Saturday, 16 May 2020

புலம்பெயர் தொழிலாளர்கள்

        அப்..பா...எம்முட்டுத் தூரம் நடக்கறது..முடியல்லே… ஆனா நடந்து தான் ஆகணும்..

     இங்க வேலைக்குன்னு வந்தப்பக் கொஞ்சம் பயம் இருந்தாலும்… சமாளிச்சிடலாம்னு தான் நெனச்சேன்…

      கெடச்ச மொதலாளியும் பரவால்ல…ஓரளவு தன்மையாத்தான் இருக்காரு...சாப்பாடு.. இருக்க எடம் தந்துட்டாரு...கெடக்கிற சம்பளத்துல.. டீ..அப்புறம் பீடி செலவு போக அப்படியே பல்லக் கடிச்சிக்கிட்டு..கொஞ்சம் கொஞ்சமாச் சேத்து…ஒவ்வொரு வாட்டி ஊருக்குப் போகும் போதும் பத்தாயிரம்…பதினையாயிரம்னு கொண்டு வீட்ல கொடுக்கும்போது ராஜ உபசாரந்தான்…

     இப்படி ஏழெட்டு வருஷம் ஓட்டிட்டேன்... என்னதான் கஷ்டமாக இருந்தாலும் நம்ம குடும்பத்து ஆட்கள் சந்தோஷப்படும் போது..அதுல ஒரு சொல்ல முடியாத சொகமும்.. நிம்மதியும் இருக்கத்தான செய்யுது..?

     ஆனாக்க இந்த வாட்டி அப்படியில்லே…

       திடீர்னு கொரோனான்னு ஒண்ணு வந்து ஓவர் நைட்ல பூகம்பம் பொரட்டிப் போட்டா மாதிரி எல்லாம் அப்படியே மாறிப்போச்சு.. திடீர்னு கம்பெனிய மூடிட்டாங்க.. என்னவோ லாக்டவுன்னாங்க.. நாலு நாள் கூடச் சமாளிக்க முடியல்லே… வீட்டு ஓனர் வீட்டக் காலி பண்ணச் சொல்றாங்க.. பொண்டு புள்ளகள வச்சுருக்கறவங்க தவிச்சுப் போய்ட்டாங்க…நல்லவேள.. எனக்குக் கல்யாணம் ஆகல..

      எங்க போய்த் தங்கறதுன்னு ஒருபக்கம் அலமோதுனா...சாப்பிட ஒரு டீக்கட கூட இல்ல…

     மவராசங்க… யார் யாரோ சாப்பாடு குடுக்கறாங்க..

     ஆனா இதெல்லாம் எத்தினி நாளைக்கு நடக்கும்…?

     எங்களப் போன்ற எல்லாருமா

சேந்து பேசி முடிவெடுத்து நடக்க ஆரம்பிச்சோம்…

     சில பேர்ட்ட சைக்கிள் இருந்துச்சு…அதுல பச்சப்பிள்ளைங்க...புள்ளத்தாச்சி பொம்பளகள ஒக்காரவச்சு ஓட்டிக்கிட்டு வந்தாங்க…வழில போலீஸ்காரங்க கேள்வி மேலக் கேள்வி கேப்பாங்க… அப்புறம் அவுங்களே பாவம்னு விட்ருவாங்க..

      இப்படிப் பத்து நாள் நடந்தாச்சு.. இப்ப முடியலே…வலிக்குது காலு...ஒடம்பு…மனசு எல்லாம்.. ஊர்போய் எப்படா சேர்வம்னு இருக்கு…

      இதுல கையில இருக்குற கொஞ்சப் பணமும் கரையுதேங்குற கவல… அதுக்காகத் தண்ணியத்தான் அதிகமாக் குடிச்சுக்கிறேன்…

     இதுல இன்னிக்கு ஒரு டீக்கடைல டீக்குடிக்க நின்னப்ப டிவில ஒண்ணு பாத்தேன்…எங்கள மாதிரி வெளி நாட்டுல வேல செய்ற தொழிலாளர்களக் கூட்டியாரக் கவர்ன்மெண்ட்டு ஏராப்ளேன் ஏற்பாடு செய்யுதாம்...அப்ப ஏன் அதே கவர்ன்மெண்ட்டு நம்ம நாட்டுக்குள்ளேயே ஊருவிட்டு ஊரு வந்து வேல செய்ற எங்களக் கண்டுக்கல… நாங்களும் ஒழையா ஒழச்சுக் கவர்ன்மெண்ட்டுக்குப் பல வகையில ஒதவுறமுல்ல…? 

     ஆனா அவுங்களும் பாவந்தான்.. இந்த நோயி புரியாத புதிரா இருக்குதாம்...அதோடப் போராடத்தான் இந்த…அது என்னது… லாக்டவுனாம்…

ஆனாலும் மனசு அடங்கல… எங்களயும் அவுங்க வேலையோட வேலையாக் கொஞ்சம் கவனிச்சிருக்கணும்..ஒதவியிருக்கணும்...தங்கறதுக்காவது ஏதாவது ஏற்பாடு பண்ணியிருக்கணும்…

இஸ்கோலு...காலேஜு...கல்யாண மண்டபங்கள் இப்படி எத்தன இருக்கு ? அதுல தங்கவாச்சும் ஏற்பாடு பண்ணியிருக்கலாமுல்ல…

அட...ஒரு நாலஞ்சு… நாலஞ்சு மொதலாளிகளாச் சேர்ந்தாவது எங்களுக்கு ஒரு ஒதவி செஞ்சுருக்கலாமுல்ல...அவுகளுக்குத் தானே நாங்க ராவாப்பகலாப் பாடுபட்டோம்…

    பெரீய மொதலாளிகள்ளாம் சேர்ந்து ஒரு சங்கம் வச்சுருக்காங்களே…அது இன்னாது….ஆங்...லயன்ஸ் கிளப்பு...ரோட்டரி…அப்டீன்னெல்லாம்….அதுங்க மூலம் எங்களுக்கு ஏதாவது செஞ்சகருக்கலாமில்லே...ஒண்ணஞ் செய்யல

    இன்னிக்குக் காலைல பாத்தீங்கன்னா எங்களோட நடந்து வந்த ஒரு புள்ளைக்குப் பிரசவ வலி வந்து… புள்ளையே பொறந்துருச்சு…

      எல்லாரும்

பதறிப்போய்ட்டோம்…  கொஞ்ச நேரம்… ஆள் நடமாட்டமே இல்லாத… நாங்க ஒரு பத்து..இருபது பேர் மட்டுமே நடந்து போய்க்கொண்டு இருக்கறப்ப இப்படி நடந்தா…? 

     வெலவெலன்னு ஆயிருச்சுங்க.. கொஞ்ச நேரம் கழிச்சு ஒவ்வொருத்தரா நடக்க ஆரம்பிக்க அந்தப்பொண்ணும் தட்டுத்தடுமாறி கையில பச்ச மண்ணோட நடக்க ஆரம்பிச்சுருச்சு…

      இது என்னடா கடவுளோட சோதனைன்னு….ஆங்….அய்யோ...கல்லு ஏதோ தடுக்கீறுச்சு… விழுந்துட்டேன்.. பக்கத்துல இருந்த ஒரு பெரிய கல்லுல மண்ட பட்டு ரத்தம் ஆறா ஒழுகுது...கூட இருந்தவங்களும் பதறி ஓடி வ...ரா...ங்..க.. எனக்கு நென..வு தப்...புது...மயக்கமா இருக்கு..! அப்...படி..யே…

   சுத்தி நிக்கிறவங்க பேசுறது லே….சாக் காதுல விழுது… 

    " அடி பலம்மா..இருக்கு.. நம்ப முடியாது… இப்ப என்னா பண்றது…"

     அதுக்கு மேல ஒண்ணுமே வெளங்கலே எனக்கு…

     ' ஐய்யோ…எம்பணம்...எங்க வீட்டுக்காக நானு கஷ்டப்பட்டுச்

சம்பாதிச்ச பணம்..'

     என் முன்னாடி ஒரே இருட்ட்ட்ட்டா…..

  

         இது கதையல்ல…இன்று நமது பாரதத் திருநாட்டில் நடக்கும் நடப்பு….மிகமிக மிகமிக மிகமிக வேதனை ஏற்படுத்தும் நடப்பு ..

    மீண்டும் ஒரு மிகப்பழையக் கேள்வி ஒன்று நிற்கிறது என் முன்..

     " இந்த உலகம் வசதியானவர்களுக்கு மட்டுந்தானா ????? "

    


No comments:

Post a Comment