திருவாரூர் மாவட்டத்தில் சப்த விடங்கத் தலங்களான திருவாய்மூருக்கும், திருக்குவளைக்கும் இடையே அமைந்துள்ளது எட்டுக்குடி .
அருணகிரிநாதரால் பாடப்பட்ட தலங்களில் இதுவும் ஒன்று.
இந்தக் கோவில் மூலவர் ஆனந்தவல்லி சமேத சௌந்தர நாயகன்.
ஆனால் சிவன் மூலவராக இருக்கும் எத்தனையோ திருத்தலங்களில் முருகனே வழிபாட்டு நாயகனாக இருப்பது போல இங்கும் முருகன் தான் முக்கிய வழிபாட்டு நாயகனாக இருக்கிறான்.
எட்டுக்குடியில் உள்ள முருகன் வள்ளி தெய்வானை சகிதம் காட்சி தருகிறார்.
இந்த முருகன் சிலை குறித்த வரலாறு மிகவும் சுவாரசியமானது.
நாகப்பட்டினம் அருகே உள்ள பொருள் வைத்த சேரி என்ற ஊரில் முருக பக்தராகிய ஒரு சிற்பி வாழ்ந்து வந்தார். எப்போதும் சரவணபவ என்று சொல்லிக் கொண்டே இருந்த அவர் ஒரு அழகான உயிரோட்டம் நிறைந்த முருகன் சிலையை வடித்தார்.
அதோடு இதேபோல் மற்றொரு சிலையை அந்தச் சிற்பி வடித்து விடக்கூடாது என்ற ஒரு குரூர எண்ணத்தில் அந்தச் சிற்பியின் வலது கை கட்டை விரலை வெட்டி விட்டு விட்டான்.
ஆனால் முருகனின் திருவுளமோ வேறு விதமாக இருந்ததை அந்தச் சிறுமதி படைத்த அரசன் அறியவில்லை.
கட்டை விரல் வெட்டப்பட்ட நிலையில் அருகில் இருந்த கிராமத்திற்குச் சென்ற சிற்பி அங்கு தன் கட்டை விரல் இல்லாமலேயே முருகப் பெருமானை வேண்டி மீண்டும் ஒரு சிலையை உருவாக்கினார். அச்சிலை மிக உயிர்த்துடிப்புடன் அமைந்தது.
தெய்வீகமான அந்தச் சிலையில் இருந்து ஒளி வீசத் தொடங்கியது.சிற்பம் முழுவதுமாக முடிவதற்குள் அச்சிலைக்கு உயிர் வந்து சிலையில் முருகன் அமர்ந்திருக்கும் மயில் பறக்கத் தொடங்கியது.
அதை கண்ட மன்னன் அந்த மயிலை “எட்டிப்பிடி” என உத்தரவிட்டான். கூடியிருந்த மக்களும் அப்படியே “பிடி பிடி” என்று கூக்குரல் போட அந்த மயில் அங்கேயே சிலையாக நின்று விட்டது.
அது முதல் எட்டிப் பிடி ஊர் என்று பொதுவாக மக்கள் அந்த ஊரைக் குறிப்பிடத் தொடங்க.. அந்த “எட்டிப் பிடி “என்ற சொற்கள் அந்த ஊரின் பேராகிப் போயிற்று .
அதுதான் காலப்போக்கில் எட்டுக்குடியாக மாறிவிட்டது என்று செவி வழிக் கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.
சூர சம்ஹார தலம்
திருமுருகன் பூமியில் வந்து உதித்ததே ஆணவம் மிகுந்த சூரபத்மனை அடக்கத்தான் .
அதனால் இங்கு முருகன் மிகவும் உக்கிரமாக இருக்கிறான். அவனுடைய கோபத்தைத் தணிக்கும் வகையில் தினந்தோறும் இங்கு பாலபிஷேகம் செய்யப்படுகிறது. சூரசம்ஹாரம் செய்ய முருகன் இத்தலத்தில் இருந்தே புறப்பட்டதாகத் தல புராணம் கூறுகிறது.
அதனால் இந்தத் தலம் ஆதி படை வீடு என்றும் பள்ளிப்படைத் தலம் என்றும் அழைக்கப்படுகிறது.
பொதுவாகப் படை வீடு என்றால் அரசர்கள் போர் செய்யும் போது அமைக்கப்படும் தற்காலிகக் குடியிருப்பு அதாவது temporary tents.
பிரகாரத்தில் முருகனுடன் சூரபத்மன் வதத்திற்குத் துணையாக சென்ற 9 வீரர்களின் திருவுருவங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது இதற்குச் சான்றாக உள்ளது.கந்த புராணத்தில் கூறியுள்ளபடி இங்கு அருள்பாலிக்கும் திருமுருகன் சூரபதுமனை அழிப்பதற்கு முன்பாகத் தேவேந்திரனாகிய மயில் மீது ஏறி அமர்ந்துள்ள மூர்த்தமாகக் காணப்படுகிறார்.
பொதுவாக முருகனை எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் குழந்தை முருகனை.. கேட்கவே வேண்டாம்..அந்தக் குழந்தை முருகனை இத்தலத்தில் பயந்த சுபாவம் கொண்ட குழந்தைகள் வழிபட அல்லது அந்த முருகனின் கதைகளைக் கேட்டு வர அவர்களுக்கு மனோ தைரியம் படிப்படியாக வந்து விடும் என்று இந்த வட்டாரத்தில் நம்புகிறார்கள் என்கிறார் அந்தப் பகுதியைச் சேர்ந்த எங்கள் நண்பர் ஒருவர்.
ஏனெனில் “ இந்தப் பாலகனா என்னைப் வெல்லப் போகிறான்?” என்று எந்த முருகனைப் பற்றிச் சூரபதுமன் ஏளனமாக நினைத்தானோ… பேசினானோ அந்தப் பாலகன் தான் அம்புறாத் தூளியில் இருந்து அம்பை எடுக்கும் கோலத்தில் இந்த எட்டுக்குடிக் கோவிலில் கம்பீரமாக .. மூலவராக இருக்கிறார்.கந்த சஷ்டி விழா எவ்வளவு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறதோ அதே அளவு கேதாரகௌரி விரதமும் இந்தக் கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
கதாரகௌரி விரதம் தோன்றிய தலம் என்று கூடச் சொல்லப்படுகிறது .
வான்மீகர் ஜீவசமாதி
வடமொழியில் இராமாயணம் பாடிய வால்மீகி முனிவர் தான் தென்னகத்தில் வான்மீகர் என அழைக்கப் படுகிறார்… வான்மீகரைப் பற்றி சித்தர் போகர் பாடியுள்ளதால் இவரும் சித்தர் வரிசையில் இடம் பெறுகிறார் என்றும் கூறுகிறார்கள் .
கலியுகக் கடவுள் கந்தனைப் பணிவோம் !
ஓம் சரவணபவ !