Wednesday, 6 December 2023

நந்தியம் பகவான்

எல்லாச் சிவன் கோவில்களிலும் சிவன் சந்நிதிக்குள் நுழையும் முன் அமர்ந்து நமக்கு அருள் பாலிப்பவர் நந்தியம் பகவான்.

அவரை முதலில் வணங்குவதன் மூலம் அவரின் அனுமதி பெற்றே நாம் சிவனைத் தரிசிக்கச் செல்கிறோம் என்பது ஐதீகம்.

பதினெட்டு சித்தர்களில் முக்கியமான ஒருவராகக் கருதப்படும் வணக்கத்துக்குரிய நந்தி தேவரைப் பற்றி வித்தியாசமான விஷயம் ஒன்றைப் படித்தேன்.‌ அதையே இந்தப் பதிவில் உங்களுடன் பகிர்கிறேன் நண்பர்களே !


நந்தி தேவர் வெறும் உருவம் அல்ல. 

காத்திருப்பு என்பதற்கு அவர் ஒரு குறியீடு !

ஏனெனில் பாரதக் கலாச்சாரத்தில் காத்திருத்தல் என்பது உயர்ந்த அறத்துடன் கூடிய ஒரு நல்லொழுக்கம்.

அதோடு சும்மா அமர்ந்திருந்து காத்திருத்தல் என்பது ஒரு தியான நிலைக்கு ஒப்பானது.

சிவபெருமான் நாளையே வந்து விடுவார் என்று நந்தியம் பகவான் எதிர்பார்க்கவில்லை.

அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை. அதாவது Nandhi Bhagavan is not expecting or anticipating anything.

அவர் காத்திருக்கிறார்… காத்துக்கொண்டே‌ இருப்பார்.

அது ஒரு வகையில் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் .

நாம் கோவிலுக்குள் போகும் முன் அந்த நந்தியம் பகவானின் அந்தக் குணத்தை நமக்குள் ஆழமாகப் பதித்துக் கொள்ள வேண்டும்.

நேராகச் சொர்க்கத்திற்குப் போக வேண்டும் என்ற எண்ணம் : அல்லது அது வேண்டும்.. இது வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுதல் இல்லாமல் கோவிலுக்குள் நந்தி தேவர் போல அமரப் பழக வேண்டும்.

அதாவது வணக்கத்துக்குரிய அருணகிரிநாதர் கந்தர் அநுபூதியில் பாடுகிறார் பாருங்கள்..

“ சும்மா இரு சொல்லற வென்றலுமே

அம்மா பொருளொன்றும் அறிந்திலனே.. “

முருகனிடம் சந்தேகம் கேட்கிறார் அருணகிரியார்.. 

“ சும்மா இருன்னு சொல்லிட்டுப் போய்ட்டே.. எப்படி எந்த வகையில் சும்மா இருப்பது.. எனக்குப் புரியவில்லையே.. முருகா !”

நம்மில் நிறையப் பேர் தியானம் என்பது ஒரு வகையான செயல்பாடு அதாவது activity என்று நினைக்கிறோம் . 


அதாவது “  நான் தியானம் செய்யப் போகணும்.. நேரமாச்சு “ என்று சொல்வதைக் கேட்டிருப்போம்..

அல்ல அன்பர்களே !

அது ஒரு தகுதி.. மிகப்பெரிய தகுதி !

இந்த அடிப்படை வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரார்த்தனை அல்லது வழிபாடு மூலம் நாம் ஆண்டவனிடம் பேச முயற்சிக்கிறோம்..

ஆனால் தியானத்தின் மூலம் ஆண்டவன் பேசுவதை நாம் கேட்க விழைகிறோம்.

அதாவது Prayer means We are trying to talk to God.. Meditation means We are willing to listen to God.

அதாவது எது எப்போதும் இருக்கிறதோ.. எது இயற்கையின் ஆக முக்கியமான படைப்போ.. அது பேசுவதைக் கேட்க விழைகிறோம்.

நமக்குப் பேச ஒன்றுமே இல்லை.. கேட்க..‌ கவனிக்க வேண்டும்.. அவ்வளவுதான் !

இதுதான் நந்தியின் தன்மை.. குணாதிசயம் எல்லாம்.. 

அமர்ந்திருக்கிறார்..‌ எச்சரிக்கையாகவும் இருக்கிறார்.

அந்த எச்சரிக்கை (alertness)‌ தான் மிக முக்கியமானது..‌ விழிப்புடன் இருக்கிறார்..‌ உறங்கவில்லை.

அவர் செயலற்றவராக அமர்ந்திருக்கவில்லை .

மிகுந்த செயலாற்றலுடன்.. மிகுந்த எச்சரிக்கையுடன்.. மிகுந்த உயிர்ப்புடன் அமர்ந்து இருக்கிறார். 

அதுதான் தியானம்.


சும்மா இருப்பதே சுகம் என்று இதைத்தான் நம் பெரியவர்கள் சொல்லி வைத்துள்ளார்களோ ?

நலமே விழைவு : நலமே விளைவு !



Friday, 17 November 2023

எட்டாத பேறுகளையும் எட்ட வைக்கும் எட்டுக்குடி

திருவாரூர் மாவட்டத்தில் சப்த விடங்கத் தலங்களான திருவாய்மூருக்கும், திருக்குவளைக்கும் இடையே அமைந்துள்ளது எட்டுக்குடி . 

அருணகிரிநாதரால் பாடப்பட்ட தலங்களில் இதுவும் ஒன்று.

இந்தக் கோவில் மூலவர் ஆனந்தவல்லி சமேத சௌந்தர நாயகன்.

ஆனால் சிவன் மூலவராக இருக்கும் எத்தனையோ திருத்தலங்களில் முருகனே வழிபாட்டு நாயகனாக இருப்பது போல இங்கும் முருகன் தான் முக்கிய வழிபாட்டு நாயகனாக இருக்கிறான்.

எட்டுக்குடியில் உள்ள முருகன் வள்ளி தெய்வானை சகிதம் காட்சி தருகிறார். 


இந்த முருகன் சிலை குறித்த வரலாறு மிகவும் சுவாரசியமானது.

நாகப்பட்டினம் அருகே உள்ள பொருள் வைத்த சேரி என்ற ஊரில் முருக பக்தராகிய ஒரு சிற்பி வாழ்ந்து வந்தார். எப்போதும் சரவணபவ என்று சொல்லிக் கொண்டே இருந்த அவர் ஒரு அழகான உயிரோட்டம் நிறைந்த முருகன் சிலையை வடித்தார்.

இதைப் பார்த்த முத்தரசன் என்ற அந்தப் பகுதியை அப்போது ஆண்ட சோழ மன்னன் அதன் அழகில் மயங்கி சிக்கல் கோவிலில் அதைப் பிரதிஷ்டை செய்தான்.

அதோடு இதேபோல் மற்றொரு சிலையை அந்தச் சிற்பி வடித்து விடக்கூடாது என்ற ஒரு குரூர எண்ணத்தில் அந்தச் சிற்பியின் வலது கை கட்டை விரலை வெட்டி விட்டு விட்டான்.

ஆனால் முருகனின் திருவுளமோ வேறு விதமாக இருந்ததை அந்தச் சிறுமதி படைத்த அரசன் அறியவில்லை.

கட்டை விரல் வெட்டப்பட்ட நிலையில் அருகில் இருந்த கிராமத்திற்குச் சென்ற சிற்பி அங்கு தன் கட்டை விரல் இல்லாமலேயே முருகப் பெருமானை வேண்டி மீண்டும் ஒரு சிலையை உருவாக்கினார். அச்சிலை மிக உயிர்த்துடிப்புடன் அமைந்தது. 

தெய்வீகமான அந்தச் சிலையில் இருந்து ஒளி வீசத் தொடங்கியது. 

சிற்பம் முழுவதுமாக முடிவதற்குள் அச்சிலைக்கு உயிர் வந்து சிலையில் முருகன் அமர்ந்திருக்கும் மயில் பறக்கத் தொடங்கியது. 

அதை கண்ட மன்னன் அந்த மயிலை “எட்டிப்பிடி” என உத்தரவிட்டான். கூடியிருந்த மக்களும் அப்படியே “பிடி பிடி” என்று கூக்குரல் போட அந்த மயில் அங்கேயே சிலையாக நின்று விட்டது. 

அது முதல் எட்டிப் பிடி ஊர் என்று பொதுவாக மக்கள் அந்த ஊரைக் குறிப்பிடத்‌ தொடங்க.. அந்த “எட்டிப் பிடி “என்ற சொற்கள் அந்த ஊரின் பேராகிப் போயிற்று . 

அதுதான் காலப்போக்கில் எட்டுக்குடியாக மாறிவிட்டது‌ என்று செவி வழிக் கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.

சூர சம்ஹார தலம்

திருமுருகன் பூமியில் வந்து உதித்ததே ஆணவம் மிகுந்த சூரபத்மனை அடக்கத்தான் .

அதனால் இங்கு முருகன் மிகவும் உக்கிரமாக இருக்கிறான். அவனுடைய கோபத்தைத் தணிக்கும் வகையில் தினந்தோறும் இங்கு பாலபிஷேகம் செய்யப்படுகிறது. சூரசம்ஹாரம் செய்ய முருகன் இத்தலத்தில் இருந்தே புறப்பட்டதாகத் தல புராணம் கூறுகிறது.

அதனால் இந்தத் தலம் ஆதி படை வீடு என்றும் பள்ளிப்படைத் தலம் என்றும் அழைக்கப்படுகிறது.

பொதுவாகப் படை வீடு என்றால் அரசர்கள் போர் செய்யும் போது அமைக்கப்படும் தற்காலிகக் குடியிருப்பு அதாவது temporary tents.

பிரகாரத்தில் முருகனுடன் சூரபத்மன் வதத்திற்குத் துணையாக சென்ற 9 வீரர்களின் திருவுருவங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது இதற்குச் சான்றாக உள்ளது.

கந்த புராணத்தில் கூறியுள்ளபடி இங்கு அருள்பாலிக்கும் திருமுருகன் சூரபதுமனை அழிப்பதற்கு முன்பாகத் தேவேந்திரனாகிய மயில் மீது ஏறி அமர்ந்துள்ள மூர்த்தமாகக் காணப்படுகிறார். 

பொதுவாக முருகனை எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் குழந்தை முருகனை.. கேட்கவே வேண்டாம்.. 


அந்தக் குழந்தை முருகனை இத்தலத்தில் பயந்த சுபாவம் கொண்ட குழந்தைகள் வழிபட அல்லது அந்த முருகனின் கதைகளைக் கேட்டு வர அவர்களுக்கு மனோ தைரியம் படிப்படியாக வந்து விடும் என்று இந்த வட்டாரத்தில் நம்புகிறார்கள் என்கிறார் அந்தப் பகுதியைச் சேர்ந்த எங்கள் நண்பர் ஒருவர்.

ஏனெனில் “ இந்தப் பாலகனா என்னைப் வெல்லப் போகிறான்?” என்று எந்த முருகனைப் பற்றிச் சூரபதுமன் ஏளனமாக‌ நினைத்தானோ… பேசினானோ அந்தப் பாலகன் தான் அம்புறாத் தூளியில் இருந்து அம்பை எடுக்கும் கோலத்தில் இந்த எட்டுக்குடிக் கோவிலில் கம்பீரமாக .. மூலவராக இருக்கிறார்.


கந்த சஷ்டி விழா எவ்வளவு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறதோ அதே அளவு கேதாரகௌரி விரதமும் இந்தக் கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.


கதாரகௌரி விரதம் தோன்றிய தலம் என்று கூடச் சொல்லப்படுகிறது .

வான்மீகர் ஜீவசமாதி

பழங்காலச் சித்தர்களில் ஒருவரான வான்மிகச் சித்தருக்கு இந்த எட்டுக்குடி முருகன் கோவிலில் இருக்கும் தல விருட்சமான வன்னி மரத்தடியில் ஜீவசமாதி உள்ளது. 


வடமொழியில் இராமாயணம் பாடிய வால்மீகி முனிவர் தான் தென்னகத்தில் வான்மீகர் என அழைக்கப் படுகிறார்… வான்மீகரைப் பற்றி சித்தர் போகர் பாடியுள்ளதால் இவரும் சித்தர் வரிசையில் இடம் பெறுகிறார் என்றும் கூறுகிறார்கள் .

கலியுகக் கடவுள் கந்தனைப் பணிவோம் !

ஓம் சரவணபவ !



Thursday, 16 November 2023

மயில் வடிவ மலையில் அமைந்துள்ள குன்றக்குடி முருகன்

மயூரகிரி.. சிகண்டி மலை என்றும் அழைக்கப்படும் குன்றக்குடி அல்லது குன்னக்குடி முருகன் கோவில் 1200 ஆண்டுகள் பழமையானது. 

காரைக்குடி அருகே அமைந்துள்ள இது பாண்டியர்களால் கட்டப்பட்ட ஒரு குடைவரைக் கோவிலாகவும் உள்ளது.

குன்றின் மேல் சண்முகநாதன் வீற்றிருக்க.. அம்மையப்பன் கீழேயுள்ள குடைவரைக் குகையில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.

முன்னொரு காலத்தில் அசுரர்கள் சிலர் பிரம்மாவின் வாகனமான அன்னமும் விஷ்ணுவின் வாகனமான கருடனும் தாங்கள் தான் மயிலை விட வேகமாகப் பறக்கக் கூடியவர்கள் என்று சொல்கின்றன என்று மயிலிடம் போட்டுக் கொடுக்கச் சற்றும் சிந்திக்காமல் கோபமடைந்த மயில் பெரிய உருவம் எடுத்து அன்னத்தையும் கருடனையும் விழுங்கி விடுகிறது.

இதை அறிந்த பிரம்மாவும் விஷ்ணுவும் முருகனிடம் முறையிட முருகனும் மயிலிடமிருந்து அன்னத்தையும் கருடனையும் மீட்டுக் கொடுத்தார்.

அதோடு மயிலின் மேலும் கோபம் கொண்டு அதன் கர்வத்தை அடக்க மலையாகப் போகும்படி சாபமிட அது இங்கு வந்து மலையாகிப் போனது.

ஆயினும் தன் தப்பை உணர்ந்து முருகப் பெருமானிடம் சாப விமோசனம் வேண்டி மலையாக இருந்து கொண்டே தவம் இருந்தது.

சில காலங்கள் கழித்து முருகப் பெருமானும் அதன் உண்மையான தவத்திற்கு இரங்கி.. அதற்குச் சாப விமோசனம் அளித்ததோடு அங்கேயே குன்றின் மேல் குடியும் கொண்டு விட்டார் என்பது தல வரலாறு என்கிறார்கள்.

இன்றும் குன்றக்குடி மலை மயிலின் தோற்றத்தில் தான் தெரிகிறது.

இங்குள்ள முருகப் பெருமானும் அவர் வீற்றிருக்கும் மயிலும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன என்கிறார்கள்.

அதேபோல் இங்கு சண்முகநாதரும், அவர்தம் துணைவியரான தெய்வயானையும் வள்ளியும் முருகனுக்கு இரு புறமும் தனித் தனி மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பது இக்கோவிலின் ஒரு தனிச்சிறப்பு. ஆணும், பெண்ணும் சரிசமம் என்பதை தெள்ளத் தெளிவாக முருகன் இதன் மூலம் உணர்த்துகின்றான்.

1780களில் சிவகங்கை மன்னர்களாக இருந்த புகழ்பெற்ற மருது பாண்டியர் சகோதரர்களில் மூத்தவரான பெரிய மருது ஐயாவுக்கு முதுகில் பிளவை ஏற்பட..‌ இந்தக் குன்றக்குடி முருகனை வேண்டி வழிபாடு செய்ததில் அது முற்றிலும் குணமாக..‌ அவர் இந்தக் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்ததற்கான கல்வெட்டு ஆதாரங்களும் இக் கோவிலில் உள்ளன.

அதேபோல் ஜாதகம் சரியில்லாத குழந்தைகளை இங்கு முருகனுக்குத் தத்துக் கொடுத்து விட்டு.. அது வளர்ந்து பெரிய பிள்ளை ஆனதும் அதன் திருமணத்திற்கு முன்பாக முருகனிடம் இருந்து மீண்டும் பெற்றுக் கொள்வதும் இக்கோவிலின் தனிச்சிறப்பு என்கிறார்கள்.

குன்றுதோறாடும் குமரன் திருவடிகள் சரணம் !

Wednesday, 15 November 2023

கச்சியப்பர் அருளிய கந்தபுராணம்

கச்சியப்ப சிவாச்சாரியர் என்ற அருளாளர் காஞ்சிபுரத்தில் குமரகோட்டத்தில் உள்ள கோவிலில் அர்ச்சகராக இருந்தவர்.


வடமொழி, தென்மொழி என இரு மொழிகளிலும் வல்லவராக இருந்த அவரின் கனவில் ஒருநாள் முருகப் பெருமான் தோன்றித் தமிழில் கந்த புராணத்தை இயற்ற ஆணையிட்டார்.


தன்னால் முடியுமா என்று தயங்கிய கச்சியப்ப சிவாச்சாரியருக்கு கந்த புராணத்தின் முதல் அடியான ‘திகடச் சக்கரம் செம்முகம் ஐந்துளான்’ என்னும் பதங்களை அசரீரியாக முருகப்பெருமானே எடுத்து கொடுத்தார்.

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்

சகட சக்கரத் தாமரை நாயகன்

அகட சக்கர வின்மணி யாவுறை

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்.


இந்தப் பாடலின் விளக்கம் என்னவென்றால்…

திகழ்கின்ற பத்து கரங்களையும் ஐந்து செம்முகங்களையும் உடையவன் : சக்ராயுதத்தை உடையவன் : 


தாமரைமேல் வீற்றிருப்பவன்: எங்கும் நிறைந்திருப்பவன்: விகட சக்கரனாகிய அந்த விநாயகனின் பாதங்களை வணங்குவோம் !

கச்சியப்பர் ஒரு கவிஞரும் வேதாந்தியும் ஆவார். இவரது படைப்புகளில் கந்த புராணம் மிகச் சிறந்தப் படைப்பாகக் கருதப்படுகிறது. இது சமஸ்கிருதம் மொழியில் எழுதப்பட்ட கந்த புராணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். மொத்தம் ஆறு காண்டங்களையும்  13,305 பாடல்களையும் உள்ளடக்கி அதே பாணியில் ஆக்கப்பட்டுள்ளது.

இவர் முதல் நாள் பாடல்கள் எழுதி முருகப் பெருமான் திருவடிகளில் வைத்து விட்டுச் சென்று விட்டார்.

மறுநாள் காலை பூஜை செய்யும் முன் அந்த ஏடுகளை எடுத்தால் அவற்றில் திருத்தங்கள் செய்து இருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்து விட்டார்.

அதுபோல் நாள்தோறும் அவர் முருகன் திருவடிகளில் வைத்து விட்டுப் போகும் பல பாடல்கள் திருத்தப்பட்டன .

முருகன் ஆணைப்படி கந்தபுராணம் பாடல்களை இவர் எழுதி நிறைவு செய்து அரங்கேற்றம் செய்யும் போது ஒரு புலவர் "திகடசக்கரம் " என்ற சொல்லுக்கு இலக்கண அமைப்பு கேட்க.. கச்சியப்பர் "திகழ் தச கரம்" அதாவது திகழும் பத்து கரங்களைக் கொண்டவன் என்று பொருள் கூற.. அந்தப் புலவர் அந்த விளக்கத்தை ஏற்க மறுக்கிறார்.

அவை கலைகிறது. கச்சியப்பர் மிகவும் மனக் கவலையுடன் இருக்க.. முருகன் " கவலைப் படாதே.. நாளை ஐயம் தீரும் " என்று அருள்வாக்கு சொல்கிறார்.

மறுநாள் அந்த அவை தொடங்கிய சிறிது நேரத்தில் ஒரு புலவர் கையில் ஒரு ஏட்டுடன் வருகிறார்.

" திகடசக்கரம் என்ற சொல் சரிதான்.. அந்தச் சொல்லுக்கு உரிய இலக்கணக் குறிப்பு இந்த வீர சோழியம்‌ இலக்கண ஏடுகளில் இருக்கிறது பாருங்கள் " என்று காட்ட.. அவையோர் அதிசயத்துடன் ஒத்துக் கொள்ள..‌ அடுத்த கணம் அந்தப் புலவரைக் காணோம்.

அவையோர் திகைக்கின்றனர்.

கச்சியப்பரோ வந்தது எம்பெருமான் திருமுருகன் என்று கண்ணீர் மல்க அவனை மனதார வணங்கித் தன் அரங்கேற்றத்தைத் தொடர்கிறார்.

அவையோர் அனைவரும் கச்சியப்பரின் பெரும் பேற்றை எண்ணி அவரை வணங்குகின்றனர்.

கச்சியப்பர் உரை இயற்றிய மண்டபம், கந்தபுராண அரங்கேற்ற மண்டபம் (வெளிப்புற மண்டபம்) இன்னும் கோயில் வளாகத்தில் உள்ளது. இப்போதும் கூட இந்த வளாகத்தில் மயில்கள் குவிந்து வருகின்றன. 

உண்மையான அடியார்களை எந்தவிதமான இக்கட்டிலிருந்தும் இறைவன் காப்பாற்றி விடுவான் என்பது இந்த வரலாறு நமக்கு உணர்த்தும் நீதி பிள்ளைகளா !

எல்லோரிடமும் உண்மையாக இருப்போம்.. கடவுளிடம் கட்டாயமாக உண்மையோடு இருப்போம்.

சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் .

“சஷ்டியை நோக்கச் சரவணபவனார் “ என்று நாம் அநேகமாக அன்றாடம் பாடும் கந்தசஷ்டிக் கவசத்தை.. ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான திருக்கோவில்களில் ஒன்றான சென்னிமலை முருகப்பெருமான் ஆலயத்தில் தான் அரங்கேற்றினார் வணக்கத்துக்குரிய 

தேவராய சாமிகள் என்ற அருளாளரான முருகபக்தர் . 

அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இந்தக் கோவில், சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது.

பின் நாக்குச் சித்தர் : 

சென்னிமலை முருகன் கோவிலில், பதினெட்டு சித்தர்களில் ஒருவராக கருதப்படும் பின்னாக்கு சித்தர் என்பவருக்கு சன்னிதி உள்ளது. இந்த சித்தர், இங்குதான் சமாதி அடைந்தார் என்று சொல்லப்படுகிறது. 

இவர் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு, தன் நாக்கை பின்னுக்கு மடித்து அருள்வாக்கு கூறிய காரணத்தால், இந்தப் பெயர் வந்ததாக சிலர் சொல்கின்றனர். 

அதுவே மருவி பலரும் இவரை ‘புண்ணாக்குச் சித்தர்’ என்று அழைக்க வழி செய்து விட்டதாகவும் கூறுகின்றனர். இதே போல் சத்திய ஞானியை குருவாகக் கொண்ட சரவணமுனிவர் என்பவர், சிரகிரி வரலாற்றை எழுதினார். அப்போது அவருக்கு முருகப்பெருமான் காட்சியளித்ததாக கூறப்படுகிறது. இந்த முனிவரின் சமாதியும், மலையின் மேல் பகுதியில் இருக்கிறது. 

இத்தலம் உருவான வரலாறு என்று புராணங்கள் சொல்வது :

அனந்தன் என்ற நாகத்திற்கும், வாயுதேவனுக்கும் இடையே ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி ஏற்பட்டது. 

அப்போது பாம்பானது மேரு மலையை இறுகச் சுற்றிக் கொள்ள.. வாயு பகவானோ தனது முழு பலத்தோட மேரு மலையோட இண்டு இடுக்கள்ளெல்லாம் புகுந்து புறப்பட…‌மேரு மலை உடைந்து பல பகுதிகளாகப் பிரிந்து பல இடங்களில் விழுந்தது. 

இதில் மலையின் சிகரப்பகுதி, பூந்துறை என்ற இடத்தில் விழுந்தது. 

அந்த இடமே சென்னிமலை. 

இந்த ஊருக்குச் ‘சிரகிரி, புஷ்பகிரி, மகுடகிரி’ போன்ற பெயர்களும் உண்டு.

சென்னிமலை முருகப்பெருமான் ஆலயம்

இந்த மலையின் ஒரு பகுதியில் காராம் பசு ஒன்று, தினமும் பால் சொரிய விடுவதை, அந்த பசுவின் உரிமையாளர் கண்டார். இதையடுத்து அவர் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தார். 

அப்போது பூரண முகப்பொலிவுடன் முருகப்பெருமானின் சிலை கிடைத்தது. 

அந்த விக்கிரகத்தின் இடுப்பு வரை நல்ல வேலைப்பாடுடனும், முகம் அற்புத பொலிவுடனும் இருந்தது. ஆனால், இடுப்புக்குக் கீழ் பாதம் வரை சரியான வேலைப்பாடு இல்லாமல் கரடு முரடாக இருந்தது. 

அதை ஒரு குறையாக எண்ணி, அந்தப் பாகத்தையும் சிறந்த சிற்பியைக் கொண்டு உளியால் சரி செய்ய முயன்றபோது அந்தச்  சிலையிலிருந்து ரத்தம் கொட்டியதாகவும், இதனால் அதே நிலையில் சென்னிமலையில் அந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் இன்னொரு வரலாற்றுச் செய்தி கூறுகிறது.

இதெல்லாவற்றையும் விட கலியுகக் கடவுள் கந்தன்  12-02-1984 அன்று அதாவது இன்றைக்கு 39 ஆண்டுகளுக்கு முன்பு.. 1984 ல் நிகழ்த்திய ஒரு அதியற்புத நிகழ்வைப் பார்ப்போம் வாங்க.

வேட்டுவபாளையம் பூசாரி அவர்கள் கனவில் வந்து காங்கேயம் எருதுகள் கொண்ட இரட்டை மாட்டு வண்டி பூட்டி, சென்னிமலை 1320 திருப்படிகள் மூலமாக வரச் சொன்னதின் பேரில் நடந்த சம்பவம் இன்றளவும் இந்தக் கலி முத்திய காலத்திலும் ஒரு அதிசய நிகழ்வு.


காளை மாடுகளைச் சென்னிமலையை அடுத்த முத்தூர் துரைசாமிக் கவுண்டர் கொடுக்க.. 

விராலிக்காட்டூர் கோபால்சாமிக் கவுண்டர் கொடுக்க..‌ சாட்டையை இன்னொரு‌ பக்தர் வழங்க..

12.02.1984 காலை 7.30 மணிக்கு அந்த முருகன் அருள் பெற்ற வண்டியை ஓட்ட வந்தவர் பச்சை வேட்டி மஞ்சள் துண்டு அணிந்த 60 வயதான பெருந்துறை சிவன்மலைக் கவுண்டர்.


இது போன்ற நிகழ்வுகள் முன்னெப்போதும் நடைபெறாத நிலையில்..‌ இந்த நிகழ்வுக்கு அனுமதி வழங்க முதலில் மிகவும் தயங்கிய ஈரோடு மாவட்ட அன்றைய ஆட்சியர் திரு. ராஜாராமன்.. துணை ஆட்சியர் திரு. சந்திரப் பிரகாஷ் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. அப்பாதுரை மற்றும் அந்த வட்டார முக்கியப் பிரமுகர்கள் உட்பட சுமார் ஆறு லட்சம் மக்கள் பிரமிப்புடனும்.. மகிழ்ச்சியுடனும் கண்டு களித்த அந்த விநோத நிகழ்வில்..

அரோரா கோஷங்களுக்கு இடையில் சற்றும் மிரளாமல் படிகளில் ஏறிய அந்தக் கம்பீரமான காளைகள்..‌ சரியாக 46 நிமிடங்களில் 1320 படிகளையும் ஏறி திருமுருகன் சந்நிதியின் முன் வண்டியைக் கொண்டு சென்று நிறுத்தின .

இந்த அபூர்வ நிகழ்வை மாலை முரசு கோவைப் பதிப்பு “ 6 லட்சம் பேர் கண்டு களித்த ஆபூர்வ நிகழ்வு”  என்று கொட்டை எழுத்துக்களில் முதல் பக்கச் செய்தியாக அப்போது வெளியிட்டது.

அதோடு தி ஹிந்து.. இண்டியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஆங்கில நாளிதழ்களும்.. தினமணி தினத்தந்தி போன்ற தமிழ் நாளிதழ்களும்.. இதயம் பேசுகிறது.. தேவி போன்ற தமிழ் வார இதழ்களும் இச் செய்தியை வெளியிட்டன.

Press Trust of India செய்தி நிறுவனமும் இந்த நிகழ்வை வெளியிட அகில இந்திய அளவில் இந்த அபூர்வ நிகழ்வு மக்களைச் சென்றடைந்தது.. பேசு பொருளாக ஆனது.

கலியுகத் தெய்வம் கந்தா நீயே ! கருணையின் விளக்கமும் கடம்பா நீயே !

சிவன் மலை திருக்கோவில்


சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில் அம்பு வைத்து பூஜை - கொரோனா முடிவுக்கு வருமா

சிவன்மலை

சிவன் மலை அருள்மிகு சுப்ரமண்யர் திருக் கோவில் திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் அருகில் உள்ளது.

பேரு சிவன் மலை.. ஆனால் அருள் பாலிப்பது சிவனார் திருமகன் சுப்ரமண்யன் !

அருணகிரிநாதரால் பாடப் பெற்ற இத்தலம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும்.

இங்கு எழுந்தருளியுள்ள முருகனுக்கு, சிவ+அசலம் + பதி = சிவாசலபதி என்று ஒரு அழகான பெயர். 

சிவ அதாவது சிவன் : அசலம் என்றால் மலை : பதி - தலைவன்.

சிவன் மலை என்றதும் சமீப காலங்களில் நமக்கு நினைவுக்கு வருவது 

சிவன்மலை கோவில் சிறப்புகளில், பிரசித்தி பெற்ற ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். 

மனிதர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை அல்லது  மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்குக் காரண மூர்த்தி என்ற பெயரும் உள்ளது. 

சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, தனக்கு இன்ன பொருளை வைத்து பூஜை செய்யுமாறு கூறுவார். 

அதன்படி, பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை வைத்துப் பூஜை செய்யலாமா என்று வெள்ளை மற்றும் வண்ணப் பூக்கள் கட்டிய பொட்டலங்களை சுவாமி முன் போட்டு சுவாமியிடம் உத்தரவு கேட்கப்படும். 

எடுத்த எடுப்பிலேயே வெள்ளைப் பூக்கள் வந்து விட்டால் உத்தரவு கிடைத்து விட்டது என்று பொருள்.

அந்தப் பொருள் அல்லது பொருட்கள் ஆண்டவர் உத்தரவு பெட்டியான ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்படும். 

இன்னொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரை, பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

அந்தப் பக்தரின் பெயர் மற்றும் ஊர் பெயரும் எழுதி வைக்கப்படுகிறது.

இந்த நடைமுறை இக்கோவிலில் பலப்பல காலமாக நடைமுறையில் உள்ளது.

எடுத்துக்காட்டாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோயில் பெட்டியில் சொம்பில் தண்ணீர் வைக்க உத்தரவு வந்தது. இதனால் நாட்டில் என்ன நடக்கப் போகின்றது என அது பற்றி அப்போது யாருக்கும் தெரியவில்லை. 

ஆனால் சில நாட்களிலேய தமிழகத்தில் சுனாமி என்ற ஆழிப் பேரலை ஏற்பட்டு வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தியது .

பின்னர் ஒருமுறை நீர் வைத்து வழிபட்டபோதுதான் கேதார்நாத்தில் வெள்ளம் ஏற்பட்டது.

அப்போது தான் இந்த உத்தரவுப் பெட்டியில் உள்ள பொருளின் மதிப்புப் புரிந்தது.. 

இந்தத் தல இறைவனின் பெருமையும் இன்னும் அதிகமானது.

இன்னும் சில எடுத்துக்காட்டுகள்: 

அந்த உத்தரவுப் பெட்டியில் துப்பாக்கி வைத்த போது சீனப் மற்றும் பாகிஸ்தான் போர்கள் வந்தன‌‌ என்கிறார்கள்.

சால்பரி என்று அழைக்கப்படும் தண்ணீர் இறைக்கப் பயன்படும் ஒரு பொருள் வைத்தார்கள் : அதன் பயன்பாடு குறைந்து மின்மோட்டார்கள் வந்தன.

சைக்கிள் வைக்கப்பட்ட போது மொபெட் போன்ற இருசக்கர வாகனங்கள் பெருகத் தொடங்கின.

மணல் வைத்தார்கள் : அதன் விலை ஏறியது.

மண் வைத்த போது ரியல் எஸ்டேட் தொழில் பெருமளவில் வளர்ந்தது. 

மற்றோரு முறை மண் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்ட போது குஜராத்தில் பயங்கரமான நிலநடுக்கம் உண்டாகிப் பேரழிவு ஏற்பட்டது.

மஞ்சள்.. தங்கம் நெல் வைத்த போது அவற்றின் விலைகள் ஏறின என்று பரவலாகப் பேசப்படுகிறது.

இப்படி அந்தச் சிவன் மலை சுப்ரமண்யர் ஏதோவொரு வகையில் மக்களுக்கு நல்லதையும் கெட்டதையும் எச்சரிக்கையாகக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

அடுத்து இந்த மலை பற்றிய புராணத் தகவல்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

சிவன் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது. 

பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், 

வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு திரும்பி வந்து குடிகொண்டதாகவும் தல வரலாறு கூறுகிறது. 

அதனால் தான் மூலவராக, சுப்ரமணியர், வள்ளியுடன் ஒரே கருவறையில் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். 

சித்தர்களில் ஒருவரும்  சிவவாக்கியம் எனும் நூலை இயற்றியவருமான வணக்கத்துக்குரிய சிவவாக்கியர் இங்கு தங்கித் தவம் செய்து தமது விருப்பதெய்வமான முருகப்பெருமானுக்கு திருக்கோயில் எழுப்பி வழிபட்டார். அவர் பெயரிலேயே மலை ’சிவன் மலை’ என்று வழங்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

மேலும், அக்காலத்தில் இந்த மலையைச் சுற்றிப் பசுக்கள் சூழ்ந்தும் மேய்ந்தும் வர வளம் பெற்றுள்ளது. 

பசுக்களைச் சேய் அதாவது குழந்தை என்றும் அந்தக் காலத்தில் அழைப்பார்கள்.

இதனால் சிவனின் சேயான குகன் வந்து அமர்ந்து அருள்பாலிப்பதாலும் சேமலை என்று அழைக்கப்பட்டது. காலப் போக்கில் அது சிவன்மலை என மாறிவிட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.

பால்வளம் மிக்க வனத்தில் கோவில் கொண்டுள்ள நல்ல மங்கை உடனமர் சிரவனீஸ்வரர் மகனே, சிவன்மலை சுப்ரமணிய சுவாமி. 

மூலிகைகள் நிறைந்துள்ள மலையில் ஏறி இறங்குவதால் பல நோய்களும் குணமாகும் என்கிறார்கள்.

முசுகுந்தச் சக்ரவர்த்தி பல உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு என்னென்னவோ மருத்துவம் பார்த்தும் தீராமல் 

கௌதமகரிஷி என்ற முனிவரிடம் சென்று தன் உடல் உபாதையை தீர்க்கும்படி வேண்ட.. அவரோ ‘சிவன்மலை முருகனை வணங்கினால் உன் வியாதி நீங்கும்’ என்றார். கௌதமகரிஷி முனிவர் கூறியது போல் முசுகுந்தன் சிவன்மலை முருகனை தரிசிக்க அந்த அரசனை வதைத்த நோய் விலகியது என்பது‌ வரலாறு.

மலை மேல், சுரலோக நாயகி சமேத ஜூரஹரேசுவரர் எழுந்தருளியுள்ளார். காய்ச்சல் வந்தவர்கள் மிளகு ரசம் வைத்து, இங்கு வந்து பூஜை செய்து உண்டால், காய்ச்சல் நீங்கும் என்ற நம்பிக்கை இன்றும் நடைமுறையில் உள்ளது.

இந்தச் சிவன் மலையோட சில சிறப்புகளைப் பார்க்கலாமா ?

எல்லா‌ சைவ சமயத் திருத் தலங்களிலும் முதல் வழிபாடு பிள்ளையாருக்கே.

மற்ற திருத்தலங்கள் போலன்றி இங்கு முதல் வழிபாடு முருகப்பெருமானுக்கே. 

நவக்கிரகங்கள் அனைத்தும் சூரியபகவானைப் பார்த்து நிற்கின்றன. இதனால் நவக்கிரகங்களின் வக்கிரத் தன்மையிலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

இங்கு சங்கீதம் எழுப்பும் musical pillars உள்ளன.

அணையாத தீபம் எரிந்து கொண்டுள்ளது மற்றுமொரு சிறப்பாகும். 

திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோவில் சென்று சூரியனை வழிபடுவதால் ஏற்படும் சிறப்பும் இங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

பொதுவாக மயில் தன் தலையை வடக்கு நோக்கியும் தன் தோகையைத் தெற்கு நோக்கியும் வைத்திருந்தால் தெய்வீகத் தன்மை கொண்டது என்பார்கள் பெரியவர்கள்.

இத்தலத்தில் அப்படித்தான் மயில் காட்சி தருகிறது.

இன்னொரு அதிசயம் இந்த மலைக் கோவிலில்‌ என்னவென்றால் இதன் தல விருட்சம் தொரட்டி மரம்.

இதைப்பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம் வாங்க.

தொரட்டி என்பது உயரமான மரங்களில் இருந்து காய் அல்லது பழங்களைப் பறிக்க உதவும் ஒரு 10 - 12 அடி நீளமான குச்சி.

இதன் பெயரிலேயே ஒரு மரம் இருக்கிறது என்ற‌ தகவல் நமக்குப் புதிது தான்.

இந்தத் தொரட்டி மரம் வறண்ட நிலப் பகுதிகளிலும் பாலைவனப் பகுதிகளிலும் 8 முதல் 15 அடிகள் வரை வளருமாம் வளருமாம்.

நல்ல நிழல் தரக்கூடிய இந்தத் தொரட்டி மரத்தை செங்கம் மரம் என்றும் இங்குள்ள கிராம மக்கள் அழைக்கிறார்கள்.

சிவகங்கை மாவட்டம் கொளிங்குன்றம் ஊரில் உள்ள கொடுங்கநாதர் கோயிலிலும், கோவை புதூர்க் கோட்டை தண்டு மாரியம்மன் கோயிலிலும், கோட்டைக்கரையம்மன் கோயிலிலும் இதுவே தலமரம்.

கோயம்புத்தூர் கோட்டையிலே வேப்ப மரம், தொரட்டி மரத்தின் நிழலிலே வடக்கு நோக்கி தண்டு மாரியம்மன் காட்சி தருகிறார்.

எவ்வளவு அற்புதங்கள் நிறைந்த இடம் பாருங்கள் பிள்ளைகளா ?

இது போன்ற நம்ப முடியாத ஆனால் இன்றும் நடந்து கொண்டு இருக்கிற பல அதிசயங்கள் நிறைந்தது நமது புண்ணிய பூமியான தமிழகம் மட்டுமல்ல.. பாரதமும் கூட.

வாழ்க தமிழகம் !

வாழிய பாரத மணித்திரு நாடு !

Tuesday, 14 November 2023

எண்கண் முருகன் கோவில்.


படைப்புத் தொழிலுக்கு அடிப்படையான ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருள் என்ன என்று முருகன் படைப்புக் கடவுளான பிரம்மனைக் கேட்க.. பொருள் முழுவதையும் சொல்லத் தெரியாமல் பிரம்மா விழிக்க.. 

முருகன் பிரம்மனைச் சிறையில் அடைத்து விட்டுப் படைப்புத் தொழிலைத் தானே செய்யத் தொடங்குகிறார்.

மனம் வருந்திய பிரம்மா தன் எட்டுக் கண்களாலும் உருக்கத்துடன் முருகப் பெருமானையும்..‌தன் தொழிலைத் தன்னிடமே திருப்பித்தர முருகனிடம் சொல்ல வேண்டும் என்று சிவபெருமானையும் வேண்டுகிறார் .

சிவனும் பிரம்மா‌ அவருடைய வேலையைச் செய்ய விட்டு விடும்படி முருகனிடம் சொல்ல.. முருகன் மனமிரங்கி பிரம்மாவுக்கு இந்தத் தலத்தில் பிரணவ உபதேசம் செய்ததால் எண்கண் எனப் பெயர் பெற்றது என்று ஒரு புராண வரலாறு.

சிக்கல்.. எட்டுக்குடி மற்றும் எண்கண் - இந்த மூன்று திருத்தலங்களிலும் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் ஆறுமுகப்பெருமான் சிலையானது ஒரே சிற்பியால் முத்தரசன் என்ற சோழ மன்னன் காலத்தில் வடிவமைக்கப்பட்டதாம்.

 இந்த சிலையை வடித்த சிற்பி முதலாவதாக சிக்கல் முருகன் கோவிலில் சிலை வடித்த போது மிகவும் அழகாக அமைந்து விடவே.. இம்மாதிரியாக வேறொரு சிலையை அந்தச் சிற்பி வடிக்க கூடாது எனக் கூறி முத்தரச சோழன் சிற்பியின் வலது கை கட்டைவிரலை தானமாக பெற்றதாகக் கூறப்படுகிறது.

வலது கையின் கட்டைவிரல் இல்லாத சிற்பி மீண்டும் எட்டுக்குடியில் முருகன் சிலையை வடித்ததை அறிந்த முத்தரச சோழன் சிற்பியின் இரு கண்களையும் தானமாக பெற்றுக் கொண்டதாகவும், மேலும் வலது கை கட்டை விரல் இல்லாமலும் இரு கண்களும் இல்லாத சிற்பியை அசரீரியாக எண்கண் முருகன் சிலை வடிக்க இறைவன் பணித்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

எண்கணில் முருகனின் சிலையை சிற்பி செதுக்கிக் கொண்டு இருக்கும் போது, ஒரு பெண்ணின் உதவியை நாடினார். 

அந்தப் பெண்ணும் உதவி செய்கிறார்.

அந்த நிலையில், அந்தப் பெண்ணின் ஒரு விரலைத் தவறுதலாக வெட்டி விட , இரத்தம் வெளியேறத் தொடங்கியது. 

இந்த இரத்தத் துளிகள் அவரது கண்களில் விழுந்து அவரது கண்களை குணப்படுத்தியது. சிற்பி பார்க்கமுடிவதை உணர்ந்தவுடன், ஆச்சரியத்துடன் "எங்கண்!" என்று ஆச்சரியத்திலியும் சந்தோஷத்துலியும் பெரிதாகச் சத்தம் போட அந்த “என்கண்” என்பதே எண்கண் என்று மாறிப் போச்சுன்னு சொல்றவங்களும் இருக்காங்க.

இது உண்மையாகவும் இருக்கலாம்.

தனது பக்தர்களுக்கு எத்தனை சோதனைகளைக் கொடுத்தாலும்.. ஒரு கட்டத்தில் அவர்களை ஓடோடி வந்து காத்து… அவர்கள் பெருமையை உலகறிய வைத்து விடுகிறான் இறைவன் என்பதற்கு நிறைய நிறையச் சான்றுகள் உள்ளன.

இந்த ஆலயத்தில் சிலை வடித்த சிற்பிக்கு இறைவன் கண் கொடுத்ததால் எண்கண் என்று இவ்வூர் பெயர் பெற்றதாகவும் சொல்றாங்க.

இரண்டு கண்களும் வலது கை கட்டை விரலும் இல்லாமல் சிற்பி வடித்த சிலை தான் இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள். 

Saturday, 11 November 2023

தீபாவளி கொண்டாடும் பல சமயங்கள்

" தீபாவளி என்பது சிவபெருமானுக்குரிய ஒரு உன்னதமான விரத நாள் என்று சொல்லலாம். கேதார கெளரி விரத நாளைத் தான் நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.

இந்த நாள் பல வகைகளிலும் சிறப்பு வாய்ந்தது " என்பார் எங்கள் ஆச்சி .

"அதாவது ஒவ்வொரு தெய்வ ரூபங்களும் பூமிக்கு வந்து ஒவ்வொரு பொருட்களில் எழுந்தருளி, மக்களுக்கு அருளாசி வழங்குகிறார்கள்.. அதனால் தான் லட்சுமி பூஜை உள்ளிட்ட பல முக்கிய பூஜைகளையும் இந்த நாளில் நாம் செய்கிறோம் "என்பார் அவர்.

இந்தக் கேதாரகௌரி விரதம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமி அன்று தொடங்கி.. ஐப்பசி மாத அமாவாசையான தீபாவளி நன்னாளில் நிறைவு பெறுகிறது.

இவ்விரதம் பொதுவாக அந்த 21 நாட்களும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்று .

ஆனால் எல்லோராலும் அதைச் செய்ய முடிவதில்லை என்ற நடைமுறைச் சிக்கலினால்.. இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெரும்பாலானோர் நிறைவு நாளான தீபாவளி அன்று மட்டும் உபவாசம் இருப்பார்கள்.

இந்த விரதத்தைப் பொதுவாக வீட்டில் நிறைவேற்றுவதில்லை.

21 நாட்களும் விரதம் இருப்போர் ஒரு மஞ்சள் கயிறில் முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முடிச்சுப் போட்டு வருவார்கள்.

21 நாட்கள் விரதத்தைக் குறிக்கும் 21 முடிச்சுக்கள் போடப்பட்டிருக்கும் மஞ்சள் கயிறு ஒன்றுடன்..

வெற்றிலை பாக்கு மற்றும் 21 அதிரசங்கள்.. 21 வாழைப் பழங்கள்.. சர்க்கரைப் பொங்கல்.. புளியோதரை

இப்படி நைவேத்தியம் பலவற்றைத் தயார் செய்து.. அவற்றை அதற்கென்றே வைத்திருக்கும் பிரம்பு அல்லது மூங்கில் கூடை அல்லது வெண்கல அல்லது பித்தளைச் சட்டியில் வைத்துச் சுத்தமான மஞ்சள் துணி ஒன்றினால் மூடி எடுத்துக் கொண்டு.. அமாவாசை முடிவதற்குள் அருகிலுள்ள கோவிலுக்குச் சென்று.. இவர்களைப் போன்றே விரதத்தை நிறைவு செய்ய வந்திருக்கும் பெண்களுடன் சேர்ந்து அமர்ந்து.. கேதாரகௌரி விரதம் ஏன் இருக்கிறோம் என்பதைச் சொல்லும் கதையைப் படித்து..

பின்னர் நிறைவாக எல்லோருடைய படையலுக்கும் கோவில் குருக்கள் தூப தீபம் காட்டியதும்.. அந்தக் கயிறை கண்களில் ஒற்றி அணிந்து கொள்வதுடன் கேதாரகௌரி விரதத்தை நிறைவு செய்வார்கள்.

பொதுவாக இந்த விரத்தத்தினைப் பெண்களே கடைப் பிடிக்கின்றனர் .

கன்னியர்கள் நல்ல கணவன் அமைய வேண்டியும்.. சுமங்கலிகள் தம் கணவருடன் இணைபிரியாது வாழ வேண்டியும் இவ்விரத்தத்தினை மேற் கொள்கின்றனர்.

இது பொதுவாக எங்கள் வீட்டுப் பெரியவர்கள் தீபாவளி குறித்துச் சொன்ன விஷயங்கள்.

புராண நாயகம் எனப்படும் கந்த புராணத்தில் இந்தக் கேதாரகௌரி விரதம் குறித்துச் சொல்லப்பட்டிருப்பதாவது :

"கேதாரம் என்பது மலையைச் சார்ந்த வயல் வெளிகளைக் குறிப்பது. இங்கு சிவபெருமான் கேதாரேஸ்வரராகச்.. சுயம்பு லிங்கமாகத் தோன்றினார்.

இந்த இமயமலைச் சாரலில் அம்பிகையான உமையம்மை சிவனை நினைந்து வழிபடுகிறாள்.

சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் நிறைவுற்றது இந்த நாளில் தான்.

விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியைப் பார்த்து "உனக்கு என்ன வரம் வேண்டும்?"என்று கேட்க.. "உங்களை விட்டு ஒரு கணமும் பிரிய இயலாதபடி உங்கள் உடம்பில் ஒரு பகுதியாக நான் ஆக வேண்டும் " என்று வரம் கேட்க.. சிவபெருமானும் தன்னில் ஒரு பாதியாக அம்மையை ஆக்கிக் கொண்டு 'அர்த்தநாரீசுவரர்' கோலம் கொள்கிறார் ".

மேற்கொண்டு படித்தது.. பல நண்பர்கள் சொல்லக் கேட்ட தீபாவளி குறித்த தகவல்கள் :

பாரதத்தின் வட மாநிலங்களில் பல வகையான வண்ணக் கோலங்கள் போட்டு.. வீட்டிலும் வீட்டுக்கு வெளியிலும் தீபங்களையும் வரிசை வரிசையாக ஏற்றிக் (நாம் கார்த்திகை தீபம் கொண்டாடுவது போல்) கொண்டாடுகிறார்கள்.

அடுத்து எங்கள் நெருங்கிய நண்பரும் புகழ்பெற்ற 3 கல்லூரிகளில் வரலாற்றுப் பேராசிரியராக இருந்தவருமான ஒரு பெரியவர் தீபாவளி குறித்துக் கூறிய சில தகவல்கள் .

பௌத்தத்தில் தீபாவளி :

சித்தார்த்தன் புத்தன் ஆகி விட்டான்.

அவனது தந்தையோ புத்திர சோகத்தில் தவிக்கிறார்.

மகனைக் காண விழைகிறார்.

தலைநகருக்கு அருகில் இருக்கும் மங்களகிரியில் மகன் இருப்பதை அறிந்து அவனை அழைத்து வரத் தூதுவன் ஒருவனை அனுப்புகிறார்.

போன தூதன் திரும்பி வரவில்லை.

அடுத்து ஒருவனை அனுப்புகிறார்.‌ அவனும் திரும்பவில்லை.

அடுத்தடுத்து அனுப்பப்பட்ட தூதர்கள் யாரும் திரும்பவில்லை.

விசாரித்துப் பார்த்தல் தூதுவர்களாகப் போனவர்கள் அனைவரும் புத்தர் பெருமானின் கொள்கைகளாலும்.. பேச்சாற்றலாலும் ஈர்க்கப்பட்டு அவருடைய சீடர்களாக மாறித் துறவு மேற்கொண்டு விட்டனர் என்று தெரிகிறது.

யோசித்த அரசன் தனது நம்பிக்கைக்குரிய அமைச்சரை அனுப்புகிறார். கட்டாயம் இவர் தன் மகனை அழைத்து வந்துவிடுவார் என்று நினைக்கிறார்.

அமைச்சரும் போகிறார். அவரும் புத்தர் பெருமானின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு துறவியாக மாறினாலும் அரச கட்டளையை நிறைவேற்றுகிறார்

புத்தர் பெருமான் தனது சீடர்களுடன் தலைநகருக்கு வருவதை அறிந்த மக்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.

வீடுகளில்.. வீதிகளில் வரிசை வரிசையாக விளக்குகளை ஏற்றி வைத்துப் புத்தர் பெருமானுக்குத் தங்களின் வரவேற்பை மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடன் வழங்கிப் பணிகின்றனர் .

அந்த நாள் தீபாவளித் திருநாளாகப் பௌத்தர்களாலும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

அசோகர் புத்த மதத்தைத் தழுவிய நாள் இது என்றும் சொல்லப்படுகிறது.

சமண சமயத்தில் தீபாவளி :

தற்போதைய பீகாரில் அப்போது இருந்த பவபுரி (Pavapuri) நகரத்து அரண்மனைப் பகுதியில் நிறைந்திருந்த மக்கள் மத்தியில் மகாவீரர் அறவுரைகள் வழங்குகிறார். விடியும் வரை இச்சொற்பொழிவு தொடர்கிறது.

கேட்டுக் கொண்டே இருந்த மக்கள் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கிப் போனார்கள்.

மகாவீரரும் தாம் அமர்ந்த இடத்தில் அப்படியே இறைநிலை அடைந்திருந்தார்.

பொழுது விடிந்து அவர் அருகில் வந்து அவரைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியுடன் இத்தகவலை அரசனிடம் தெரிவிக்கின்றனர் .

இது ஒரு அபூர்வ நிகழ்வாக மன்னன் மனதில் பட.. அறிஞர் பெருமக்களுடன் ஆலோசித்த மன்னர், ‘உலகின் ஞான ஒளி’யான மகாவீரரை மக்கள் நினைவுகூர்ந்து வழிபடும் பொருட்டு, அவர் இறைநிலை அடைந்த இந்நாளில் வீடுகள் தோறும் விளக்கேற்றி வைத்து வணங்கி விழாவாகக் கொண்டாட உத்தரவிடுகிறார் .

'தீபம்’ என்றால் ‘விளக்கு’. ‘ஆவளி’ எனில் ‘வரிசை’. இதன்படி ‘தீபங்களின் வரிசை’ என்று பொருள்படும் விதமாக இந்நாளை ஆண்டுதோறும் அதிகாலையிலேயே துயில் எழுந்து சமணர்களும் அன்று துவங்கி இன்று வரைத் தீபாவளித் திருநாளகக் கொண்டாடி வருகின்றனர்.

சீக்கியர்களும் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுகின்றனர்.

அவர்களுக்கு இந்நாள் “தியாக மயமான சரித்திரங்களை “ நினைவு கூறும் ஒரு பெருநாள்.

“சீக்கியர்கள் தங்கள் குருவிடம் வந்து உபதேசம் பெற உகந்த நாள் இந்தத் தீபாவளித் திருநாள் “ என்று சீக்கிய மதத்தின் மூன்றாவது குருவான வணக்கத்துக்குரிய அமர்தாஸ் அவர்களின் வாக்கை இன்றும் அவர்கள் பின்பற்றுகின்றனர்.

சீக்கியப் பெருமக்கள் மிகவும் போற்றும்.. நாமெல்லாம் பொற்கோவில் என்று அழைக்கும் ஹர்மந்திர் சாஹிப் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது ஒரு தீபாவளி நன்னாள் அன்று தான்.

முகலாய மன்னன் ஜஹாங்கீரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு..‌ மத மாற்றத்தை வலியுறுத்திப்.. பலவிதமான சித்திரவதைகளுக்கு ஆளான சீக்கிய மதத்தின் ஆறாவது குருவான ஹர் கோபிந்த் சிங் சிறையிலிருந்து விடுதலை ஆனதும் இந்த நாளில் தான்.

அதனால் அவர்களும் தீபாவளியைப் “ பந்தி சோர் திவஸ் “ என்று மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வழக்கம் ஏற்பட்டது.

சீக்கியர்களின் பத்தாவது மற்றும் இறுதி குருவான வணக்கத்திற்குரிய குரு கோவிந்த் சிங் 1699 ஆம் ஆண்டு சீக்கியப் பண்டிகைகளில் அதி முக்கியத்துவம் வாய்ந்த பைசாகிக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகத்‌ தீபாவளியை அறிவிக்கிறார்.

அதோடு குரு கோவிந்த் சிங்கின் உற்ற நண்பரான குரு பாயி மணிசிங் மொகலாயருக்குக் கப்பம் கட்ட மறுத்ததால் 1737ல் கைது செய்யப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுப் பலவிதமான சித்திரவதைகளுக்கு ஆளாகி தீபாவளியன்று மரணத்தைத் தழுவுகிறார்.

இப்படியாகச் சீக்கியர்களுக்கு தீபாவளித் திருநாள் தங்களின் குருமார்கள் சிலரின் தியாகத்தையும் புனிதத்தையும் நினைவூட்டும் திருநாள்.

நாம் ஆடிப் பெருக்கின் போது அகல் தீபங்களைக் காவிரி அன்னைக்குச் சமர்பிப்பது போல்.. இந்தப் புனித நாளில் பொற்கோவில் குளத்தில் சீக்கிய சிறுமிகள் விளக்குகளை மிதக்க விடுகின்றனர்.

வங்காளம் , மஹாராஷ்டிரம், கொங்கண் , கர்நாடகா மற்றும் கோவாவின் சில பகுதிகளிலும் கொண்டாடப்படும் தீபாவளி நேபாளத்தில் ஒரு முக்கியமான சமயம் சார்ந்த விழாவாக உள்ளது.

ஆக இந்தத் தீபாவளிப் பண்டிகை இந்து.. பௌத்த சமணம்.. சீக்கியம் என்று மதங்கள் தாண்டி மக்களைக் கொண்டாட வைக்கிறது.. மகிழ்ச்சியை அள்ளி வழங்குகிறது.

அந்த வகையில் எல்லோரின் வாழ்க்கையிலும் துயர இருள் நீங்கி.. மகிழ்ச்சி ஒளி வீசினால் நல்லது தானே அன்பு நண்பர்களே?

தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும்

நெஞ்சம் நிறைந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் !

நலமே விழைவு : நலமே விளைவு !

படங்கள் உதவி கூகுள்.

நன்றி கூகுள்.