Wednesday, 15 November 2023

சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் .

“சஷ்டியை நோக்கச் சரவணபவனார் “ என்று நாம் அநேகமாக அன்றாடம் பாடும் கந்தசஷ்டிக் கவசத்தை.. ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான திருக்கோவில்களில் ஒன்றான சென்னிமலை முருகப்பெருமான் ஆலயத்தில் தான் அரங்கேற்றினார் வணக்கத்துக்குரிய 

தேவராய சாமிகள் என்ற அருளாளரான முருகபக்தர் . 

அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இந்தக் கோவில், சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது.

பின் நாக்குச் சித்தர் : 

சென்னிமலை முருகன் கோவிலில், பதினெட்டு சித்தர்களில் ஒருவராக கருதப்படும் பின்னாக்கு சித்தர் என்பவருக்கு சன்னிதி உள்ளது. இந்த சித்தர், இங்குதான் சமாதி அடைந்தார் என்று சொல்லப்படுகிறது. 

இவர் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு, தன் நாக்கை பின்னுக்கு மடித்து அருள்வாக்கு கூறிய காரணத்தால், இந்தப் பெயர் வந்ததாக சிலர் சொல்கின்றனர். 

அதுவே மருவி பலரும் இவரை ‘புண்ணாக்குச் சித்தர்’ என்று அழைக்க வழி செய்து விட்டதாகவும் கூறுகின்றனர். இதே போல் சத்திய ஞானியை குருவாகக் கொண்ட சரவணமுனிவர் என்பவர், சிரகிரி வரலாற்றை எழுதினார். அப்போது அவருக்கு முருகப்பெருமான் காட்சியளித்ததாக கூறப்படுகிறது. இந்த முனிவரின் சமாதியும், மலையின் மேல் பகுதியில் இருக்கிறது. 

இத்தலம் உருவான வரலாறு என்று புராணங்கள் சொல்வது :

அனந்தன் என்ற நாகத்திற்கும், வாயுதேவனுக்கும் இடையே ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி ஏற்பட்டது. 

அப்போது பாம்பானது மேரு மலையை இறுகச் சுற்றிக் கொள்ள.. வாயு பகவானோ தனது முழு பலத்தோட மேரு மலையோட இண்டு இடுக்கள்ளெல்லாம் புகுந்து புறப்பட…‌மேரு மலை உடைந்து பல பகுதிகளாகப் பிரிந்து பல இடங்களில் விழுந்தது. 

இதில் மலையின் சிகரப்பகுதி, பூந்துறை என்ற இடத்தில் விழுந்தது. 

அந்த இடமே சென்னிமலை. 

இந்த ஊருக்குச் ‘சிரகிரி, புஷ்பகிரி, மகுடகிரி’ போன்ற பெயர்களும் உண்டு.

சென்னிமலை முருகப்பெருமான் ஆலயம்

இந்த மலையின் ஒரு பகுதியில் காராம் பசு ஒன்று, தினமும் பால் சொரிய விடுவதை, அந்த பசுவின் உரிமையாளர் கண்டார். இதையடுத்து அவர் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தார். 

அப்போது பூரண முகப்பொலிவுடன் முருகப்பெருமானின் சிலை கிடைத்தது. 

அந்த விக்கிரகத்தின் இடுப்பு வரை நல்ல வேலைப்பாடுடனும், முகம் அற்புத பொலிவுடனும் இருந்தது. ஆனால், இடுப்புக்குக் கீழ் பாதம் வரை சரியான வேலைப்பாடு இல்லாமல் கரடு முரடாக இருந்தது. 

அதை ஒரு குறையாக எண்ணி, அந்தப் பாகத்தையும் சிறந்த சிற்பியைக் கொண்டு உளியால் சரி செய்ய முயன்றபோது அந்தச்  சிலையிலிருந்து ரத்தம் கொட்டியதாகவும், இதனால் அதே நிலையில் சென்னிமலையில் அந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் இன்னொரு வரலாற்றுச் செய்தி கூறுகிறது.

இதெல்லாவற்றையும் விட கலியுகக் கடவுள் கந்தன்  12-02-1984 அன்று அதாவது இன்றைக்கு 39 ஆண்டுகளுக்கு முன்பு.. 1984 ல் நிகழ்த்திய ஒரு அதியற்புத நிகழ்வைப் பார்ப்போம் வாங்க.

வேட்டுவபாளையம் பூசாரி அவர்கள் கனவில் வந்து காங்கேயம் எருதுகள் கொண்ட இரட்டை மாட்டு வண்டி பூட்டி, சென்னிமலை 1320 திருப்படிகள் மூலமாக வரச் சொன்னதின் பேரில் நடந்த சம்பவம் இன்றளவும் இந்தக் கலி முத்திய காலத்திலும் ஒரு அதிசய நிகழ்வு.


காளை மாடுகளைச் சென்னிமலையை அடுத்த முத்தூர் துரைசாமிக் கவுண்டர் கொடுக்க.. 

விராலிக்காட்டூர் கோபால்சாமிக் கவுண்டர் கொடுக்க..‌ சாட்டையை இன்னொரு‌ பக்தர் வழங்க..

12.02.1984 காலை 7.30 மணிக்கு அந்த முருகன் அருள் பெற்ற வண்டியை ஓட்ட வந்தவர் பச்சை வேட்டி மஞ்சள் துண்டு அணிந்த 60 வயதான பெருந்துறை சிவன்மலைக் கவுண்டர்.


இது போன்ற நிகழ்வுகள் முன்னெப்போதும் நடைபெறாத நிலையில்..‌ இந்த நிகழ்வுக்கு அனுமதி வழங்க முதலில் மிகவும் தயங்கிய ஈரோடு மாவட்ட அன்றைய ஆட்சியர் திரு. ராஜாராமன்.. துணை ஆட்சியர் திரு. சந்திரப் பிரகாஷ் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. அப்பாதுரை மற்றும் அந்த வட்டார முக்கியப் பிரமுகர்கள் உட்பட சுமார் ஆறு லட்சம் மக்கள் பிரமிப்புடனும்.. மகிழ்ச்சியுடனும் கண்டு களித்த அந்த விநோத நிகழ்வில்..

அரோரா கோஷங்களுக்கு இடையில் சற்றும் மிரளாமல் படிகளில் ஏறிய அந்தக் கம்பீரமான காளைகள்..‌ சரியாக 46 நிமிடங்களில் 1320 படிகளையும் ஏறி திருமுருகன் சந்நிதியின் முன் வண்டியைக் கொண்டு சென்று நிறுத்தின .

இந்த அபூர்வ நிகழ்வை மாலை முரசு கோவைப் பதிப்பு “ 6 லட்சம் பேர் கண்டு களித்த ஆபூர்வ நிகழ்வு”  என்று கொட்டை எழுத்துக்களில் முதல் பக்கச் செய்தியாக அப்போது வெளியிட்டது.

அதோடு தி ஹிந்து.. இண்டியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஆங்கில நாளிதழ்களும்.. தினமணி தினத்தந்தி போன்ற தமிழ் நாளிதழ்களும்.. இதயம் பேசுகிறது.. தேவி போன்ற தமிழ் வார இதழ்களும் இச் செய்தியை வெளியிட்டன.

Press Trust of India செய்தி நிறுவனமும் இந்த நிகழ்வை வெளியிட அகில இந்திய அளவில் இந்த அபூர்வ நிகழ்வு மக்களைச் சென்றடைந்தது.. பேசு பொருளாக ஆனது.

கலியுகத் தெய்வம் கந்தா நீயே ! கருணையின் விளக்கமும் கடம்பா நீயே !

No comments:

Post a Comment