" தீபாவளி என்பது சிவபெருமானுக்குரிய ஒரு உன்னதமான விரத நாள் என்று சொல்லலாம். கேதார கெளரி விரத நாளைத் தான் நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.
இந்த நாள் பல வகைகளிலும் சிறப்பு வாய்ந்தது " என்பார் எங்கள் ஆச்சி .
"அதாவது ஒவ்வொரு தெய்வ ரூபங்களும் பூமிக்கு வந்து ஒவ்வொரு பொருட்களில் எழுந்தருளி, மக்களுக்கு அருளாசி வழங்குகிறார்கள்.. அதனால் தான் லட்சுமி பூஜை உள்ளிட்ட பல முக்கிய பூஜைகளையும் இந்த நாளில் நாம் செய்கிறோம் "என்பார் அவர்.
இந்தக் கேதாரகௌரி விரதம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமி அன்று தொடங்கி.. ஐப்பசி மாத அமாவாசையான தீபாவளி நன்னாளில் நிறைவு பெறுகிறது.
இவ்விரதம் பொதுவாக அந்த 21 நாட்களும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்று .
ஆனால் எல்லோராலும் அதைச் செய்ய முடிவதில்லை என்ற நடைமுறைச் சிக்கலினால்.. இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெரும்பாலானோர் நிறைவு நாளான தீபாவளி அன்று மட்டும் உபவாசம் இருப்பார்கள்.
இந்த விரதத்தைப் பொதுவாக வீட்டில் நிறைவேற்றுவதில்லை.
21 நாட்களும் விரதம் இருப்போர் ஒரு மஞ்சள் கயிறில் முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முடிச்சுப் போட்டு வருவார்கள்.
21 நாட்கள் விரதத்தைக் குறிக்கும் 21 முடிச்சுக்கள் போடப்பட்டிருக்கும் மஞ்சள் கயிறு ஒன்றுடன்..
வெற்றிலை பாக்கு மற்றும் 21 அதிரசங்கள்.. 21 வாழைப் பழங்கள்.. சர்க்கரைப் பொங்கல்.. புளியோதரை
இப்படி நைவேத்தியம் பலவற்றைத் தயார் செய்து.. அவற்றை அதற்கென்றே வைத்திருக்கும் பிரம்பு அல்லது மூங்கில் கூடை அல்லது வெண்கல அல்லது பித்தளைச் சட்டியில் வைத்துச் சுத்தமான மஞ்சள் துணி ஒன்றினால் மூடி எடுத்துக் கொண்டு.. அமாவாசை முடிவதற்குள் அருகிலுள்ள கோவிலுக்குச் சென்று.. இவர்களைப் போன்றே விரதத்தை நிறைவு செய்ய வந்திருக்கும் பெண்களுடன் சேர்ந்து அமர்ந்து.. கேதாரகௌரி விரதம் ஏன் இருக்கிறோம் என்பதைச் சொல்லும் கதையைப் படித்து..
பின்னர் நிறைவாக எல்லோருடைய படையலுக்கும் கோவில் குருக்கள் தூப தீபம் காட்டியதும்.. அந்தக் கயிறை கண்களில் ஒற்றி அணிந்து கொள்வதுடன் கேதாரகௌரி விரதத்தை நிறைவு செய்வார்கள்.
பொதுவாக இந்த விரத்தத்தினைப் பெண்களே கடைப் பிடிக்கின்றனர் .
கன்னியர்கள் நல்ல கணவன் அமைய வேண்டியும்.. சுமங்கலிகள் தம் கணவருடன் இணைபிரியாது வாழ வேண்டியும் இவ்விரத்தத்தினை மேற் கொள்கின்றனர்.
இது பொதுவாக எங்கள் வீட்டுப் பெரியவர்கள் தீபாவளி குறித்துச் சொன்ன விஷயங்கள்.
புராண நாயகம் எனப்படும் கந்த புராணத்தில் இந்தக் கேதாரகௌரி விரதம் குறித்துச் சொல்லப்பட்டிருப்பதாவது :
"கேதாரம் என்பது மலையைச் சார்ந்த வயல் வெளிகளைக் குறிப்பது. இங்கு சிவபெருமான் கேதாரேஸ்வரராகச்.. சுயம்பு லிங்கமாகத் தோன்றினார்.
இந்த இமயமலைச் சாரலில் அம்பிகையான உமையம்மை சிவனை நினைந்து வழிபடுகிறாள்.
சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் நிறைவுற்றது இந்த நாளில் தான்.
விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியைப் பார்த்து "உனக்கு என்ன வரம் வேண்டும்?"என்று கேட்க.. "உங்களை விட்டு ஒரு கணமும் பிரிய இயலாதபடி உங்கள் உடம்பில் ஒரு பகுதியாக நான் ஆக வேண்டும் " என்று வரம் கேட்க.. சிவபெருமானும் தன்னில் ஒரு பாதியாக அம்மையை ஆக்கிக் கொண்டு 'அர்த்தநாரீசுவரர்' கோலம் கொள்கிறார் ".
மேற்கொண்டு படித்தது.. பல நண்பர்கள் சொல்லக் கேட்ட தீபாவளி குறித்த தகவல்கள் :
பாரதத்தின் வட மாநிலங்களில் பல வகையான வண்ணக் கோலங்கள் போட்டு.. வீட்டிலும் வீட்டுக்கு வெளியிலும் தீபங்களையும் வரிசை வரிசையாக ஏற்றிக் (நாம் கார்த்திகை தீபம் கொண்டாடுவது போல்) கொண்டாடுகிறார்கள்.
அடுத்து எங்கள் நெருங்கிய நண்பரும் புகழ்பெற்ற 3 கல்லூரிகளில் வரலாற்றுப் பேராசிரியராக இருந்தவருமான ஒரு பெரியவர் தீபாவளி குறித்துக் கூறிய சில தகவல்கள் .
பௌத்தத்தில் தீபாவளி :
சித்தார்த்தன் புத்தன் ஆகி விட்டான்.
அவனது தந்தையோ புத்திர சோகத்தில் தவிக்கிறார்.
மகனைக் காண விழைகிறார்.
தலைநகருக்கு அருகில் இருக்கும் மங்களகிரியில் மகன் இருப்பதை அறிந்து அவனை அழைத்து வரத் தூதுவன் ஒருவனை அனுப்புகிறார்.
போன தூதன் திரும்பி வரவில்லை.
அடுத்து ஒருவனை அனுப்புகிறார். அவனும் திரும்பவில்லை.
அடுத்தடுத்து அனுப்பப்பட்ட தூதர்கள் யாரும் திரும்பவில்லை.
விசாரித்துப் பார்த்தல் தூதுவர்களாகப் போனவர்கள் அனைவரும் புத்தர் பெருமானின் கொள்கைகளாலும்.. பேச்சாற்றலாலும் ஈர்க்கப்பட்டு அவருடைய சீடர்களாக மாறித் துறவு மேற்கொண்டு விட்டனர் என்று தெரிகிறது.
யோசித்த அரசன் தனது நம்பிக்கைக்குரிய அமைச்சரை அனுப்புகிறார். கட்டாயம் இவர் தன் மகனை அழைத்து வந்துவிடுவார் என்று நினைக்கிறார்.
அமைச்சரும் போகிறார். அவரும் புத்தர் பெருமானின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு துறவியாக மாறினாலும் அரச கட்டளையை நிறைவேற்றுகிறார்
புத்தர் பெருமான் தனது சீடர்களுடன் தலைநகருக்கு வருவதை அறிந்த மக்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.
வீடுகளில்.. வீதிகளில் வரிசை வரிசையாக விளக்குகளை ஏற்றி வைத்துப் புத்தர் பெருமானுக்குத் தங்களின் வரவேற்பை மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடன் வழங்கிப் பணிகின்றனர் .
அந்த நாள் தீபாவளித் திருநாளாகப் பௌத்தர்களாலும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
அசோகர் புத்த மதத்தைத் தழுவிய நாள் இது என்றும் சொல்லப்படுகிறது.
சமண சமயத்தில் தீபாவளி :
தற்போதைய பீகாரில் அப்போது இருந்த பவபுரி (Pavapuri) நகரத்து அரண்மனைப் பகுதியில் நிறைந்திருந்த மக்கள் மத்தியில் மகாவீரர் அறவுரைகள் வழங்குகிறார். விடியும் வரை இச்சொற்பொழிவு தொடர்கிறது.
கேட்டுக் கொண்டே இருந்த மக்கள் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கிப் போனார்கள்.
மகாவீரரும் தாம் அமர்ந்த இடத்தில் அப்படியே இறைநிலை அடைந்திருந்தார்.
பொழுது விடிந்து அவர் அருகில் வந்து அவரைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியுடன் இத்தகவலை அரசனிடம் தெரிவிக்கின்றனர் .
இது ஒரு அபூர்வ நிகழ்வாக மன்னன் மனதில் பட.. அறிஞர் பெருமக்களுடன் ஆலோசித்த மன்னர், ‘உலகின் ஞான ஒளி’யான மகாவீரரை மக்கள் நினைவுகூர்ந்து வழிபடும் பொருட்டு, அவர் இறைநிலை அடைந்த இந்நாளில் வீடுகள் தோறும் விளக்கேற்றி வைத்து வணங்கி விழாவாகக் கொண்டாட உத்தரவிடுகிறார் .
'தீபம்’ என்றால் ‘விளக்கு’. ‘ஆவளி’ எனில் ‘வரிசை’. இதன்படி ‘தீபங்களின் வரிசை’ என்று பொருள்படும் விதமாக இந்நாளை ஆண்டுதோறும் அதிகாலையிலேயே துயில் எழுந்து சமணர்களும் அன்று துவங்கி இன்று வரைத் தீபாவளித் திருநாளகக் கொண்டாடி வருகின்றனர்.
சீக்கியர்களும் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுகின்றனர்.
அவர்களுக்கு இந்நாள் “தியாக மயமான சரித்திரங்களை “ நினைவு கூறும் ஒரு பெருநாள்.
“சீக்கியர்கள் தங்கள் குருவிடம் வந்து உபதேசம் பெற உகந்த நாள் இந்தத் தீபாவளித் திருநாள் “ என்று சீக்கிய மதத்தின் மூன்றாவது குருவான வணக்கத்துக்குரிய அமர்தாஸ் அவர்களின் வாக்கை இன்றும் அவர்கள் பின்பற்றுகின்றனர்.
சீக்கியப் பெருமக்கள் மிகவும் போற்றும்.. நாமெல்லாம் பொற்கோவில் என்று அழைக்கும் ஹர்மந்திர் சாஹிப் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது ஒரு தீபாவளி நன்னாள் அன்று தான்.
முகலாய மன்னன் ஜஹாங்கீரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு.. மத மாற்றத்தை வலியுறுத்திப்.. பலவிதமான சித்திரவதைகளுக்கு ஆளான சீக்கிய மதத்தின் ஆறாவது குருவான ஹர் கோபிந்த் சிங் சிறையிலிருந்து விடுதலை ஆனதும் இந்த நாளில் தான்.
அதனால் அவர்களும் தீபாவளியைப் “ பந்தி சோர் திவஸ் “ என்று மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வழக்கம் ஏற்பட்டது.
சீக்கியர்களின் பத்தாவது மற்றும் இறுதி குருவான வணக்கத்திற்குரிய குரு கோவிந்த் சிங் 1699 ஆம் ஆண்டு சீக்கியப் பண்டிகைகளில் அதி முக்கியத்துவம் வாய்ந்த பைசாகிக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகத் தீபாவளியை அறிவிக்கிறார்.
அதோடு குரு கோவிந்த் சிங்கின் உற்ற நண்பரான குரு பாயி மணிசிங் மொகலாயருக்குக் கப்பம் கட்ட மறுத்ததால் 1737ல் கைது செய்யப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுப் பலவிதமான சித்திரவதைகளுக்கு ஆளாகி தீபாவளியன்று மரணத்தைத் தழுவுகிறார்.
இப்படியாகச் சீக்கியர்களுக்கு தீபாவளித் திருநாள் தங்களின் குருமார்கள் சிலரின் தியாகத்தையும் புனிதத்தையும் நினைவூட்டும் திருநாள்.
நாம் ஆடிப் பெருக்கின் போது அகல் தீபங்களைக் காவிரி அன்னைக்குச் சமர்பிப்பது போல்.. இந்தப் புனித நாளில் பொற்கோவில் குளத்தில் சீக்கிய சிறுமிகள் விளக்குகளை மிதக்க விடுகின்றனர்.
வங்காளம் , மஹாராஷ்டிரம், கொங்கண் , கர்நாடகா மற்றும் கோவாவின் சில பகுதிகளிலும் கொண்டாடப்படும் தீபாவளி நேபாளத்தில் ஒரு முக்கியமான சமயம் சார்ந்த விழாவாக உள்ளது.
ஆக இந்தத் தீபாவளிப் பண்டிகை இந்து.. பௌத்த சமணம்.. சீக்கியம் என்று மதங்கள் தாண்டி மக்களைக் கொண்டாட வைக்கிறது.. மகிழ்ச்சியை அள்ளி வழங்குகிறது.
அந்த வகையில் எல்லோரின் வாழ்க்கையிலும் துயர இருள் நீங்கி.. மகிழ்ச்சி ஒளி வீசினால் நல்லது தானே அன்பு நண்பர்களே?
தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும்
நெஞ்சம் நிறைந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் !
நலமே விழைவு : நலமே விளைவு !
படங்கள் உதவி கூகுள்.
நன்றி கூகுள்.
No comments:
Post a Comment