Tuesday, 14 November 2023

எண்கண் முருகன் கோவில்.


படைப்புத் தொழிலுக்கு அடிப்படையான ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருள் என்ன என்று முருகன் படைப்புக் கடவுளான பிரம்மனைக் கேட்க.. பொருள் முழுவதையும் சொல்லத் தெரியாமல் பிரம்மா விழிக்க.. 

முருகன் பிரம்மனைச் சிறையில் அடைத்து விட்டுப் படைப்புத் தொழிலைத் தானே செய்யத் தொடங்குகிறார்.

மனம் வருந்திய பிரம்மா தன் எட்டுக் கண்களாலும் உருக்கத்துடன் முருகப் பெருமானையும்..‌தன் தொழிலைத் தன்னிடமே திருப்பித்தர முருகனிடம் சொல்ல வேண்டும் என்று சிவபெருமானையும் வேண்டுகிறார் .

சிவனும் பிரம்மா‌ அவருடைய வேலையைச் செய்ய விட்டு விடும்படி முருகனிடம் சொல்ல.. முருகன் மனமிரங்கி பிரம்மாவுக்கு இந்தத் தலத்தில் பிரணவ உபதேசம் செய்ததால் எண்கண் எனப் பெயர் பெற்றது என்று ஒரு புராண வரலாறு.

சிக்கல்.. எட்டுக்குடி மற்றும் எண்கண் - இந்த மூன்று திருத்தலங்களிலும் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் ஆறுமுகப்பெருமான் சிலையானது ஒரே சிற்பியால் முத்தரசன் என்ற சோழ மன்னன் காலத்தில் வடிவமைக்கப்பட்டதாம்.

 இந்த சிலையை வடித்த சிற்பி முதலாவதாக சிக்கல் முருகன் கோவிலில் சிலை வடித்த போது மிகவும் அழகாக அமைந்து விடவே.. இம்மாதிரியாக வேறொரு சிலையை அந்தச் சிற்பி வடிக்க கூடாது எனக் கூறி முத்தரச சோழன் சிற்பியின் வலது கை கட்டைவிரலை தானமாக பெற்றதாகக் கூறப்படுகிறது.

வலது கையின் கட்டைவிரல் இல்லாத சிற்பி மீண்டும் எட்டுக்குடியில் முருகன் சிலையை வடித்ததை அறிந்த முத்தரச சோழன் சிற்பியின் இரு கண்களையும் தானமாக பெற்றுக் கொண்டதாகவும், மேலும் வலது கை கட்டை விரல் இல்லாமலும் இரு கண்களும் இல்லாத சிற்பியை அசரீரியாக எண்கண் முருகன் சிலை வடிக்க இறைவன் பணித்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

எண்கணில் முருகனின் சிலையை சிற்பி செதுக்கிக் கொண்டு இருக்கும் போது, ஒரு பெண்ணின் உதவியை நாடினார். 

அந்தப் பெண்ணும் உதவி செய்கிறார்.

அந்த நிலையில், அந்தப் பெண்ணின் ஒரு விரலைத் தவறுதலாக வெட்டி விட , இரத்தம் வெளியேறத் தொடங்கியது. 

இந்த இரத்தத் துளிகள் அவரது கண்களில் விழுந்து அவரது கண்களை குணப்படுத்தியது. சிற்பி பார்க்கமுடிவதை உணர்ந்தவுடன், ஆச்சரியத்துடன் "எங்கண்!" என்று ஆச்சரியத்திலியும் சந்தோஷத்துலியும் பெரிதாகச் சத்தம் போட அந்த “என்கண்” என்பதே எண்கண் என்று மாறிப் போச்சுன்னு சொல்றவங்களும் இருக்காங்க.

இது உண்மையாகவும் இருக்கலாம்.

தனது பக்தர்களுக்கு எத்தனை சோதனைகளைக் கொடுத்தாலும்.. ஒரு கட்டத்தில் அவர்களை ஓடோடி வந்து காத்து… அவர்கள் பெருமையை உலகறிய வைத்து விடுகிறான் இறைவன் என்பதற்கு நிறைய நிறையச் சான்றுகள் உள்ளன.

இந்த ஆலயத்தில் சிலை வடித்த சிற்பிக்கு இறைவன் கண் கொடுத்ததால் எண்கண் என்று இவ்வூர் பெயர் பெற்றதாகவும் சொல்றாங்க.

இரண்டு கண்களும் வலது கை கட்டை விரலும் இல்லாமல் சிற்பி வடித்த சிலை தான் இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள். 

No comments:

Post a Comment