Thursday, 16 November 2023

மயில் வடிவ மலையில் அமைந்துள்ள குன்றக்குடி முருகன்

மயூரகிரி.. சிகண்டி மலை என்றும் அழைக்கப்படும் குன்றக்குடி அல்லது குன்னக்குடி முருகன் கோவில் 1200 ஆண்டுகள் பழமையானது. 

காரைக்குடி அருகே அமைந்துள்ள இது பாண்டியர்களால் கட்டப்பட்ட ஒரு குடைவரைக் கோவிலாகவும் உள்ளது.

குன்றின் மேல் சண்முகநாதன் வீற்றிருக்க.. அம்மையப்பன் கீழேயுள்ள குடைவரைக் குகையில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.

முன்னொரு காலத்தில் அசுரர்கள் சிலர் பிரம்மாவின் வாகனமான அன்னமும் விஷ்ணுவின் வாகனமான கருடனும் தாங்கள் தான் மயிலை விட வேகமாகப் பறக்கக் கூடியவர்கள் என்று சொல்கின்றன என்று மயிலிடம் போட்டுக் கொடுக்கச் சற்றும் சிந்திக்காமல் கோபமடைந்த மயில் பெரிய உருவம் எடுத்து அன்னத்தையும் கருடனையும் விழுங்கி விடுகிறது.

இதை அறிந்த பிரம்மாவும் விஷ்ணுவும் முருகனிடம் முறையிட முருகனும் மயிலிடமிருந்து அன்னத்தையும் கருடனையும் மீட்டுக் கொடுத்தார்.

அதோடு மயிலின் மேலும் கோபம் கொண்டு அதன் கர்வத்தை அடக்க மலையாகப் போகும்படி சாபமிட அது இங்கு வந்து மலையாகிப் போனது.

ஆயினும் தன் தப்பை உணர்ந்து முருகப் பெருமானிடம் சாப விமோசனம் வேண்டி மலையாக இருந்து கொண்டே தவம் இருந்தது.

சில காலங்கள் கழித்து முருகப் பெருமானும் அதன் உண்மையான தவத்திற்கு இரங்கி.. அதற்குச் சாப விமோசனம் அளித்ததோடு அங்கேயே குன்றின் மேல் குடியும் கொண்டு விட்டார் என்பது தல வரலாறு என்கிறார்கள்.

இன்றும் குன்றக்குடி மலை மயிலின் தோற்றத்தில் தான் தெரிகிறது.

இங்குள்ள முருகப் பெருமானும் அவர் வீற்றிருக்கும் மயிலும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன என்கிறார்கள்.

அதேபோல் இங்கு சண்முகநாதரும், அவர்தம் துணைவியரான தெய்வயானையும் வள்ளியும் முருகனுக்கு இரு புறமும் தனித் தனி மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பது இக்கோவிலின் ஒரு தனிச்சிறப்பு. ஆணும், பெண்ணும் சரிசமம் என்பதை தெள்ளத் தெளிவாக முருகன் இதன் மூலம் உணர்த்துகின்றான்.

1780களில் சிவகங்கை மன்னர்களாக இருந்த புகழ்பெற்ற மருது பாண்டியர் சகோதரர்களில் மூத்தவரான பெரிய மருது ஐயாவுக்கு முதுகில் பிளவை ஏற்பட..‌ இந்தக் குன்றக்குடி முருகனை வேண்டி வழிபாடு செய்ததில் அது முற்றிலும் குணமாக..‌ அவர் இந்தக் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்ததற்கான கல்வெட்டு ஆதாரங்களும் இக் கோவிலில் உள்ளன.

அதேபோல் ஜாதகம் சரியில்லாத குழந்தைகளை இங்கு முருகனுக்குத் தத்துக் கொடுத்து விட்டு.. அது வளர்ந்து பெரிய பிள்ளை ஆனதும் அதன் திருமணத்திற்கு முன்பாக முருகனிடம் இருந்து மீண்டும் பெற்றுக் கொள்வதும் இக்கோவிலின் தனிச்சிறப்பு என்கிறார்கள்.

குன்றுதோறாடும் குமரன் திருவடிகள் சரணம் !

No comments:

Post a Comment