ட அடுத்த நாய் காதவழி ஓடும்! 

27) நண்டு கொளுத்தா..‌‌வளையில தங்காது !

28) தவளை தன் வாயால் கெடும் !

29)தண்ணித் தவளய மாதிரி கத்தாதே! 

30) தவள தரைக்கு இழுக்க.. 

மீனு தண்ணிக்கு இழுக்க..

31) அறுத்த வயலில ஆயிரம் பறவைங்க !

(அறுவடை முடிந்த வயலில் சிதறிக் கிடக்கும் தானிய மணிகளைத் தின்னப் பறவைகள் வருவதைக் குறிக்கும்)

32) மாட மாளிகைல வாழ்ந்தாலும் மாடப்புறா போல் வாழணும் !

(மாடப்புறா இணையைப் பிரியாது) 

33) வேலில போற ஓணான எடுத்து வேட்டில விட்டுக்கிட்டு…குத்துதே.. கொடையுதேன்னா  ?

34) ஐயோ பாவம் பாத்தா.. ஆறு மாசத்துக்குப் பாவம் !

(சுயநலமமுள்ள மற்றும் ஏதேனும் காரியம் ஆகணும் என்றால் மட்டுமே நம்மை அணுகும் மனிதர்களைப் பற்றி இப்படிச் சொல்வார் எங்கள் ஆச்சி)

35) ஆடத் தெரியாதவ தெரு கோணல்னாளாம் !

36) கலந்த சோத்துக்குக் கஞ்சிச் சோறு மேலு ! 

(அதாவது மிச்சம் மீதி இருக்கிறது என்று குழம்பு, ரசம் ,காய் , மோர் என்று எல்லாவற்றையும் ஒன்றாகப் பிசைந்து சாப்பிடுவதை விட.. தண்ணீர் ஊற்றிய பழைய சோறு நன்றாக இருக்கும் !)

37) சிகப்பு ஒரு அழகு : சூடு ஒரு ருசி ! கருப்பு ஒரு அழகு : காந்தல் ஒரு ருசி !

38) அடிக் கசடு அத்தன ருசி !

39) வாய்க்கு வந்ததைப் பேசாதே ! வாங்கிக் கட்டிக் கொள்ளாதே !

40) செஞ்சதல்லாம் செஞ்சுட்டு…சாகப் போற காலத்துல ‘ சங்கரா.. சங்கரா !’ ன்னா ?

41) ஆண்டாண்டு காலம் மாண்டு புரண்டாலும் மாண்டார் மீண்டு வருவரோ ?

42) எரியற கொள்ளிய இழுத்தா.. கொதி தானா அடங்கும் !

43) நீதானே ? " சித்துக்குப் பித்தெடுத்து..சீலப் பேனுக்கு ரவுக்கை தச்சு.. கோழிக் குஞ்சுக்குக் குல்லா போட்ருவியே…!”

இது எங்கள் கிராமத்தில் வழங்கப்படும் ஒரு பழமொழி !

கொஞ்சம் விசித்திரமாக இருக்கிறது இல்லையா நண்பர்களே ?

இதைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்.

சித்து என்றால் சித்தெறும்பு . 

சித்தெறும்பு என்னவெல்லாம் சாப்பிடும் ? அதற்குப் பித்தம் ஏறி விட்டால் அதைக் கண்டு பிடித்து அதற்குப் பித்தம் எடுத்து விடுவாயே ! 

சீலப் பேன் என்பது தலையில் பேன் பார்க்கும் போது தவறிப் போய்ச் சேலையில் விழுந்து விடும் பேன். அப்படி விழுந்து விட்டால் மிகவும் குட்டியாக இருக்கும் அதைக் கண்டு பிடிப்பது மிகவும் கடினம் . 

ஆனால் அதையும் தேடிக் கண்டு பிடித்து அதற்கு ரவிக்கை அதாவது சட்டை தைத்துப் போட்டு விடுவாய்:

கோழிக்குஞ்சுக்குக் குல்லா போட்ருவே - 

கோழிக்குஞ்சே அவ்வளவு குட்டியாக இருக்கும் !

அதோட தலை எவ்வளவு குட்டியூண்டு இருக்கும் ?

அந்தத் தலைக்குக் குல்லா தைத்துப் போடுவது எவ்வளவு கஷ்டமான வேலை ? 

அதையே நீ செய்து விடுவாய் .

சரி.. இதையெல்லாம் யாரைப் பார்த்துச் சொல்வார்கள் என்று தானே கேட்கிறீர்கள் ?

யாராலும் செய்ய முடியாதை நான் செய்து காட்டுகிறேன் பாருங்கள் என்று வாய்ச் சவடால் பேசும் ஆட்களைக் கிண்டல் செய்ய இப்படிப் பேசுவார்கள் எங்கள் கிராமத்தில் !

44) வேவுற வூட்டுக்கு.. வெட்ற கெணறு ஆகுமா ?

(அதாவது , ஒரு வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது இப்போது தான் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கிணறு உதவாது என்பது பொருள் !)

45) கொண்டாங்கொடுத்தான் வீட்ல.. குறிப்பறிஞ்சு நடந்துக்க !

(அதாவது ஆண் (கொண்டான்) அல்லது பெண்(கொடுத்தவன்) - திருமண உறவு உள்ள வீட்டில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் !)

46) 'நரை'ம்பானேன்.. 'சிரை'ம்பானேன் ?

(அதாவது‌ ,” உன் தலையில் நரைமுடி இருக்கிறது “ என்று ஒருவர் சொன்னால்…“ நீதான் கொஞ்சம் அதச் சிரச்சு விடேன் அதாவது மழித்து விடேன் “ என்று பதில் வருமாம். 

இதன் பொருள்.. தேவையில்லாமல் அடுத்தவர் பிரச்னையில் தலையிடக்கூடாது என்பது !)

47) திருடனுக்குத் தேள் கொட்டுனாப்புல..

48) ஆகாத பொண்டாட்டி கை பட்டாக் குத்தம்..‌ கால் பட்டாக் குத்தம் !

49) ஊரான் வூட்டு நெய்யே.. என் பொண்டாட்டி கையே !

50) மசமசன்னு நிக்கிற நேரத்துல..‌ மதுரைக்கே போய்ட்டு வந்துறலாம் !

51) தென்ன மரத்துல தேள் கொட்டுச்சாம்.. பனை மரத்துல நெறி கட்டுச்சாம் !

52) சுத்தி பனங்காடு ! சூழ சலசலப்பு !

53) பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது !

54) தண்ணில தூக்கிப் போட்டா.. நீச்சல் தானே வரும் !

55) கோட்டையில பொறந்தாலும் போட்ட புள்ளி தப்பாது !

56) எண்ணெயத் தேச்சுக்கிட்டு விழுந்து புரண்டாலும் ஒட்றது தான் ஒட்டும் !

57) காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு 

58) காக்கா முட்டையிலேருந்து , கழுகுக் குஞ்சா வரும் 

59) காவோலயப் பாத்துச் சிரிச்சுதான் குருத்தோலை !

(அதாவது , தானும் இப்படிக் காய்ந்து போகும் காலம் வரும் என்பதை உணராது.. 

அந்தக் காய்ந்த ஓலையைப் பார்த்து இப்போது தான் 

அரும்பி வரும் குருத்தோலை சிரித்ததாம் ).

60) எரியிற கொள்ளியில.. எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி ?

61) எரியிற கொள்ளிய எடுத்துத் தலயச் சொறிஞ்சுக்கிட்டாப்புல !

62) எரியுற வூட்லப் புடுங்குனது ஆதாயம் !

(இந்தச் சொற்களை இரண்டு வகையாகப் பொருள் கொள்ளலாம் !

வீடு எரிந்து கொண்டிருக்கும் போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு மீட்கலாம் !

இன்னொன்று - எரிந்து கொண்டிருக்கும் வீட்டிலிருந்து திருடுன வரைக்கும் ஆதாயம் !

63) இட்ட குடியும் கெட்டு.. ஏத்த குடியும் கெட்டு !

64) பாத்திரம் அறிந்து பிச்சை இடு! 

கோத்திரம் தெரிந்து 

பெண்ணைக் கொடு !

65) வஞ்சித்து வாழ்வதை விடக் கெஞ்சி வாழ்வது மேல் !

66) காலப் புடிச்சு.. கையைப் புடிச்சவன்.. கடேசில கழுத்தையே புடிச்சிட்டானாம் !

67) தொசுக்குத் தோள்ள..‌ சுருக்குப்பை இடுப்புல..

(நடக்கத் தொடங்காத குழந்தைகளைத் தொசுக்கு என்று எங்கள் கிராமத்தில் சொல்வார்கள்.

அதாவது “ தோளில் தொற்றிக் கொள்ளும் பிள்ளை “  என்பதன் வழக்குச் சொல் .)

68) நரிக்கு நாட்டாம குடுத்தா..‌ கெடைக்கு ரெண்டாடு கேக்குமாம்! 

69) கைக்கும் வாய்க்கும் காத தூரமா ?

70) தாயப் பழிச்சாலும் தண்ணியப் பழிக்காதே !

71) தாயத் தண்ணித் தடத்துல பாத்தா..‌ பொண்ண வூட்ல பாக்க வேணாம் !

72) வாத்தி புள்ள மக்கு ! வைத்யன் புள்ள நோயாளி !

73) வேணா.. வேணான்னாலும் வர்றது வந்தே தீரும் ! போறது போயே தீரும் ! நடப்பது நடந்தே தீரும் !

74) கூரை மேலப் போட்டுட்டுக்.. கெணத்துக்குள்ள‌த் தேடுனானாம்! 

75) கூரை மேலச் சோத்த போட்டா.. கோடி காக்கா !

76 )குருவிக்குத் தக்கன ராமேஸ்வரம் !

இந்தப் பழமொழிக்கான‌ விளக்கம்: :  

நம்முடைய தகுதிக்கும், வசதிக்கும் தகுந்தது தான் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் இந்த பழமொழி உபயோகப்படுத்தப்படுகிறது. 

அதென்ன குருவிக்குத் தக்கன ராமேஸ்வரம் ?

குருவிக்கும் ராமேஸ்வரத்துக்கும் என்ன தொடர்பு ?

குறி வைக்கத் தப்பாது ராமசரம் என்பதே உண்மையான பழமொழி. 

ராமனின் அம்பு (ராமசரம்) குறி வைத்துவிட்டால் தப்பாது இலக்கை அடையும் என்பதே இதன் பொருள் . இதுவே நாளடைவில் பேச்சுவழக்கில் குருவிக்குத் தக்கன ராமேஸ்வரம் என்று வழங்கப்படுகிறது.

77) கள்ளன் பெருசா ? காப்பான் பெருசா ?

(90 - 95 விழுக்காட்டுக்கு மேல் கள்ளன் தான் பெரியவனாக இருக்கிறான். களவு போன பின் தான் பொருளைக் காத்துக் கொண்டு இருப்பதாக நினைத்துக் கொண்டு இருப்பவன் விழித்துக் கொள்கிறான்).

 78) கள்ளன் நம்புனாலும் குள்ளன நம்பாதே !

79) வானரீயம் வந்தாலும் வாரி வைக்க ஏனமில்லே !

( அதாவது வானத்திலிருந்து செல்வாதி செல்வங்கள் வந்தாலும்.. ‌அவற்றைப் பத்திரப் படுத்தப் போதிய வசதி இல்லை என்று பொருள். ஏனம் என்றால் பாத்திரம் ). 

80) இருக்கறத விட்டுட்டு பறக்கறதப் புடிக்க நெனச்சானாம்! 

81) கைல இருக்குற களாக்கா.. மரத்துல இருக்குற பலாவ விட மேல் !

(அதாவது களாக்காய் மிகவும் சிறியதாக இருக்கும் : பலாக்காய் அல்லது பலாப்பழம் பெரிதாக இருக்கும்.

கையில் இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ முயற்சிக்க வேண்டும் என்று பொருள்).

82) வெறுங்கை முழம் போடுமா ?

83) உழக்குக்குள்ள கிழக்கு மேக்கா? 

84) தடி எடுத்தவனெல்லாம் தண்டக்(ல்)காரனா ? 

85) கண்ணளவு தான் கைய்யளவு !

86) அதது ஒடம்பு அதது கையால் எண்சாண் !

87) மச்சான் வாச்சா மலை ஏறிப் பொழக்கலாம் !

88) அன்னு செய்யாதது.. ஆறு மாசம் !

89) பத்து விரலாலப் பாடுபட்டா.. அஞ்சு விரலால அள்ளித் திங்கலாம் !

90) கேட்டுக் குடுத்தா தானப் பிரபு. கேக்காமக் குடுத்தா தர்மப் பிரபு !

91) தாயும் தாயா இருந்தாத்தான் தாய்! 

92) ஊருக்கா ? வூட்டுக்கா ?

(“ எங்கள் வீட்டில் குழந்தை பிறந்திருக்கிறது என்று யாராவது வந்து சொன்னால் “ ஊருக்கா.. வூட்டுக்கா ?” என்று தான் முதலில் கேட்பார்கள். குறிப்பாக வயதான பாட்டிகள்.

‘ ஊருக்கு ‘ என்றால் பெண் குழந்தை . அதாவது ஒரு குறிப்பிட்ட வயதில் அவள் திருமணமாகி அடுத்த வீட்டுக்குச் சென்று விடுவாள்.

‘ வூட்டுக்கு ‘ என்றால் ஆண் குழந்தை . அவன் பெற்றோருடனேயே இருப்பான் என்று பொருள்.)

93) உண்ட வூட்டுக்கு ரெண்டகம் செய்யாதே !

(ரெண்டகம் என்றால் - ரெண்டு + அகம் = ரெண்டகம் : அதாவது அந்த வீட்டில் உள்ளவர்கள் பிரிந்து போகும்படி துரோகம் செய்யாதே என்று பொருள் )

94) கை‌ காயும் முன்னே களவாடாதே!

95) கையும் வாயும் சுத்தமா இருந்தா.. கண்ட எடத்துல குந்தித் திங்கலாம்!

(அதாவது திருடாமல்.. பொய் சொல்லாமல் வாழ்ந்தால் யாரும் உதவி செய்வார்கள் என்று பொருள்) .

96) வாய்க்கால்ல துட்டப் போட்டுட்டு.. வயல்ல தேடுனானாம் !

97) முரடன அடிச்சு வளக்கணும் : முருங்கைய ஒடிச்சு வளக்கணும் !

98) ஒழச்ச ஒடம்பு களைக்கும் ; ஒழக்காத ஒடம்பு கனக்கும் !

99) கொஞ்சலும்.. கொட்டலும் கொட்டாயிலும் கூடாது.. கொழுந்தியா‌ பாக்கவும் கூடாதுடா மவனே !

(கொட்டலும் - குட்டுதலும் : கொட்டாயிலும் - கொட்டகையிலும் - அதாவது பொது வெளியில் என்று பொருள்)

100) மனசார வேல செஞ்சா…. மண்டியிட்டுச் சாப்டலாம் !












 :