கச்சியப்ப சிவாச்சாரியர் என்ற அருளாளர் காஞ்சிபுரத்தில் குமரகோட்டத்தில் உள்ள கோவிலில் அர்ச்சகராக இருந்தவர்.
வடமொழி, தென்மொழி என இரு மொழிகளிலும் வல்லவராக இருந்த அவரின் கனவில் ஒருநாள் முருகப் பெருமான் தோன்றித் தமிழில் கந்த புராணத்தை இயற்ற ஆணையிட்டார்.
தன்னால் முடியுமா என்று தயங்கிய கச்சியப்ப சிவாச்சாரியருக்கு கந்த புராணத்தின் முதல் அடியான ‘திகடச் சக்கரம் செம்முகம் ஐந்துளான்’ என்னும் பதங்களை அசரீரியாக முருகப்பெருமானே எடுத்து கொடுத்தார்.
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்.
இந்தப் பாடலின் விளக்கம் என்னவென்றால்…
திகழ்கின்ற பத்து கரங்களையும் ஐந்து செம்முகங்களையும் உடையவன் : சக்ராயுதத்தை உடையவன் :
தாமரைமேல் வீற்றிருப்பவன்: எங்கும் நிறைந்திருப்பவன்: விகட சக்கரனாகிய அந்த விநாயகனின் பாதங்களை வணங்குவோம் !
கச்சியப்பர் ஒரு கவிஞரும் வேதாந்தியும் ஆவார். இவரது படைப்புகளில் கந்த புராணம் மிகச் சிறந்தப் படைப்பாகக் கருதப்படுகிறது. இது சமஸ்கிருதம் மொழியில் எழுதப்பட்ட கந்த புராணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். மொத்தம் ஆறு காண்டங்களையும் 13,305 பாடல்களையும் உள்ளடக்கி அதே பாணியில் ஆக்கப்பட்டுள்ளது.
இவர் முதல் நாள் பாடல்கள் எழுதி முருகப் பெருமான் திருவடிகளில் வைத்து விட்டுச் சென்று விட்டார்.
மறுநாள் காலை பூஜை செய்யும் முன் அந்த ஏடுகளை எடுத்தால் அவற்றில் திருத்தங்கள் செய்து இருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்து விட்டார்.
அதுபோல் நாள்தோறும் அவர் முருகன் திருவடிகளில் வைத்து விட்டுப் போகும் பல பாடல்கள் திருத்தப்பட்டன .
முருகன் ஆணைப்படி கந்தபுராணம் பாடல்களை இவர் எழுதி நிறைவு செய்து அரங்கேற்றம் செய்யும் போது ஒரு புலவர் "திகடசக்கரம் " என்ற சொல்லுக்கு இலக்கண அமைப்பு கேட்க.. கச்சியப்பர் "திகழ் தச கரம்" அதாவது திகழும் பத்து கரங்களைக் கொண்டவன் என்று பொருள் கூற.. அந்தப் புலவர் அந்த விளக்கத்தை ஏற்க மறுக்கிறார்.
அவை கலைகிறது. கச்சியப்பர் மிகவும் மனக் கவலையுடன் இருக்க.. முருகன் " கவலைப் படாதே.. நாளை ஐயம் தீரும் " என்று அருள்வாக்கு சொல்கிறார்.
மறுநாள் அந்த அவை தொடங்கிய சிறிது நேரத்தில் ஒரு புலவர் கையில் ஒரு ஏட்டுடன் வருகிறார்.
" திகடசக்கரம் என்ற சொல் சரிதான்.. அந்தச் சொல்லுக்கு உரிய இலக்கணக் குறிப்பு இந்த வீர சோழியம் இலக்கண ஏடுகளில் இருக்கிறது பாருங்கள் " என்று காட்ட.. அவையோர் அதிசயத்துடன் ஒத்துக் கொள்ள.. அடுத்த கணம் அந்தப் புலவரைக் காணோம்.
அவையோர் திகைக்கின்றனர்.
கச்சியப்பரோ வந்தது எம்பெருமான் திருமுருகன் என்று கண்ணீர் மல்க அவனை மனதார வணங்கித் தன் அரங்கேற்றத்தைத் தொடர்கிறார்.
அவையோர் அனைவரும் கச்சியப்பரின் பெரும் பேற்றை எண்ணி அவரை வணங்குகின்றனர்.
கச்சியப்பர் உரை இயற்றிய மண்டபம், கந்தபுராண அரங்கேற்ற மண்டபம் (வெளிப்புற மண்டபம்) இன்னும் கோயில் வளாகத்தில் உள்ளது. இப்போதும் கூட இந்த வளாகத்தில் மயில்கள் குவிந்து வருகின்றன.
உண்மையான அடியார்களை எந்தவிதமான இக்கட்டிலிருந்தும் இறைவன் காப்பாற்றி விடுவான் என்பது இந்த வரலாறு நமக்கு உணர்த்தும் நீதி பிள்ளைகளா !எல்லோரிடமும் உண்மையாக இருப்போம்.. கடவுளிடம் கட்டாயமாக உண்மையோடு இருப்போம்.
No comments:
Post a Comment