Wednesday, 15 November 2023

சிவன் மலை திருக்கோவில்


சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில் அம்பு வைத்து பூஜை - கொரோனா முடிவுக்கு வருமா

சிவன்மலை

சிவன் மலை அருள்மிகு சுப்ரமண்யர் திருக் கோவில் திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் அருகில் உள்ளது.

பேரு சிவன் மலை.. ஆனால் அருள் பாலிப்பது சிவனார் திருமகன் சுப்ரமண்யன் !

அருணகிரிநாதரால் பாடப் பெற்ற இத்தலம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும்.

இங்கு எழுந்தருளியுள்ள முருகனுக்கு, சிவ+அசலம் + பதி = சிவாசலபதி என்று ஒரு அழகான பெயர். 

சிவ அதாவது சிவன் : அசலம் என்றால் மலை : பதி - தலைவன்.

சிவன் மலை என்றதும் சமீப காலங்களில் நமக்கு நினைவுக்கு வருவது 

சிவன்மலை கோவில் சிறப்புகளில், பிரசித்தி பெற்ற ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். 

மனிதர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை அல்லது  மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்குக் காரண மூர்த்தி என்ற பெயரும் உள்ளது. 

சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, தனக்கு இன்ன பொருளை வைத்து பூஜை செய்யுமாறு கூறுவார். 

அதன்படி, பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை வைத்துப் பூஜை செய்யலாமா என்று வெள்ளை மற்றும் வண்ணப் பூக்கள் கட்டிய பொட்டலங்களை சுவாமி முன் போட்டு சுவாமியிடம் உத்தரவு கேட்கப்படும். 

எடுத்த எடுப்பிலேயே வெள்ளைப் பூக்கள் வந்து விட்டால் உத்தரவு கிடைத்து விட்டது என்று பொருள்.

அந்தப் பொருள் அல்லது பொருட்கள் ஆண்டவர் உத்தரவு பெட்டியான ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்படும். 

இன்னொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரை, பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

அந்தப் பக்தரின் பெயர் மற்றும் ஊர் பெயரும் எழுதி வைக்கப்படுகிறது.

இந்த நடைமுறை இக்கோவிலில் பலப்பல காலமாக நடைமுறையில் உள்ளது.

எடுத்துக்காட்டாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோயில் பெட்டியில் சொம்பில் தண்ணீர் வைக்க உத்தரவு வந்தது. இதனால் நாட்டில் என்ன நடக்கப் போகின்றது என அது பற்றி அப்போது யாருக்கும் தெரியவில்லை. 

ஆனால் சில நாட்களிலேய தமிழகத்தில் சுனாமி என்ற ஆழிப் பேரலை ஏற்பட்டு வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தியது .

பின்னர் ஒருமுறை நீர் வைத்து வழிபட்டபோதுதான் கேதார்நாத்தில் வெள்ளம் ஏற்பட்டது.

அப்போது தான் இந்த உத்தரவுப் பெட்டியில் உள்ள பொருளின் மதிப்புப் புரிந்தது.. 

இந்தத் தல இறைவனின் பெருமையும் இன்னும் அதிகமானது.

இன்னும் சில எடுத்துக்காட்டுகள்: 

அந்த உத்தரவுப் பெட்டியில் துப்பாக்கி வைத்த போது சீனப் மற்றும் பாகிஸ்தான் போர்கள் வந்தன‌‌ என்கிறார்கள்.

சால்பரி என்று அழைக்கப்படும் தண்ணீர் இறைக்கப் பயன்படும் ஒரு பொருள் வைத்தார்கள் : அதன் பயன்பாடு குறைந்து மின்மோட்டார்கள் வந்தன.

சைக்கிள் வைக்கப்பட்ட போது மொபெட் போன்ற இருசக்கர வாகனங்கள் பெருகத் தொடங்கின.

மணல் வைத்தார்கள் : அதன் விலை ஏறியது.

மண் வைத்த போது ரியல் எஸ்டேட் தொழில் பெருமளவில் வளர்ந்தது. 

மற்றோரு முறை மண் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்ட போது குஜராத்தில் பயங்கரமான நிலநடுக்கம் உண்டாகிப் பேரழிவு ஏற்பட்டது.

மஞ்சள்.. தங்கம் நெல் வைத்த போது அவற்றின் விலைகள் ஏறின என்று பரவலாகப் பேசப்படுகிறது.

இப்படி அந்தச் சிவன் மலை சுப்ரமண்யர் ஏதோவொரு வகையில் மக்களுக்கு நல்லதையும் கெட்டதையும் எச்சரிக்கையாகக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

அடுத்து இந்த மலை பற்றிய புராணத் தகவல்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

சிவன் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது. 

பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், 

வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு திரும்பி வந்து குடிகொண்டதாகவும் தல வரலாறு கூறுகிறது. 

அதனால் தான் மூலவராக, சுப்ரமணியர், வள்ளியுடன் ஒரே கருவறையில் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். 

சித்தர்களில் ஒருவரும்  சிவவாக்கியம் எனும் நூலை இயற்றியவருமான வணக்கத்துக்குரிய சிவவாக்கியர் இங்கு தங்கித் தவம் செய்து தமது விருப்பதெய்வமான முருகப்பெருமானுக்கு திருக்கோயில் எழுப்பி வழிபட்டார். அவர் பெயரிலேயே மலை ’சிவன் மலை’ என்று வழங்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

மேலும், அக்காலத்தில் இந்த மலையைச் சுற்றிப் பசுக்கள் சூழ்ந்தும் மேய்ந்தும் வர வளம் பெற்றுள்ளது. 

பசுக்களைச் சேய் அதாவது குழந்தை என்றும் அந்தக் காலத்தில் அழைப்பார்கள்.

இதனால் சிவனின் சேயான குகன் வந்து அமர்ந்து அருள்பாலிப்பதாலும் சேமலை என்று அழைக்கப்பட்டது. காலப் போக்கில் அது சிவன்மலை என மாறிவிட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.

பால்வளம் மிக்க வனத்தில் கோவில் கொண்டுள்ள நல்ல மங்கை உடனமர் சிரவனீஸ்வரர் மகனே, சிவன்மலை சுப்ரமணிய சுவாமி. 

மூலிகைகள் நிறைந்துள்ள மலையில் ஏறி இறங்குவதால் பல நோய்களும் குணமாகும் என்கிறார்கள்.

முசுகுந்தச் சக்ரவர்த்தி பல உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு என்னென்னவோ மருத்துவம் பார்த்தும் தீராமல் 

கௌதமகரிஷி என்ற முனிவரிடம் சென்று தன் உடல் உபாதையை தீர்க்கும்படி வேண்ட.. அவரோ ‘சிவன்மலை முருகனை வணங்கினால் உன் வியாதி நீங்கும்’ என்றார். கௌதமகரிஷி முனிவர் கூறியது போல் முசுகுந்தன் சிவன்மலை முருகனை தரிசிக்க அந்த அரசனை வதைத்த நோய் விலகியது என்பது‌ வரலாறு.

மலை மேல், சுரலோக நாயகி சமேத ஜூரஹரேசுவரர் எழுந்தருளியுள்ளார். காய்ச்சல் வந்தவர்கள் மிளகு ரசம் வைத்து, இங்கு வந்து பூஜை செய்து உண்டால், காய்ச்சல் நீங்கும் என்ற நம்பிக்கை இன்றும் நடைமுறையில் உள்ளது.

இந்தச் சிவன் மலையோட சில சிறப்புகளைப் பார்க்கலாமா ?

எல்லா‌ சைவ சமயத் திருத் தலங்களிலும் முதல் வழிபாடு பிள்ளையாருக்கே.

மற்ற திருத்தலங்கள் போலன்றி இங்கு முதல் வழிபாடு முருகப்பெருமானுக்கே. 

நவக்கிரகங்கள் அனைத்தும் சூரியபகவானைப் பார்த்து நிற்கின்றன. இதனால் நவக்கிரகங்களின் வக்கிரத் தன்மையிலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

இங்கு சங்கீதம் எழுப்பும் musical pillars உள்ளன.

அணையாத தீபம் எரிந்து கொண்டுள்ளது மற்றுமொரு சிறப்பாகும். 

திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோவில் சென்று சூரியனை வழிபடுவதால் ஏற்படும் சிறப்பும் இங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

பொதுவாக மயில் தன் தலையை வடக்கு நோக்கியும் தன் தோகையைத் தெற்கு நோக்கியும் வைத்திருந்தால் தெய்வீகத் தன்மை கொண்டது என்பார்கள் பெரியவர்கள்.

இத்தலத்தில் அப்படித்தான் மயில் காட்சி தருகிறது.

இன்னொரு அதிசயம் இந்த மலைக் கோவிலில்‌ என்னவென்றால் இதன் தல விருட்சம் தொரட்டி மரம்.

இதைப்பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம் வாங்க.

தொரட்டி என்பது உயரமான மரங்களில் இருந்து காய் அல்லது பழங்களைப் பறிக்க உதவும் ஒரு 10 - 12 அடி நீளமான குச்சி.

இதன் பெயரிலேயே ஒரு மரம் இருக்கிறது என்ற‌ தகவல் நமக்குப் புதிது தான்.

இந்தத் தொரட்டி மரம் வறண்ட நிலப் பகுதிகளிலும் பாலைவனப் பகுதிகளிலும் 8 முதல் 15 அடிகள் வரை வளருமாம் வளருமாம்.

நல்ல நிழல் தரக்கூடிய இந்தத் தொரட்டி மரத்தை செங்கம் மரம் என்றும் இங்குள்ள கிராம மக்கள் அழைக்கிறார்கள்.

சிவகங்கை மாவட்டம் கொளிங்குன்றம் ஊரில் உள்ள கொடுங்கநாதர் கோயிலிலும், கோவை புதூர்க் கோட்டை தண்டு மாரியம்மன் கோயிலிலும், கோட்டைக்கரையம்மன் கோயிலிலும் இதுவே தலமரம்.

கோயம்புத்தூர் கோட்டையிலே வேப்ப மரம், தொரட்டி மரத்தின் நிழலிலே வடக்கு நோக்கி தண்டு மாரியம்மன் காட்சி தருகிறார்.

எவ்வளவு அற்புதங்கள் நிறைந்த இடம் பாருங்கள் பிள்ளைகளா ?

இது போன்ற நம்ப முடியாத ஆனால் இன்றும் நடந்து கொண்டு இருக்கிற பல அதிசயங்கள் நிறைந்தது நமது புண்ணிய பூமியான தமிழகம் மட்டுமல்ல.. பாரதமும் கூட.

வாழ்க தமிழகம் !

வாழிய பாரத மணித்திரு நாடு !

No comments:

Post a Comment